இது மகாபாரத காலமாம்…
இதென்ன கலாட்டா!
“ஒரு யோகியின் சுயசரிதை” என்ற நூலை நீங்க படித்திருக்கக் கூடும். அதனை எழுதியவர் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர். அவருக்கு குருநாதர், ஸ்ரீ யுக்தேஸ்வர்கிரி. அவர் 1894ல் “புனித விஞ்ஞானம்” என்கிற தலைப்பில் ஆய்வுநூல் ஒன்றை எழுதினார். அதன் அடிப்படையில், “இப்போது நாம் இருப்பது துவாபரயுகம்” என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைஃப் பாஸிடிவ் எனும் காலாண்டிதழில் (ஜூலை-செப்டம்பர் 2002) மெகோலா மஜீம்தார் என்பவர் இந்தக் கருத்தை மையப்படுத்தி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.
புனித விஞ்ஞானம் என்கிற நூலில் ஸ்ரீயுக்தேஸ்வர்கிரி தந்திருக்கும் துல்லியமான கோளாய்வுக் குறிப்புகளைப் படித்தால் பிரமிப்பாகவும் இருக்கும். தலை சுற்றவும் செய்யும். அவர் சொல்வது இதுதான்.
“நிலவு கோள்களை சுற்றுகிறது. கோள்களோ சூரியனை சுற்றுகின்றன. சூரியன் பூமிக் கணக்கின்படி 24000 ஆண்டுகளுக்கு சுற்று வருவதால் கிரக நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. விஷ்ணுநாபி என்கிற மையத்தை சூரியன் சுற்றுகிறது. அதுதான் படைப்பாற்றலின் சக்தி மையம். புராணப்படி பார்த்தால் பிரம்மாவின் இருப்பிடம். விஷ்ணு நாபியிலிருந்து சூரியன் விலகிச் செல்லச் செல்ல வாழ்வியல் மதிப்புகள், தர்மத்தின் மீதான பிடிப்பு போன்றவை விலகிச் செல்லும்.” இது ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியின் கருத்து.
இதன்படி பார்த்தால் இப்போது நாம் இருப்பது துவாபரயுகத்தின் இறுதிக் காலமாம். அதாவது, மகாபாரதக் காலம். துவாபரயுகம் முடிந்து கலிகாலம் துவங்கப் போகிறதே என்கிற கலக்கத்தில்தான் பஞ்சபாண்டவர்கள் இமயமலைக்குப் போனார்களாம்.
இந்தக் காலகட்டத்தை “சக்தியுகம்” என்கிறார்கள். அதாவது, எல்லாமே சக்தி அடிப்படையில் இயங்குமாம். மின்சாரம், எரிசக்தி, அணுசக்தி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். மனித ஆற்றலை எல்லா இடங்களிலும் இயந்திரங்கள் கைப்பற்றி விட்டன. மருத்துவத்திலும் எக்ஸ்ரே & லேசர் சிகிச்சை என்று வந்துவிட்டன.
அலைக்கதிர்கள் ஊடுருவுவது செல்ஃபோன் ஆகிவிட்டது. பிராணசக்தி அடிப்படையிலான ரெய்கி, பிராணிச் சிகிச்சைகளில் தொடங்கி சூரிய சக்தி, மைக்ரோவேவ் என்று அடுக்கடுக்காய் உதாரணங்களைக் காட்டுகிறார் மஜீம்தார்.
இன்னும் ஒன்றிரண்டு சம்பவங்களையும் உதாரணம் காட்டுகிறார். குருஷேத்திர யுத்தத்தை இருந்த இடத்தில் இருந்தபடி திருதிராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொன்னது போல, ஈரான் ஈராக் யுத்தத்தை சி.என்.என்.டிவி இல்லங்களுக்குக் கொண்டு வந்ததாம்.
