சிரிக்கச் சிரிக்க
வாழ்க்கை சிறக்கும்
நாற்பதாண்டுகளுக்கு முன்னர், சிதம்பரம் பகுதியில் “ஹேப்பி நாராயணன்” என்றொருவர் இருந்தார். திருமண வீடுகளுக்கு அவரைப் பணம் கொடுத்து அழைப்பதுண்டு. அவர் சமையல் கலைஞரா? நாதசுவரக் கலைஞரா? இல்லை. சிரிப்புக் கலைஞர். கையில் கவுளி வெற்றிலை யோடு கல்யாண மண்டபத்துக்குள் நுழைவார் மனிதர். பத்துப் பதினைந்து பேராக உட்கார்ந்திருக்கும் இடத்தில் போய் மத்தியில் அமர்ந்து கொள்வார். வெற்றிலை போட்டுக் கொண்டே சிரிப்பார்.
மெதுவாக ஆரம்பித்து “கட கட”வென்று சிரிக்கத் தொடங்குவார். அருவிபோல், அலைபோல், சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். அந்த இடத்தில் இருக்கும் அத்தனைபேரும் விழுந்துவிழுந்து சிரிக்கத் தொடங்குவார்கள். கல்யாண மண்டபமே கலகலத்துப் போகும்.
மெல்ல நகர்ந்து பெண்கள் பக்கம் போய் சிரிப்பைத் தொடங்கி வைப்பார். அப்புறம் சமையல்கூடத்துக்குப் போய், கைவரிசையை, இல்லையில்லை… பல் வரிசையைக் காட்டுவார்.
இத்தனைக்கும் ஒரு சின்ன நகைச்சுவைத் துணுக்கைக்கூட அவர் சொல்லியிருக்கமாட்டார். மண வீட்டில் அனைவரும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிரிப்பு மனித உயிரின் இயல்பு என்பதைத்தான் வாழ்க்கையில் விளக்கினார் ஹேப்பி நாராயணன்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீனாவில் “ஜென் முனிவர்கள்” மூவர் “சிரிப்பு முனிவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் நம் ஹேப்பி நாராயணனுக்கு முப்பாட்டனார்கள் போல! ஊர் ஊராகப் போவது, நகரின் முக்கியப் பகுதியில் நின்று சிரிக்கத் தொடங்குவது. நகரையே சிரிப்பு மழையில் நனைத்துவிட்டு நகர்ந்து விடுவது. இதுதான் இவர்கள் வாழ்க்கை.
அந்த மூவரில் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். உடனிருந்த இருவரிடமும் ஒரு நிபந்தனை விதித்தார். “நான் இறந்தபிறகு என்னை அப்படியே எரித்துவிட வேண்டும். ஆடை மாற்றுவது, நீராட்டுவது போன்றதெல்லாம் கூடாது” என்றார். மரணம் நேர்ந்தது.
ஞானிகளல்லவா இரண்டு பேரும்! அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிதையில் கிடத்தப்பட்டது இறந்த முனிவரின் சடலம். இருவர் மனதிலும் சின்னதாய் ஒரு சோகம் எட்டிப் பார்த்தது. “எத்தனை காலம் உடனிருந்திருக்கிறார்.”
சிதைக்கு நெருப்பு மூடப்பட்டது. கொஞ்ச நேரம் தான். சிதையிலிருந்து சீறிப்பாய்ந்தன வாணவேடிக்கைகள்! இறந்த முனிவர், தன் உடலுக்குள் வாணங்களை மறைத்து வைத்திருந்திருக்கிறார். வண்ணமயமான வாணங்கள் வானில் பறந்து வெடித்தன. பூப்பூவாய்ச் சொரிந்தன. வாண வேடிக்கை மூலம், அந்த முனிவர், சிதையிலும்கூட சிரித்துக் கொண்டிருந்தார். சுற்றியிருந்த அத்தனை பேர்களும் இந்த எதிர்பாராத சம்பவத்தில் வெடித்துச் சிரித்தார்கள். அந்தச் சூழலே ஆனந்தமயமானது.
சிரிப்பால் ஏற்படும் உடல் சார்ந்த நன்மைகளை, டாக்டர். ஜி.இராமநாதன், “உங்களின் வெற்றி உறுதி” என்கிற புத்தகத்தில் பட்டியலிடுகிறார்.
மன அழுத்தம் குறைகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது. இதயத்துடிப்பு சீராகிறது. நுரையீரல் நன்கு விரிந்து சுருங்குகிறது. இரத்தத்தில் நன்மைகளை உண்டாக்கும் இரசாயனப் பொருட்கள் உண்டாகின்றன. இரைப்பையில் அமிலச் சுரப்பு குறைகிறது. இதனால் குடல்புண் உண்டாவது தடுக்கப்படுகிறது. எல்லா தசைகளும் தளர்வு அடைகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றல் கூடுகிறது.
அதனால்தான் இன்னொரு மருத்துவரான டாக்டர் மோகன் கட்டாரியா, ‘சிரிப்புச் சங்கம்’ துவக்கினார். தானாக சிரிக்கத் தொடங்கி அலைஅலையாய் சிரிப்புப் பரவும் மருத்துவ முறையாகவே இந்தச் சங்கம் செயல்படுகிறது. இந்தியாவில் 1300 கிளைகளும், அயல்நாடுகளில் 700 கிளைகளும் உள்ளன இந்தச் சங்கத்திற்கு.
இயல்பாக எழும் சிரிப்பலைகள் வழியே மனதில் இறுக்கம் தளர்வதோடு, நோய்களும் தீர்வதை இதன் உறுப்பினர்கள் உணர்வுப்பூர்வமாய் உணர்கிறார்கள்.
சிரிக்கக் சிரிக்க வாழ்க்கை சிறக்கும். வாய்விட்டுச் சிரிக்க நகைச்சுவைத் துணுக்குகளோ, “டப்பாத் தலையா” போன்ற எரிச்சலூட்டும் வசனங்களோ வேண்டாம். சிரிப்பு நமக்குள் நிகழ அனுமதிக்கும் அளவு திறந்த மனம் இருந்தாலே போதும்.
குழுவாகக் கூடி, சிரிப்பை ஒரு பயிற்சியாகவும், தவமாகவும் மேற்கொள்ளலாம். இந்தப் பழக்கத்தை உங்கள் குடியிருப்புப் பகுதிகளில் நீங்களே துவங்கலாமே!
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)