காலம் ஒரு காமிரா
“ஸ்மைல் ப்ளீஸ்”
“வாழ்க்கையும் புகைப்படக் கலையும் ஒன்றுதான்” என்று யாரோ, எங்கோ சொன்னார்கள். என்ன காரணமாம்? புகைப்படத்தில் முதலில் கிடைப்பது நெகடிவ். அதையே டெவலப் செய்கிறார்கள். எதிர்மறையான விஷயங்களை நமக்குச் சாதகமாக “டெவலப்” செய்து கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. எனவே புகைப்படக்கலை வாழ்க்கை இரண்டும் ஒன்றுதானாம்.
யோசித்துப் பார்த்தால் புகைப்படக்கலைக்கும் வாழ்க்கைக்கும் இன்னும் பல பொருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. புகைப்படம் சரியாக அமைவதற்கு காமிராவின் கோணம் மிக முக்கியம்.
எந்தக் கோணத்தில் காமிரா வைக்கப்படுகிறதோ, அந்தக் கோணத்தில்தான் காட்சி பதிவாகும்.
வாழ்க்கைகூட அப்படித்தான் ஒன்றைச் சரியான கோணத்தில் நாம் காணும்போதுதான் தெளிவான துல்லியமான காட்சி கிடைக்கிறது. தவறான கோணத்தில் அணுகும்போது காட்சிக் குழப்பம் ஏற்படுகிறது.
இரண்டாவது அம்சம், வெளிச்சம். இயற்கையான வெளிச்சம் இல்லாதபோது, செயற்கை வெளிச்சத்தை அமைத்துக்கொள்வதுபோல, வாய்ப்புகள் இயல்பாக அமையாவிட்டாலும் தேடிப்போய் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதுதான் வெற்றியாளனின் இயல்பு. இருக்கிற வெளிச்சம் போதுமென்று அவசரமாய்ப் புகைப்படம் எடுத்தால், மங்கலான படம்தான் கிடைக்கும்.
அதுபோல், “இருப்பதே போதும்” என்று சமாதானம் ஆகிவிடுகிற மனிதனுக்கு சாதனைகள் சாத்தியமில்லை. ஒரு விநாடியின் பதிவுக்காக எத்தனை மணி நேரங்களை முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்கிறார் புகைப்படக் கலைஞர்.
வெற்றி என்பதுகூட ஒரு விநாடி நேர சம்பவம்தான். அதற்கு முன் திட்டமிடுவதில்தான் சாதனை மலர்கிறது.
மூன்றாவது அம்சம், ‘பளிச்’சென மின்னும் ஃப்ளாஷ். இதனை மனிதனின் உள்ளுணர்வுக்கு ஒப்பிடலாம். ஒரு செயலைச் செய்ய எத்தனிக்கும்போது ‘பளிச்’சென்று மனதுக்குள் மின்னும் வெளிச்சத்தால் அந்தச் செயலுக்கே புதிய பொலிவு கிடைக்கிறது.
அதைவிடவும் முக்கியம், எப்போது ‘கிளிக்’ செய்கிறோம் என்பது. ஒரு குழந்தையைப் புகைப்படம் எடுக்க முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது, எப்போது, என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. கலவரமாக எல்லோரையும் சுற்றிச்சுற்றி பார்க்கும். ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் புகைப்படக் கருவிகள் அதன் பார்வையில் புதுமையாகத் தெரியும். அப்போது அதன் கண்களில் சின்னதாய் ஒரு மின்னல். அப்படியே திரும்பி அம்மாவைத் தேடும். காணாத கவலையில் உதடு பிதுக்கும். உடனே அம்மா குரல் கொடுத்ததும் குரல் வந்த திசை நோக்கிப் ‘பளிச்’சென்று சிரிக்கும்.
அந்தக் கவிதை நிமிஷங்களுக்காகக் காத்திருந்தால் காமிரா ஒரு காவியத்தை வடித்தெடுக்கும்.
வாழ்க்கையும் ஒரு குழந்தை போலத்தான்! எப்போது என்ன செய்யும்? யாருக்கும் தெரியாது. அதன் சாதகமான நேரததிற்காகக் காத்திருந்து, ‘சட்’டென்று செயல்படும்போது தான் செயல் சிறக்கிறது.
எடுத்த புகைப்படங்களிலேயே மிக அழகானதை லேமினேட் செய்து வைப்பது மாதிரி, நம் திறமைகளிலேயே மிகச் சிறந்த திறனை பராமரித்து, பலரும் பார்க்கும்விதமாய் வெளிப்படுத்த வேண்டும்.
இப்படி வாழ்க்கை அமையுமென்று சொன்னால் காமிரா முன்னால் மட்டுமல்ல… காலம் முழுவதுமேகூட, யாரும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சொல்லாமலேயே நம் இதழ்களில் புன்னகை இருந்து கொண்டேயிருக்கும்.
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)