மகாபாரதத்தின் ஆதி பருவத்தில், சிறு உயிரினத்தை நூறு பகுதிகளாகப் பிரித்து தனித்தனியான பாண்டங்களில் வளர்த்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. இது சோதனைக் குழாய் குழந்தை, குளோனிங் குழந்தை என்ற இன்றைய யுகத்தின் கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போகிறது என்கிறார் மஜீம்தார்.
இதனை நாம் ஏற்பதும் மறுப்பதும் வேறு விஷயம். ஆனால் இந்த சிந்தனை சுவாரசியமாக இருக்கிறது. சமீபகால நிகழ்வுகள் சிலவற்றை மகாபாரத காலத்தோடு பொருத்திப் பார்க்க நம்மால் முடியுமென்று தோன்றுகிறது. கொஞ்சம் யோசிப்போமா?
காண்டவ வனத்தை அழித்த பாவம் போரில் அர்ச்சுனனை நாகாஸ்திரமாக எதிர்த்தது. இன்றைய மனித குலத்தை அர்ச்சுனனாக உருவகம் செய்தால், வனங்களை அழித்த பாவம் வறட்சியாகவும், பஞ்சமாகவும் வாட்டுகிறது. அவை இயற்கையின் நாகாஸ்திரங்கள்.
தனித்தனி பெண்களின் கருவில் வளர்ந்த இரு அரை குறைப் பிண்டங்களை, இரு தாய்களுமே வீசி விடுகின்றனர். ஜாரஸ் என்ற முனிவர் இரு பிண்டங்களையும் ஒன்றாக சேர்த்தாலேயே ஜராசந்தன் பிறந்தானாம். இன்றும் குப்பைத் தொட்டியில் குழந்தைகளை வீசியெறிவதைப் பார்க்கிறோம்.
முழுக்க முழுக்க நம் காலத்துடன் நன்கு பொருந்துகிற பாத்திரம் கர்ணன். பிறந்தவுடன் ஒரு பெட்டிக்குள் வைத்து மிதக்க விடப்பட்டான். நம் காலத்துத் தொட்டில் குழந்தைத் திட்டத்தை இது நினைவுபடுத்துகிறது. சத்திரியனான கர்ணன், தான் அந்தணன் என்று பொய் சொல்லிப் பரசுராமரிடம் பாடம் கற்கிறான். உண்மை தெரிந்ததும் “கற்ற கல்வி உரிய நேரத்தில் கை கொடுக்காது” என்று சபித்து விடுகிறார் பரசுராமர். இப்போதுகூடப் பாருங்கள். தவறான தகவல் கொடுத்துக் கல்லூரியில் யாரும் சேர்ந்தால், உண்மை தெரிந்தவுடன் அவர்களது பட்டங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தேரோட்டி மகன் என்று பிரித்துப் பேசப்பட்ட கர்ணனுக்கு பொதுவான போட்டியில் பங்கேற்கும் அதிகாரத்தைப் போராடிப் பெற்றுத் தருகிறான் தூரியோதனன். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகளை நாமும் போராடிப் பெற்றிருக்கிறோம்.
கௌரவர்களின் சபையில் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் இடையில் வெடித்த மோதல் இன்றைய கூட்டணி அரசுகளுக்குள் நடைபெறும் மோதல்களை நினைவுபடுத்துகிறது. அரசியல் அரங்கிலோ சகுனிகள், சூதாட்டத்திற்கு நிகரான பேரங்கள், எல்லாம் ஏராளம்.
பாஞ்சாலி துகிலுரிப்பு பாரதத்தின் முக்கியத் திருப்பம், இன்றைய பாரதத்திலோ அது அடிக்கடி நடைபெறும் சாதாரண சம்பவம். ஊருக்கொரு பேர் சொல்லி பல திருமணங்கள் செய்துகொள்ளும் அர்ச்சுனர்களை அடிக்கடி செய்தித்தாள்களில் சந்திக்கிறோம். என்ன… புதிய பகவத்கீதைதான் பாக்கி.
இதையெல்லாம் பார்க்கிறபோது, இது மகாபாரத காலம்தான் போலிருக்கிறது என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு?
(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)