நான்காம் திருமுறை உரை

பாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல்.
இதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய்.

இந்த உறுதியை, உரத்தை பாரதி எங்கிருந்து பெற்றான்?

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

இந்த சமூகசேவைக்கு தன்னை முழுமையாக அந்தப் பணிக்கு ஒப்புக்கொடுக்கிற போது பெரும் ஆற்றல் என்னைப் பார்த்துக் கொள்ளும். இந்த நம்பிக்கையைத்தான் இன்றைக்கு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெற வேண்டும். என்னைவிட பெரிய குறிக்கோளுக்கு என்னை நான் அர்ப்பணிப்பேனேயானால் அந்தக் குறிக்கோள் என்னைப் பார்த்துக்கொள்ளும். பாரதி போய் பராசக்தி முன் கேட்கிறான். வெறும் உப்புக்கும் புளிக்கும் அலைவதற்கா என்னைப் படைத்தாய்.

நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை
சுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே!

‘வல்லமை தாராயோ, மாத சம்பளம் வாங்குவதற்கே!’ என்று அவன் கேட்கவில்லை. தன்னினும் பெரிய கொள்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டால் அந்த பெரும் கொள்கையே ஒப்புக்கொள்கிறது. இந்த உறுதியை நாவுக்கரசர் பெருமானிடத்தில் இருந்து பாரதி பெறுகிறான்.
சிவபக்தர்கள் இந்த இயல்பை மிக அருமையாக சொல்கிறார்கள். ஓர் உயிரும் சிவனும் ஒன்றுகிற போது என்ன நடக்கும் என்பதை பெருமான் மிக அருமையாகச் சொல்கிறார். “சிவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் வேற்றுமை கிடையாது. அவர் நடுவில் இருப்பவர்.” வள்ளலார் சொல்கிறார், நடுநின்ற நடு.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்கிறார்.

இங்கே பாருப்பா. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று பேதம் கிடையாது. சலம் இலன் சங்கரன். பேதம் கிடையாது. ஆனால் ஒன்று சார்ந்தவர்க்கெல்லாம் சங்கரன். இந்த ஒலிபெருக்கி ஒரு ஜடப்பொருள். இதற்கு உயிர் கிடையாது, உணர்ச்சி கிடையாது, அறிவு கிடையாது. நம் விழாத்தலைவர் ஐயா இங்கு நின்று பேச நம் ஓதுவார் ஐயா சொன்னார், ஒலிபெருக்கி முன்னாடி போங்க என்று சொன்னார். இது வெறும் சடப்பொருள். இதுக்கு ஆங்காரம் கிடையாது. ஆனால் இதுக்கே ஓர் ஆங்காரம் என்னவென்றால் என்ன பக்கத்தில் வந்தால்தான் உன் குரலை வெளிப்படுத்த முடியும் என்று சொல்கிறது. ஒரு ஜடத்துக்கே இருக்கிறபோது, சிவனுக்கு இருக்காதா?

‘சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கெல்லாம் நலமிலன்.’ அவனை அணுகாமல் விட்டால் அவன் எனக்கு அருளவில்லை என்று பேசுவதில் பயன் இல்லை.

மாணிக்கவாசகர் சொல்கிறார்,
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே!

அப்போது ஒருவர் கேட்டார். ஏன் சார் நான் போய் அவரை சார்ந்து விடுகிறேன் என்றால் வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது. வேலை நல்லா நடக்கணும். என் கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டும். என் பையனுக்கு நல்ல கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க வேண்டும். என் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும். இவ்வளவும் சிவன் செய்து கொடுப்பானா. நான் சொன்னதுபோல நிபந்தனை சார்ந்த பக்தி. மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்

தினம்தினம் உன் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் அவனுடைய வேலையென்று நினைக்கிறீர்களா? அது அல்ல. நீங்கள் செய்த வினைகளுக்கேற்ப உங்களுக்கு வரக்கூடிய எதிர்வினைகளை அவன் சமப்படுத்திக்கொடுப்பான். அவன் அருளினால் தாக்கல் குறையும். நம்முடைய வினைப்பயனை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.

நாள்தோறும் நல்குவான் நலன்.

அதுமட்டுமல்ல இன்னோர் இடத்தில் சொல்கிறார். பெருமானே நிறைய பேருக்கு குற்றணர்வு வந்துவிடும். ஓதுவார் மூர்த்தியிடம் பார்க்கிறோம். அவருடைய அக்கா சொன்னார்கள். லண்டனில் ஒன்பது மாதம் குளிர் இருக்கிற இடத்தில் நியமம் காரணமாக மேலாடை அணியாமல் திருமுறை ஓதுகிறார் என்று. அப்போது நமக்கு என்ன தோன்றும். நம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு போகிறபோது ஒரு பாட்டு சொல்வது கிடையாது. என்றைக்காவது மேடைக்கு வரும்போதுதான் குறிப்புகளை தேடி எடுக்கிறோம் அப்போது மட்டும் திருக்குறிப்பு தொண்டராக மாறிவிடுகிறோம்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *