பெரியவர்களைப் பார்த்து வியக்கக்கூடாதென்று சங்க இலக்கியம் சொல்கிறதாமே?
டி.சுரேஷ், மதுரை
ஆமாம். சிறிய குணங்கள் உள்ளவர்களை இகழவே கூடாதென்றும் சொல்கிறது. மனிதர்களின் செயல்களைப் பாராட்டவோ இகழவோ செய்யலாம். மனிதர்களைப் பாராட்டுவதோ இகழ்வதோ அவசியமில்லை என்றுதான் இதைப் பொருள் கொள்ள வேண்லிம்.
“பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்கிறார் சங்கப்புலவர்.
நீங்கள் இசை ரசிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்காத இசைக் கருவி எது?
இளங்கோவன், தஞ்சை.
ஜால்ரா!
இதுவரை நீங்கள் எழுதியுள்ள 64 நூல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நான்கு நூல்களைப் பட்டியலிடுங்கள். (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. எனவே என் எல்லா நூல்களும்தான் என்று நழுவ வேண்டாம்.)
அல்போன்ஸ், திருச்சி.
நழுவ மாட்டேன். ஏனென்றால், நான் காக்கையல்ல.
கவிதை நூல்களில் – இணைவெளி
இலக்கிய நூல்களில் – திருக்கடவூர்
அனுபவ நூல்களில் – அற்புதர்
சுயமுன்னேற்ற நூல்களில் – வாழ்வில் போராடுங்கள்; வாழ்க்கையுடன் அல்ல