உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ
ஒவ்வொரு நாளும்தான்;
உன்னால் என்னால் காண முடிந்தால்
உயர்வுகள் தினமும்தான்;
தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று
துணைக்கு வருகிறது;
முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை
முனைந்தால் தருகிறது!
எண்ணிய தொன்று எட்டிய தொன்றா?
ஏன் இப்படி ஆகும்?
எண்ணப் போக்கினில் ஏற்படும் தெளிவே
ஏணிப் படியாகும்;
வண்ணக் கனவுகள் வசமாய் ஆவதும்
வேலையின் திறமாகும்;
கண்ணுக்கெதிரே வாய்ப்புகள் திறக்கும்
கண்டால் வளம் சூழும்!
விழுந்தும் எழுந்தும் விரைகிற அலைதான்
கரையைத் தொடுகிறது;
விழுவதன் வலியோ விலகிடும் எழுந்தால்;
விபரம் புரிகிறது;
நழுவிய வாய்ப்பினை நினைத்துச் சலித்தால்
நெஞ்சம் வலிக்கிறது;
அழுகையை விடுத்து அடுத்ததைத் தேடு
ஆற்றல் இருக்கிறது!
நம்மால் முடிந்ததை நிகழ்த்திக் காட்ட
நமக்கிந்த பிறவியடா;
சும்மா இருந்தால் சோம்பிக் கிடந்தால்
சுமைதான் வாழ்க்கையடா;
விம்மல் தணித்து விவேகம் வளர்த்து
வெற்றிகள் குவித்துவிடு;
இம்மியும் உயரம் இழக்காமல் நீ
இமயம் ஆகிவிடு!
-மரபின் மைந்தன் முத்தையா