நான்காம் திருமுறை உரை

சின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று வாயை திறப்போம்; இருமல்தான் வரும். இந்த முதுமை எப்படியென்று அருணகிரிநாத சாமி சொல்கிறார்.

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி
தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி

நமக்கு நோய்வருமாம். அது யாருக்கு மிகவும் மகிழ்ச்சி என்றால் மருத்துவருக்கு. இப்படியெல்லாம் நோய் வரும் என்று நம்மை வைத்துதான் ஆராய்ச்சி செய்வார்கள்.

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

பருவத்தில் சிவநாமத்தை சொல்ல வாய் திறந்தால் இருமல் வருகிறது. எப்படி அருணகிரிநாதர் பாடினாரோ, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நாவுக்கரசர் சொல்கிறார்.

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்

பின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். பின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்பது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு கிண்டலாக ஓர் உவமையைச் சொல்கிறார் நாவுக்கரசர். சாரதா அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நான் சென்னையில் இருந்து பேசிவிட்டு இரவு மலேசியா போகிறேன். அக்கா அவர்களிடம் நான், மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறேன். பயப்படாதீங்கள், சொல்லமாட்டேன். உடனே முகத்தில் ஓர் அதிர்ச்சி வருகிறது அக்காவிற்கு. அதுக்கென்ன தம்பி வாங்க. ஒன்று போகும் போதே சரவணபவனுக்கு போன் பண்ணி கொண்டு வரச் சொல்லுவாங்க. இல்லையென்றால், நம் தம்பியென்று நினைத்து கொஞ்ச நேரம் உட்காருங்க என்று சொல்லி சமையல் செய்து, கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் அவ்வளவு நேரமாகாது. 3 மணிக்கு சாப்பாடு போடுவார்கள். இப்போது மேடையில் இருக்கிறார்கள். வேலையில் இருக்கிறார்கள். திடீர் விருந்தாளி அழையா விருந்தாளி. ஆனால் உரிமையுள்ள விருந்தாளி. அதனால் செய்து செய்து போடுகிறார்கள்.
நாவுக்கரசர் சொல்கிறார், கும்பிட வேண்டிய வயதில் கடவுளைக் கும்பிடாமல் காலம் போன பின்பு கும்பிடுகிறவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால், காலையில் இருந்து வீட்டில் ஒரு வேளையும் பார்க்காமல் பகல் முழுவதும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டு கணவர் வருகிற நேரம் பார்த்து 1 1/2 மணிக்கு மேல் அடுப்பைப் பற்றவைக்கிற பெண் போல என்கிறார். நான் சொல்லவில்லை; நாவுக்கரசர் சொல்கிறார்.

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றேன்.

மதியத்துக்கு மேல் அடுப்பை பத்த வைக்கிற பொம்பளை மாதிரி இருக்கிறேன் என்றார்.

பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.

என்றெல்லாம் அவர் பாடுகிற அழகைப் பார்க்கிற போது நமக்கு அதில் பெரும் மகிழ்ச்சியும் -ஈடுபாடும் தோன்றுகிறது.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *