தமிழில் மட்டும் என்றில்லை. பொதுவாகவே இது குறுஞ்செய்திகளின் காலம். சின்னச் சின்ன தீக்குச்சிகள் உரசி அதன் வழியே பற்றிப் பரவும் நெருப்பில் குளிர்காய உலகம் தயாராக இருக்கிறது.
காத்திரமான எழுத்துகளை எழுதுபவர்கள் இதுபோன்ற உரசல்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதுதான் சோகம். ஏனெனில் அவர்களின் உரமிக்க எழுத்துகளை வாசிப்பவர்கள் எண்ணிக்கையை விட இத்தகைய சர்ச்சைகள் வழி அவர்களை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம்.
இந்த சர்ச்சையின் நூல்பிடித்தபடி அதனை எழுப்பியவரின் எழுத்துலகுக்குள் வந்து சேர்பவர்களும் உண்டென்று வாதிடலாம். அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம்.
சமீபத்தில் நமது நம்பிக்கை இதழ் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தநிகழ்வொன்றில் பேசிய மூத்த எழுத்தாளர் திரு. மாலன், சமூக ஊடகங்களின் உலகில் மரியாதைக்குரியவர்கள் எவருமில்லை” என்றார்.
உண்மைதான். ஒருவர், தான் எவ்விதமாய் அறியப்பட விரும்புகிறார் என்பதற்கும் அவர் எப்படி அறிந்து கொள்ளப்படுகிறார் என்பதற்குமான வேறுபாட்டை சமூக ஊடகங்கள் வழியே பரவும் சர்ச்சைத் துணுக்குகளே முடிவு செய்கின்றன.
சக எழுத்தாளர்கள் பற்றியவிமர்சனங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தனிப்பாடல்களில் அவை திரண்டு நிற்கின்றன. கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும், கம்பருக்கும் அவ்வைக்கும், ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திக்கும் இடையிலான மோதல்கள் சிற்றிலக்கியங்களில் சிணுக்கம் காட்டுகின்றன. பேரிலக்கியங்களே பேசப்படுகின்றன.
மயிர் பிளக்கும் விவாதங்கள் புழுதி பரத்தும் பொரணிகள் அவரவர்களின் அழகிய இலக்கியங்கள் மேல் படியாமல் காக்க படைப்புலக பிரம்மாக்கள் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்