எழுச்சிப் பயணத்திற்கு எரிபொருள் உள்ளதா?
இரு சக்கர வாகனம் ஒன்றுக்கான சமீபத்திய விளம்பரம் ஒன்று. பெட்ரோல் பங்கில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, “அது குடுப்பா” என்பார். “எதை” என்பார் பெட்ரோல் பங்க்காரர். அதாவது, எரிபொருளையே மறந்துவிடும் அளவுக்கு எரிபொருள் சேமிக்க இந்த இரு சக்கர வாகனம் கை கொடுக்கிறதாம்.
உண்மையில், வாழ்க்கை என்கிற பயணத்தில் வேகமாகவும் தடையில்லாமலும் செல்ல எது நமக்கு எரிபொருள்? எண்ணங்கள்தான்! எண்ணங்கள் என்கிற எரிபொருளில் கலப்படம் இல்லாமல் இருந்தால்தான் இலட்சியத்தைத் தொடும் வேகத்தோடு வாழ்க்கை வாகனம் ஓடும்.
பல பேரும் வாழ்க்கையில் எட்ட வேண்டிய இலட்சியத்தை எட்டாததற்கு என்ன காரணம்? செயலுக்குத் தரும் முக்கியத்துவத்தை எண்ணங்களுக்குத் தராததுதான். யோசிக்காமல் செயல்பட்டுவிட்டு, செயல்பட்டதைப் பற்றியே யோசிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
எமர்சன் சொன்னார், “எல்லாச் செயல்களுக்கும் காரணம் மூதாதையர் எண்ணங்கள் தான்” என்று. நம்மில் பலர், எண்ணிய வேகத்திலேயே செய்துமுடிக்க நினைத்து அவசரப்படுகிறோம். அதனால் என்னாகிறது? எண்ணம் வலிமையாக வேரூன்றாமலேயே செயல்வடிவத்திற்கு வருகிறது.
நல்ல எண்ணங்களால் மனதை நிரப்பிக் கொள்ளுங்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். அதற்கென்று வலிமையான வழிமுறை ஒன்றும் இருக்கிறது.
காலை விழித்தெழுந்தவுடன் உங்களுக்கு நீங்களே உற்சாகம் கொடுங்கள். எப்படியெல்லாம் உற்சாகமாக இருக்கப்போகிறீர்கள் என்றும், எத்தகைய வெற்றிகளை எட்டப் போகிறீர்கள் என்றும் உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள்.
1. இன்று புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பேன். புதிய ஒப்பந்தங்களை நிச்சயம் பெறுவேன்.
2. இன்று சிக்கலான அலுவல்களையெல்லாம் மிக எளிதில் முடிப்பேன்.
3. பழைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை தந்து அவர்களுடனான உறவைப் புதுப்பிப்பேன்.
இதற்காக 5 நிமிடங்களை செலவழியுங்கள். அதேபோல இரவு உறங்கப்போவதற்கு முன் அந்த நாளில் பெருமை கொள்ளும்படியாக நீங்கள் செய்துமுடித்த செயல்களை எல்லாம் உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள். அப்போது தோன்றும் மெல்லிய உற்சாகத்தை உங்கள் மனதுக்குப் பரிசாகக் கொடுங்கள். உதாரணமாக,
1. இன்று பேரம் பேசி என் நிறுவனத்திற்கு நல்ல ஆதாயம் ஈட்டினேன்.
2. இன்று வாடிக்கையாளர்களிடம் பொறுமையாகவும், திறமையாகவும் பேசி அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றேன்.
3. என்னிடம் உதவிகேட்டு வந்தவர்களிடம் பரிவோடு நடந்துகொண்டேன்.
அந்தந்த நாளில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை இப்படி நினைவூட்டிக் கொள்ளலாம்.
இதற்கும் ஐந்து நிமிடங்கள் போதும். ஒவ்வொரு விடியலும் உற்சாகத்தோடு தொடங்கும்.
ஒவ்வொரு விண்மீனும் உற்சாகத்தோடு முளைக்கும். சில நாட்களில், எதுவுமே சரியாக நடப்பதில்லை. அதை மனதுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கு போலச் சொல்லுங்கள். எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் முடிவது நல்லதல்ல. எனவே, அந்த வெற்றிகளை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்திருப்பதாய்ச் சொல்லிவிட்டு நிம்மதியாக உறங்குங்கள். உங்களுக்குள் நல்ல எண்ணங்களும் நேர்மறையான நம்பிக்கைகளையும் நிரம்பிக் கிடக்கும்போது இலட்சியப் பயணத்தை மிக எளிதாக மேற்கொள்வீர்கள். முயன்று பாருங்களேன்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)