சமீபத்தில் கவிஞர் சுகுமாரன், தடம் இதழில் அளித்திருந்த ஒரு பேட்டியில், கேரளத்தினுடைய வலிமை வாய்ந்த இயக்கங்கள் என்று நாராயண குரு அவர்களின் இயக்கத்தையும், கம்யூனிச இயக்கத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஆன்மீகம் சமூகக் கண்ணோட்டம் இரண்டும் இணைந்த ஒரு மரபார்ந்த பார்வை என்பது நம்முடைய தமிழ்ச்சூழலில் காலங்காலமாகவே உண்டு. இறைவனுடைய தொண்டுக்கு மட்டுமல்லாமல், சமூகத்தினுடைய தொண்டுக்கும் இறைவனது பெயரால் சமூகத்திற்கு தொண்டு செய்யக்கூடியவர்களை, திருத்தொண்டர்கள் என்று போற்றி அவர்களுடைய வரலாறுகளை எல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம். அதிலே ஒரு சார்பு இருந்திருக்கலாம்.
சிவனடியார்களுக்கு உணவளிப்பது, சிவனடியார்களுக்கு உடை கொடுப்பது, சிவனடியார்களுக்கு திருவோடு தருவது என்றெல்லாம் இருக்கலாம். இதில் சமய நம்பிக்கை என்கிற அடிப்படையில் ஒரு சமூக ஒருமை மலர்ந்தது என்பதை பலர் அதில் காணத் தவறிவிடுகிறார்கள். அது வைணவமாகட்டும். சைவமாகட்டும். நாங்கள் வலியுறுத்துகிற நெறியில் நீங்கள் இறைவனை வணங்குவீர்களேயானால் நீங்கள் வணங்கத்தக்கவர்கள் என்று சொல்லுகிறார்கள்.
குலந்தாழ்ந்த வழிமுறைகளிலே நான்கிலும் கீழ்ப்பட்டவர்களாக இருந்தாலும்கூட அவர்கள், வரந்தாங்கும் மார்பைக் கொண்ட எங்கள் திருமாலை வணங்கினால் அவர்களும் எங்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று ஆழ்வார்கள் பாடுகிறார்கள்.
குலந்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள் சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்றுள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே!
என்கிறார் நம்மாழ்வார்.
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுலவும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
என்பது திருநாவுக்கரசருடைய வாக்கு.
எனவே, சமயப் பின்புலத்தில் ஒரு சமூக ஒருமை காணப்படுகிறது. வெவ்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆனாலும், நீ சிவனைக் கும்பிடுகிறாயா? நீ வேறு சாதியில்லை. உனக்கு சாதி பேதமில்லை. நான் திருமாலை வணங்குகிறேன். நீயும் திருமாலை வணங்கிறாய். நீ குலம்சார்ந்த சாதிகளில் நான்கிலும் கீழ்ப்பட்டவனாகக் கருதப்படுகிறவனா? ஆனாலும் நீ எனக்குத் தாழ்வில்லை. நீ எனக்குச் சமம் என்பதாக ஒரு சமூக ஒருமை அமைந்தது. அன்றைய சூழலில் இதுவே ஒரு புரட்சியாகும்.
எந்த நம்பிக்கை உடையவனாக இருந்தாலும், அவன் பசித்திருப்பானேயானால் அவனுக்கு உணவு தருவது தங்களுடைய கடமை என்று இந்த அருளாளர்கள் கருதினார்கள்.
திருவீழிமிழலையிலே பஞ்சம் வந்தபோது, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் படிக்காசு பெற்றனர் என்பது திருத்தொண்டர் புராணம் நமக்குச் சொல்கிற செய்தி. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் உணவு சமைத்து, சிவனடியார்கள் எல்லோரும் வந்து இங்கே சாப்பிடலாம் என்று முரசறைந்தார்கள்.
அல்லார் கண்டத்து அன்பர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லார் இயன்ற வளம்பெருக
பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் இங்கு உண்க என
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்தி
சொல்லால் சாற்றி சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார் என்று சொல்கிறார்.
