நீங்களும்தான் வசீகரிக்கிறீர்கள்!
மற்றவர்களை வசீகரிப்பவர்கள்தான் மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்பது பொதுவான கருத்து. உண்மையில், ஒவ்வொருவரிடமும் வசீகரிக்கிற ஆற்றல் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சராசரி மனிதர்கூட குறைந்தது நான்கு பேரையாவது வசீகரித்திருப்பார்.
வசீகரம் என்பது மாயமோ மன வசியமோ அல்ல. இன்னொரு மனிதர்பால் உங்களுக்கிருக்கும் நல்லெண்ணம். ஒரு மனிதரின் நலனை நீங்கள் விரும்பினால் அந்த மனிதர் அவரையும் அறியாமல் உங்கள் பால் ஈர்க்கப்படுகிறார்.
வீடுவீடாக ஏறியிறங்கும் பல விற்பனைப் பிரதிநிதிகளிடம் வீட்டில் இருக்கும் சிலர், விரட்டியடிக்காத குறையாக எரிந்துவிழுவார்கள். ஆனால், ஒரு சில பிரதிநிதிகளை மட்டுமே உள்ளே அழைத்துப் பேசுவார்கள்.
அந்தப் பிரதிநிதியிடம் இருக்கிற வசீகரத்தன்மைதான் அதற்குக் காரணம்.
இந்த வசீகரத் தன்மை வளர முதல் தேவை, சுய மதிப்பீடு. உங்களை நீங்களே மதிப்பிட்டு, உங்கள் பணியில் காதலாகி ஈடுபட்டு, உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்வது.
இரண்டாவதாக, ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் அனுப்பும் அதிர்வுகள் அதன் அலைகளின் வீரியத்தைப் பொறுத்தே காரியம் அமையும். அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால், அவர் எச்சரிக்கையாகிவிடுகிறார். மாறாக, அவருக்கு உதவலாம் என்று உண்மையாகவே கருதினால் உங்களிடம் அவர் நேசக்கரம் நீட்டுகிறார்.
வசீகரிப்பதற்குத் தோற்றமோ, பதவியோ முக்கியம் இல்லை. மனநிலைதான் முக்கியம்.
ஒவ்வொருவரிடமும் யாராவது ஈர்க்கப்படுவார்கள். அந்த ஈர்ப்பின் அம்சத்தை விரிவுபடுத்தும்போதுதான் உங்கள் பலம் உங்களுக்கே தெரியும். “அகத்தின் அழகே அழகு” என்று பெரியவர்கள் இதைத்தான் சொன்னார்கள்.
விழிப்புணர்வோடு உங்கள் மன உணர்வுகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தி வந்தாலே போதும். உங்கள் வசீகரம் கூடுவதை நீங்களே உணர்வீர்கள்!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)