பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதில் ஒரு சவுகரியம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை முன்வரிசையில் அமர்ந்து காணக்கிடைக்கும்.
தொடக்கத்தில் மழலையர் நடனம் நடக்கும். சில பள்ளிகளில் மழலையரைப் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையின் முன்புறம் ஒதுங்கிநின்று குழந்தைகள் கண்களில் படும்விதமாய் தனியே ஆடிக்கொண்டிருப்பார். இப்படியரு நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து முன்னர் எழுதியுள்ளேன்.
முன்வரிசையில் அமர்ந்து பார்க்கையில், அறிவிப்பு வரும்வரை குழு நடனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் குழந்தைகளையும் அவர்களின் பல்வேறு முக பாவங்களையும் காண முடியும்.
அவர்கள் மேடை ஏறும்போதே, முகத்தில் தெரியும் ஆர்வம், நம்பிக்கை அவர்களில் அசல் கலைஞர் யாரென்று காட்டிக் கொடுத்துவிடும்.
நடனப்பள்ளிகளில் வேண்டுமானால், எல்லாக் குழந்தைகளும் ஒரே சீராக ஆடும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். பள்ளி கல்லூரிகளில் இதனை எதிர்பார்க்க முடியாது.
நன்றாக ஆடத்தெரிந்த ஒரு பெண்ணோ ஆணோ, தன்னுடன் நெருங்கிப் பழகும் நண்பர்களைத் தூண்டி, நடனத்தில் பங்கேற்கப் பயிற்றுவித்து, ஊக்கம் கொடுத்து நிகழ்ச்சியில் ஈடுபடுத்துவதுதான் பெரிதும் நடக்கும்.
உடல் வளையும் அநாயசம், முகபாவங்களின் தீர்க்கம், மேடைக்கேற்ற துறுதுறுப்பு ஆகியவை அந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரி யாரென்று காட்டிவிடும்.
பல்லாண்டுகளாய் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து முதல்வரிசைப் பார்வையாளனாய் இருந்துவருகிற அனுபவத்தில் குழந்தைகள் மேடையேறும்போதே, யார் சூத்திரதாரி என்று மனக்கணக்கு போடுவதும் என் இயல்புகள். அவை பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.
நேற்று கோவையில் உள்ள கீதாஞ்சலி மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். என் உரையும், பரிசளிப்பும் நிறைவு பெற்ற பிறகு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.
இரண்டு மூன்று நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, பதின் வயதுகளின் தொடக்கம் என்று கணிக்கக் கூடிய வயதில் உள்ள குழந்தைகள் மேடையில் ஓரமாய் ஒரே வரிசையாய் அணிவகுத்தார்கள்.
வரிசையில் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ, ஒரு மாணவி சற்றே கூன்போட்டு நின்று கொண்டிருந்தாள். வற்புறுத்தி அழைக்கப்பட்டவள் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.முகத்தில் ஒரு தவிப்பு. சரி, இதில் யார் சூத்திரதாரியாக இருக்கக்கூடும் என்று கண்கள் தேடின.
ஓரிரு குழந்தைகளை யூகித்தேன். அதற்குள் இசை தொடங்கி நடனம் ஆரம்பமானது. சில விநாடிகள்தான். சற்றே கூன்போட்டு நின்றிருந்த சிறுமி, சுற்றிச் சுழன்றாடி, மேடையின் மையம் கைப்பற்றி, கண்களில் பாவங்கள் கொழிக்க ஆடிய விதம் அற்புதமாய் இருந்தது.
முகச்சாய்வு, மேனியின் ஒசிவு, கரங்களின் அசைவு என அனைத்திலும் தனித்தன்மையும், பாதங்களின் துரிதமும், அந்தக் குழந்தை பிறவிக் கலைஞர் என்பதை உணர்த்தின.
நம் முன்முடிவுகள் தவறாகும்போது விளையும் வியப்பு, மகிழ்ச்சியாய் மலர்கிறது. குழந்தைகளிடம் தோற்பது ஒரு தனி சுகம். இத்தகைய தோல்விகள் அடிக்கடி நிகழ வேண்டும்.
-மரபின்மைந்தன் முத்தையா