அந்த வரலாற்றை விவரிக்கிறபோது, சேக்கிழார் சொல்கிறார், நேரவருபவர், யாவராயினும் & எதிரே வரக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பசித்திருப்பார்களேயானால், பஞ்ச காலத்தில் அவர்களின் பசியைப் போக்குகிற, முயற்சியிலே, திருவீழிமிழலையில் அமைந்திருந்த திருநாவுக்கரசர் திருமடமும் திருஞானசம்பந்தர் திருமடமும் ஏற்றுக்கொண்டன என்பது நாம் இதன்மூலம் அறிய வருகிற செய்தி.
எந்த வகையில் முரண்பட்டிருப்பவனையும் அவன் பசியோடு இருக்க நாம் பார்த்திருக்கலாகாது என்பது அருள் நிலையின் முக்கியமான ஓர் அம்சம்-. அதனால்தான், புலால் உண்ணுவதை மிகக்கடுமையாக எதிர்த்த சாடிய வள்ளல் பெருமான், தான் அமைத்திருக்கக்கூடிய அந்த ஆலயத்தினுடைய வழிபாட்டு மைய இடத்தை நோக்கி புலால் உண்பவர்கள் வரலாகாது என்கிற அளவுக்கு கட்டளை விதித்தவர்தான்.
அவர் “புலால் உண்பவர்களை உறவினத்தார் அல்ல புறவினத்தார். அவர்களுக்குப் பசியாற்றல் மட்டுமே புரிக. வேறு எவ்விதமான உறவும் அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று சொல்கிறார்.
முற்றாக முழுதாக கொள்கையில் முரண்பட்டிருந்தாலும், அவர்கள் பசித்திருப்பதைப் பொறுத்திருக்க வேண்டாம் என்பது வள்ளலாருடைய வாக்கு.
இங்கே நாராயணகுரு அவர்களின் இயக்கத்தைப் பற்றி, அதனுடைய தாக்கம் குறித்து கவிஞர் சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்த தளத்தில் யோசிக்கிறபோது, ஆன்மீகம் தழுவிய சமூகப் பேரியக்கமாக உருப்பெற்றிருக்க வேண்டியது வள்ளலாருடைய சன்மார்க்க சங்கம்.
சன்மார்க்க சங்கம் என்பது ஜோதி வழிபாட்டை முன்னிலைப்படுத்தி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்கிற அவருடைய அருளிச் செயலை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதுபோலவே, வள்ளலாருடைய சாதி மறுப்பு, சமய மறுப்பு, புலால் மறுப்பு போன்றவற்றை இன்னும் வலிமையான ஓர் இயக்கமாக கொண்டு செலுத்தியிருக்க வேண்டும்.
சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
என்கிற அவருடைய குரல், முன்னெடுக்கப்பட்டிருக்குமேயானால், பகுத்தறிவு இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே, பக்திநெறி சார்ந்தவர்களின் வலிமையான சீர்திருத்த இயக்கமாக சன்மார்க்க சங்கம் உருப்பெற்றிருக்கும்.
எல்லா சமயங்களையும் உள்ளடக்கிய ஓர் சமய ஒருமைக்கான குறியீடு அருட்பெருஞ்சோதி என்பது போய், இந்த ஜோதியைக் கும்பிடுபவர்கள் என்பது ஒரு சமயமாகவே கருதப்படுகிற நிலை வந்துவிட்டது.
எனவே வள்ளலாருடைய இயக்கம், புலால் மறுப்பு, சாதி சமய மறுப்பு, மூட நம்பிக்கை மறுப்பு, உயிர்க்கொலை மறுப்பு போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கியது என்பதைப் பார்க்கிறபோது, நாராயண குரு அவர்களின் காலத்திற்கு முன்னதாகவே தோன்றிய வள்ளலார் இயக்கம் மக்கள் இயக்கமாக உருப்பெற்றிருந்தால் தமிழகத்தில் பல்வேறு காட்சிகள் மாறியிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
-மரபின்மைந்தன் முத்தையா