ஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி.
அதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கும்.
ஓர் ஆசிரியரின் தகுதி – அனுபவம் – அறிவு ஆகிய அம்சங்களை எடுத்த எடுப்பில் மாணவனால் எடைபோட முடியாது. தனக்கு வகுப்பு பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை, ஆசிரியரைப் பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை என்ற உடனடி உணர்வுகளை எந்தத் திரையும் இல்லாமல் மாணவன் நேரே பிரதிபலிப்பான்.
மெல்ல மெல்லத்தான் ஆசிரியரின் அருமையை அறிவான். தன் அறிதல் நிலையை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை உணர்வான்.
சரியாகச் சொன்னால், சில மாணவர்கள் படித்து முடித்து, வெளியே போன பின்னர்தான், வாழ்வின் வெய்யிலில் இருக்கும்போதுதான் ஆசிரியருடைய அன்பின் நிழல் எவ்வளவு அரிதானது என்பதை உணர்வார்கள்.
ஓர் ஆசிரியரை மாணவன் சற்றே தாமதமாக உணரக்கூடும் என்பது மட்டுமல்ல விஷயம். அவ்வண்ணம் உணர்ந்தவன் தன் ஆயுள் முழுவதும் அவரை மறக்க மாட்டான். தன் பிள்ளைகளிடமும் தன்னால் பயன் பெறுபவர்களிடமும் ஆசிரியரின் பெருமைகளை பேசிக் கொண்டே இருப்பான்.
சிலருக்கு, இந்த அங்கீகாரம் பணி ஓய்வுக்குப் பின்னரே தெரிய வரும். இன்று வாட்ஸப் முக நூல் போன்றவற்றில், தன் வகுப்புத் தோழர்களைக் கண்டறிந்து, சங்கம் அமைக்கக்கூடிய நண்பர்கள் முதலில் செய்கிற காரியமே தன் ஆசிரியர்களைத் தேடிச் செல்வதுதான்.
ஒரு மாணவர் மனதில் மூன்றாண்டுகளுக்குள் ஏற்படுத்துகிற தாக்கம், அடுத்து வருகிற ஐம்பது ஆண்டுகளுக்காவது அந்த ஆசிரியரின் பெருமை பேசப்படும் என்றால், அதை விடவும் ஒரு பெருமை உண்டா என்ன?
எண்பதுகளில், வெளிநாட்டிலிருந்து தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மாணவர் ஒருவர் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ் படிக்க வந்தார்.
அவருக்கு பேச்சுத்தமிழ்கூட சற்று சிரமம்தான். வகுப்பில் ஓர் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, பாடி நடத்துவார். பேச்சே புரியாத மாணவருக்கு பாட்டு புரியவேயில்லை. அருகிலிருந்து மாணவரிடம் சத்தமாக, “Why is this man singing? can’t he talk” (ஏன் இந்த மனிதர் பாடுகிறார்? அவர் பேசி பாடம் நடத்த முடியாதா?) என்று கேட்டார் அந்த மாணவர்.
மதுரையில் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த மாணவர் தமிழார்வத்தால் சேர்ந்திருந்தாலும் அடிப்படைகள் அறிவதிலேயே சிரமம் இருந்தது. அதே விடுதியில் இன்னோர் ஆசிரியர் தங்கியிருந்தார். மாலை நேரங்களிலும், முன்னிரவுப் பொழுதுகளிலும் அந்த மாணவனுக்கு தனியான போதனைகளை அவர் தொடங்கினார்.
அந்த மாணவரை ஓர் ஆசிரியை வீட்டு உணவு சாப்பிடத் தருவதற்காக தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்வார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒன்று கைக்குழந்தை.
ஒரு குழந்தை தோளில் தொங்க, இன்னொரு குழந்தை மடியில் கிடக்க, உட்கார்ந்த நிலையிலேயே அந்த மாணவருக்கு இட்டிலிகளைப் பரிமாறி சூடாக சாம்பார் ஊற்றி சாப்பிடச் சொல்வார்.
இந்நிலையில், அந்த மாணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. அவருடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர், சற்றும் யோசிக்காமல் அந்த மாணவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த ஆசிரியர் வீட்டில், பதின்வயதில் மூன்று மகள்கள் உண்டு.
அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு நாளல்ல, இரு நாட்களல்ல இரண்டு மாதங்கள் மாணவனை வீட்டிலேயே வைத்திருந்து, வைத்தியம் தந்து, பத்திய உணவாகக் கஞ்சியும் நார்த்தங்காயும் தந்து கண்ணில் வைத்துக் காப்பாற்றினார்.
இந்த அன்பில் அந்த மாணவர் நெகிழ்ந்தாலும் அது எவ்வளவு பெரிய பண்பு என்பதை அப்போது அவர் உணரவில்லை. கல்வி முடிந்தபின், தன் நாடாகிய மொரீஷியஸ் திரும்பினார். அங்கே உள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகி, தமிழ்த்துறைத் தலைவராகி, இப்போது மொழிகள் புலத்தின் தலைவராகி உள்ளார்.
மொரீஷியஸ் பிரதமரின் நேரடி நியமனத்தில், தமிழ் பேசுவோர் ஒன்றியம் என்னும் அரசாங்க அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் பேசும் சூழல் இல்லாத மொரீஷியஸ் நாட்டில் 7 முதல் 75 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ் பேசக் காரணமாக இருக்கும் அவர் பெயர் ஜீவேந்திரன்.
சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவர், மதுரையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, தன் ஆசிரியர்களையோ, அவர்தம் குடும்பத்தினரையோ தேடிப்பிடிக்க முடிவு செய்து அந்தத் தேடல் வேட்டையில் இறங்கினார்.
இன்றளவும் அந்த ஆசிரியர்கள்தான் அவருடைய தெய்வங்கள். அவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சில நிமிடங்களிலேயே முகம்பொத்தி அழத்தொடங்கி விடுகிறார்.
பெற்றோர் போலவே ஆசிரியர்களின் சொந்தமும் ஆயுட்கால பந்தம் ஆக முடியும் என்பதற்கு ஜீவனுள்ள சாட்சி ஜீவேந்திரன்.
மரபின் மைந்தன் முத்தையா
(தொடர்வோம்)