சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் வித்தியாசமான அனுபவம் ஒன்று நேர்ந்தது. விழாவில் பேசிய ஒருவர் “இப்போதெல்லாம் புத்தகங்களே விற்பதில்லை. வாசகர்கள் குறைந்து விட்டார்கள். இந்தச் சூழலில் புத்தகம் வெளியிடுவதே பெரிய விஷயம். இதில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தருவதெல்லாம் சாத்தியமேயில்லை” என்று பேசினார்.
இன்னொருவர், “அப்படியெல்லாம் இல்லை. இன்று வாசகர்கள் தேடித் தேடிப் படிக்கிறார்கள். வாசிப்பு குறைந்து விட்டது என்[பதெல்லாம் சும்மா” என்று அதே மேடையில் பேசினார்.
இதை வாசித்ததும், “ராயல்டி தருவதெல்லாம் சாத்தியமேயில்லை” என்று பேசியவர் ஒரு பதிப்பாளர் என்றும்,”இல்லையில்லை ! வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று பேசியவர் ஒரு படைப்பாளர் என்றும் நமக்குத் தோன்றும்.
அதுதான் இல்லை.
ராயல்டி தரும் நிலைமை இன்று இல்லை என்று பேசியவர் சிறந்ததோர் எழுத்தாளர்.
வாசகர்கள் தேடித்தேடிப் படிக்கிறார்கள் என்று பேசியவர் சிறந்ததொரு பதிப்பாளர்.
முன்னவர், “மணல்கடிகை” நாவல் எழுதிய நண்பர் திரு.கோபாலகிருஷ்ணன்.
பின்னவர் விஜயா பதிப்பக நிறுவனர் திரு. மு.வேலாயுதம்.
திரு.சு.வேணுகோபால் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய திறனாய்வு நூல் கோவையிலுள்ள தியாகு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்த விழாவில்தான் இந்த முரண் உரைகள்.
பதிப்பகத்தார் திரு. வேணுகோபாலுக்கு நூலுக்கான ராயல்டி தொகையை மேடையிலேயே தரவும் மனிதர் பதறிப்போய் விட்டார். “கீழே வந்ததும் ராயல்டி தொகையை உங்களுக்கே வேணாலும் தந்துடறேன்”என ஏற்புரையில் நான்கைந்து முறை சொல்லிவிட்டார் திரு.சு.வேணுகோபால்.
அவர் பேசப்பேசத்தான் விபரம் தெரிந்தது. இதுவரை அவர் எழுதிய நூல்களிலேயே இந்த நூலுக்குத்தான் முதன் முதலாக ராயல்டி வாங்குகிறாராம். அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும் அவை அதிர்ந்து போனது.
நுண்வெளிக் கிரணங்கள் நூலில் தொடங்கி வெண்ணிலை,களவுபோகும் புரவிகள், கூந்தப்பனை, ஆட்டம்,திசையெல்லாம் நெருஞ்சி, என்று பற்பல நூல்கள் எழுதியுள்ளவர். இதுவரை ராயல்டி தொகையே பெற்றதில்லை என்பது பலர் புருவங்களை உயர்த்தியது.
தந்த ராயல்டியை திருப்பித் தந்துவிடுகிறேன் என அவர் சொல்வதும், அவர் நண்பர் ராயல்டி தருவதெல்லாம்சாத்தியமில்லை என்று சொல்வதும் அவர்கள் ராயல்டி விரும்பாதவர்களா அல்லது அவர்களுக்கு தரப்படுவதில்லையா என்றெல்லாம் எண்ணத் தூண்டுகிறது.
ஒருபக்கம் பதிப்பகங்கள் ராயல்டி கணக்கு வழக்கில் குளறுபடி செய்வதாய் குற்றச்சாட்டுகள் . இன்னொருபுறம் இதுபோன்ற சர்வபரித்தியாகங்கள். எழுத்துலகின் தன்மையும் இருவேறுதான் போலும்