தமிழகமெங்கும் பல சுய முன்னேறப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன. நீங்கள்கூட சமீபத்தில் மதுரையில் நடந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். இதுபோன்ற பயிலரங்குகளின் பயனென்ன என்பதை விளக்க முடியுமா?
-பாண்டியன், மதுரை.
ஆழமான இந்தக் கேள்விக்கு நீளமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சுய முன்னேற்றப் பயிலரங்குகளால் என்ன பயனென்ற கேள்விகள் வெவ்வேறு தளங்களில் இருந்தும் எழுந்து கொண்டேயிருக்கின்றன.
சுய முன்னேற்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் முன்னேறிவிடுவார்களா என்று சிலரும் சுய முன்னேற்ற நூல்கள் வாசிப்பதால் வளர்ச்சி வருமா என்று சிலரும் அடிக்கடி கேள்விகள் எழுப்புவதுண்டு.
கர்நாடக சங்கீதத்தின் வாசனையே தெரியாதவர் வீம்புக்காக கச்சேரிகளில் போய் அமர்ந்தால் எப்படி ராக நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியாதோ, இலக்கிய சம்பந்தமே இல்லாதவர்கள் இலக்கிய ஆய்வரங்குகளில் அமர்ந்தால் அதை எப்படி உணரவோ ரசிக்கவோ முடியாதோ அதுபோல சுயமுன்னேற்றப் பயிலரங்குகளால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு மிக நிச்சயமாய் எந்த பயனும் இல்லை.
ஆனால் வாழ்வில் முன்னேற விருப்பமும் வழிகாட்டுதலுக்கான ஏக்கமும் கொண்டிருப்பவர்கள் மிக நிச்சயமாய் பயன் பெறுகிறார்கள். எந்தத் துறையில் ஈடுபடுபவர்களுக்கும் எப்படி வல்லுனர்களின் வழிகாட்டுதல் துணை செய்கிறதோ அது போல தொழிலில், வணிகத் தொடர்புகளில், நிர்வாகத்தில் பொருளாதாரத்தில் முன்னேற விரும்புகிறவர்கள் தங்களுக்கான வழிகாட்டுதலைத் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பே இத்தகைய பயிலரங்குகள்.
சொல்லப்போனால் சுய முன்னேற்றத் துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் பயிலரங்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மருத்துவர்கள் தங்கள் துறை வல்லுனர்களைக் கொண்டு வருடம் முழுவதும் பயிலரங்குகள் நிகழ்த்துகிறார்கள். அதிலும் கண் மருத்துவர்கள் தனியாகவும் பல் மருத்துவர்கள் தனியாகவும் இதய மருத்துவர்கள் தனியாகவும் இத்தகைய பயிலரங்குகளை தங்களுக்குள் நிகழ்த்துகிறார்கள்.
பொறியாளர்கள், வணிகர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் என எல்லோருக்குமே துறை சார் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. சுய முன்னேற்றத் துறையின் கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில் எல்லாத் துறைகளுக்கும் பொதுவான வழிகாட்டுதல்கள் இதில் கிடைக்கின்றன.
சேவைத் துறை, தொழில்துறை, நிர்வாகம் போன்றவற்றில் தேவைப்படுவதெல்லாம் சின்னச் சின்ன ஒழுங்குகளும் உத்திகளும்தான். இவற்றை தொடர்ந்து பயில வேண்டிய தேவை இருப்பவர்கள் அவற்றில் பங்கேற்றுப் பயன் பெறுகிறார்கள்.
உதாரணமாக நேர நிர்வாகம் என்றொரு துறை. இதில் ஜெயிக்க ஒரு சிறு நுட்பம் தேவைப்படுகிறது. விற்பனைப் பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க பத்து மணிக்கு வருவதாகச் சொல்கிறார். ஆனால் அவரால் பத்தேகால் மணிக்குத்தான் போக முடிகிறது. இது ஒரு முறையல்ல. அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு என்ன தீர்வு?
அவர் சந்திப்பு நேரத்தையே 10.15 என்று குறிக்க வேண்டும். மனிதர் சொன்னால் சொன்ன நேரத்திற்கு வருவார் என்ற பெயரையும் இதன்வழி பெறுவார்.
வாழ்வில் போராடி ஜெயித்தவர்கள் எல்லாம் பயிலரங்குகள் போயா ஜெயித்தார்கள் என சிலர் கேட்பதுண்டு. இல்லை. அதேநேரம் எல்லோருக்கும் போராடுவதில் முழு உறுதி இருப்பதில்லை. லேசான தயக்கம் சிலபேருக்கு இருக்கும். போராடி ஜெயித்தவர்கள் வாழ்க்கை இத்தகைய பயிலரங்குகளில் உதாரணமாய் சுட்டப்படுகிறது.
வழிகாட்டுதல் இல்லாமல் ஜெயித்தவர்கள் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆகாதென்பது பொதுமொழி. விதிவிலக்குகளை உதாரணங்களாக்கி வளரத் தூண்டுவதும் வெல்லத் தூண்டுவதும் பயிலரங்குகளின் புதுமொழி.