கடவுளை வணங்கினால் காசு கிடைக்குமா?
கடவுளைக் கும்பிடுபவர்கள் இரண்டு வகை. பயன் கருதாமல் கடவுளை வணங்க வேண்டும். தேவைகளின் பட்டியலைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குப் போகக்கூடாது. இது சிலரின் வாதம்.
கடவுள் நம் பிரார்த்தனைகளுக்குக் காது கொடுப்பார். நாம் கேட்பதெல்லாம் கொடுப்பார். எனவே, தேவைகளைக் கேட்டால் தவறில்லை. இது இன்னும் சிலரின் வாதம்.
இந்த இரண்டில் எது சரி? முதலில், கடவுளிடம் பிரார்த்திப்பது என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். கடவுள் என்று கூறினாலும் சரி, இயற்கை என்று கூறினாலும் சரி, எதுவாக இருந்தாலும், அது ஒரு மகத்தான சக்தி.
காற்றில் கலந்து வரும் ஒலியலைகள், வானொலியை சரியான அலைவரிசையில் வைக்கும் போது ஒலிவடிவம் பெறுகிறதல்லவா? அந்த சக்தியும் அப்படித்தான். அந்த சக்தியைப் பெறவேண்டி நம் மனம் ஒருமுகப்படும்போது, அந்த சக்தி நமக்குள் நிறைகிறது. இதைக் கடவுள் என்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதன் துணை கிடைக்கும்.
ஏனென்றால், இந்த சக்தியைப் பெறுவதற்கான தகுதி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது. அந்த உள்முக ஆற்றலை வளர்த்துக்கொள்ளாமல் வீண் பொழுதுபோக்குகளில் நேரம் கழிக்கும்போது நம் ஆற்றல் வீணாகிறது; பலமிழக்கிறது.
பொதுவாகவே, நமக்கு ஏதாவது வேண்டும் என்று எப்போது தோன்றுகிறது? நண்பர்கள் வீட்டுக்குப் போகிறோம். புதிய கார் வாங்கியிருக்கிறார்கள். நமக்கும் வாங்குகிற ஆசை வருகிறது. அப்போது என்ன செய்கிறோம் தெரியுமா? அவர்கள் வருமானத்தையும் நம் வருமானத்தையும் ஒப்பிடுகிறோம். “அவனுக்கு மாமனார் உதவியிருப்பார். நம்மால் முடியாது” என்று நாமே முடிவுக்கு வருகிறோம்.
அப்படியானால், கார் வாங்கும் ஆசையின் குரல் கேட்டு நமக்கிருக்கும் ஆற்றல் மேலெழும்போது, நாமே அதனைக்குட்டி, தலையில் தட்டி உட்கார வைத்துவிடுகிறோம்.
இந்தத் தடையைப் போடாமல், “கார் வாங்க வேண்டும்” என்ற உள்முக ஆசையை, நம்மைவிடப் பெரிய சக்தி ஆக்கிரமிக்கும் விதமாகத் திறந்துவிடவேண்டும். இதைத்தான் பிரார்த்தனை என்கிறார்கள்.
அப்படியா? கடவுளிடம் போய் கார் வேண்டும். காசு வேண்டும் என்று கேட்டால் கிடைக்குமா? உங்களுக்குள் இந்தக் கேள்வி எழுகிறதுதானே!
உண்மையில் இறையாற்றல் அல்லது பிரபஞ்ச சக்தியிடம், நீங்கள் எதையாவது கேட்டுப் பிரார்த்தனை செய்தால் நீங்கள் கேட்டதைத் தருவதில்லை. ஆனால் தன்னையே தருகிறது.
உங்களுக்குத் தரப்படுகிற சக்திக்கு நீங்கள் செயல்வடிவம் தருகிறபோது, அது காசாகவோ, காராகவோ எதுவாகவோ மாறுகிறது.
எனவே, உங்களுக்குள் அந்தத் தேடல் முற்றுகிறபோதுதான் உங்களையும் மீறிய சக்தியை நீங்கள் வேண்டுகிறீர்கள். அந்தத் தேடல் ஆழமானதாக இல்லாதபோது, உங்கள் எல்லைகளுக்குள்ளேயே யோசித்து, அது சாத்தியமில்லை என்று நீங்களே கைவிட்டு விடுகிறீர்கள்.
ஒன்று உங்களுக்கு வேண்டுமென்று ஆழமாக ஆசைப்படும்போது, உங்கள் ஆழ்மனதில் முதல் வாய்ப்பின் வாசல் திறக்கிறது. அந்த எண்ணம் தீவிரப்படும்போது, அதனை அடைவதற்குரிய சக்தி உங்களுக்குள் நிரம்புகிறது. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போது அந்த விருப்பம் நிறைவேறுகிறது. சில வசதிகளை வேண்டும்போது, அந்த ஆசை மேல்மனதில் நின்றுவிட்டுக் கலைகிறதா? ஆழ்மனதில் சென்று சேர்கிறதா என்று பாருங்கள். ஆழ்மனதில் சென்று சேர்கிற ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.
எனவே, தேவைகளை ஒரு தவம்போல மேற்கொள்ள வேண்டும். அவை வரமாக வந்து வாய்க்கும். உலகில் இல்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். வசதியானவர்கள் சிலர்தானே இருக்கிறார்கள். இது ஏன்? இந்தக் கேள்விகளை வள்ளுவரிடம் கேட்டபோது, “சிலர்தான் தவம் செய்கிறார்கள். அதுதான் காரணம்” என்றார்.
“இலர்பல ராகிய காரணம், நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்” என்பது திருக்குறள்.
தவம் என்றால், காட்டில் போய் அமர்ந்து தவம் செய்வது மட்டுமல்ல. ஓர் இலட்சியத்தை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு அதை உறுதியோடு வேண்டுவதும்தான்.
எனவே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களைக் கேளுங்கள். உறுதியோடு கேளுங்கள். நிச்சயம் கிடைக்கும்; பாருங்கள்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)