நான்காம் திருமுறை உரை
அண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய குருநாதர்கள் தலைமையில் அருளாளர்கள் எல்லாம் எழுந்தருளினார்கள். இதில் என்ன முக்கியமென்றால் ஆதியோகியாக பரமனை காணுகிற பெற்றிமை நம்முடைய மரபில் உண்டு என்பதற்கு திருமுறைகளில் உதாரணங்கள் இருக்கின்றன. சிவபெருமான் தவம் செய்தான் என்பதை கருவூர் தேவர் பாடுகிறபோது ‘யோகு செய்வான்’ என்கிறார். யோகம் புரிந்தான் என்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் நம்முடைய நாவுக்கரசர் பெருமான் பரமயோகி என்று அழைக்கிறார். ஆதியோகியை பரமயோகி என்கிறார்.
நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.
என்று அற்புதமான பாடல் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். வைத்தீஸ்வரர் கோவிலிருந்து வந்திருக்கிறார் பெருமான். அதுதான் அவருடைய முகூர்த்த தலம். அங்கே பாடுகிறபோதும் பரமயோகி என்று சொல்லுகிறார். இந்த ஆதியோகியினுடைய கோட்பாடு என்னவென்றால் ஏகன் அனேகன். உருவமாகவும் இருக்கிறான். அருவமாகவும் இருக்கிறான். அவன் விரும்புகிற வடிவங்களை எடுத்துக்கொண்டு வருகிறான். சமத்துவான்களுக்கு போதிக்கிற போது தட்சிணாமூர்த்தியாக வருகிறான். சப்தரிஷிகளுக்கு போதிக்கிறபோது யோகியாக வருகிறான். சித்த கணங்களாக வருகிறான். விரும்புகிற வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். இந்த இரகசியத்தை வைத்தீஸ்வரர் கோவில் பெருந்தலத்தில் பாடுகிறபோது நாவுக்கரசர் பாடுகிறார்.
நாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற
பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.
விரும்பிய வடிவத்தை எடுப்பார். அதனால்தான் அவருக்கு பிறவாயாக்கை பெரியோன் என்று பெயர். ஒரு தாயினுடைய கருவில் பிறக்கமாட்டாரே தவிர தான் விரும்புகிற வடிவத்தை விரும்புகிறபோது எடுத்துக்கொள்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இதில் முக்கியமான நிறைய விஷயங்கள் இருந்தாலும்கூட சில விஷயங்களை மையப்படுத்துகிறேன்.
இரண்டு இயல்புகளை முக்கியமாக நம்முடைய அடிகளார் அருளுகிறார். ஒன்று என்னவென்றால் உயிரியினுடைய இயல்பு. இன்னொன்று சிவனுடைய இயல்பு. இந்த உயிரியினுடைய இயல்பு எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்துக் கொள்ளும். தான் செய்வதாய் நினைத்துக்கொள்கிறபோது அது தானாய் தருக்கி தனியனாய் நிற்கும். ஆனால் என்னுடைய கடமையை நான் சிவன் ஆணையின் பேரில் செய்கிறேன். அந்த ஆணையை நிறைவேற்றுவதனால் சிவன் என்னை பார்த்துக் கொள்வான். எனக்கு இந்த உலகில் கவலை கிடையாது.
-மரபின் மைந்தன் முத்தையா
(தொடரும்)