ஆய்வுரைத்திலகம் என்றும் இலக்கியப் பேரொளி என்றும் போற்றப்பட்ட அறிவொளி அவர்கள் காலமானார். தமிழ் இலக்கிய உலகில் மேடைத்தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என ஒன்று இருந்தது. கி.வா.ஜகந்நாதன், திருச்சி பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த மறுமலர்ச்சிக்காலத்தில் தளகர்த்தர்களில் ஒருவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிய முற்பட்டும் அவருடைய இயல்புகள் அவரை நீண்ட காலம் பணிபுரிய விடவில்லை.
வாழ்க்கையை ஒரு பரிசோதனைக்கூடமாக்கிக்கொண்டு,
விதவிதமான சோதனைகளை அவர் நிகழ்த்தி வந்தார். மாட்டுப்பண்ணை வைப்பது, கீரைத் தோட்டம் போடுவது, கீரை வைத்தியம் செய்வது, வண்ணவண்ண கற்களை வைத்துக்கொண்டு அதன் மூலம் மக்கள் பயன்பெறும் விதமாக ஜோதிடம் பார்ப்பது என்று ஆர்வத்தின் காரணமாக சூழல்காரணமாக அவர் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்மேடைகளில் நகைச்சுவை என்பது புதிய நிறத்தில் வழங்கியவர் அறிவொளி. அவருடைய நகைச்சுவை தர்க்கரீதியானது; தனித்தன்மை கொண்டது. பொதுவாகவே, வழக்காடு மன்றங்களில் அவர் எதிர்வழக்காடுபவராகவே அறியப்பட்டிருக்கிறார். நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்க, ஆ.வ.ராஜகோபாலன் அவர்கள் வழக்குத் தொடுக்க, வழக்கை மறுப்பவராக அறிவொளி அவர்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற கூட்டாக இருந்தது.
அந்த மேடைகளில் அறிவொளி அவர்கள் பின்பற்றிய உத்தி மிகவும் வித்தியாசமானது. ஒரு பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கு அந்தப் பாத்திரத்தினுடைய சிறந்த செயல்களை வரிசைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாத்திரத்தை கேள்விக்குரியதாக்கக்கூடிய மற்ற கதைமாந்தர்களையும் அவர் கேலிக்குக்கு உள்ளாக்கி, தன் பாத்திரத்தை நியாயப் படுத்துவார்.
எடுத்துக்காட்டாக, கர்ணன் குற்றவாளி என்கிற வழக்கு நடைபெறுகிறது. தன்னுடைய தந்தையை ஒரு க்ஷத்திரிய அரசன் வெட்டிக் கொன்றதால், தன் தாயினுடைய அழுகுரல் கேட்டு, ஓடோடி வந்த பரசுராமர், தன் தாய் மொத்தம் 21 முறை மார்பில் அடித்துக்கொண்டு, அழுததால் 21 தலைமுறை க்ஷத்திரிய வம்சத்துக்கு தானே எமனாகத் திகழ்வது என்று முடிவெடுத்துக்கொண்டார் என்று எதிர்வழக்காடுபவர் சொன்னால், அத்தகையவரிடம் கர்ணன் க்ஷத்திரியன் என்பதை மறைத்து கல்வி கற்றது குற்றம் என்பதை வழக்காக வைப்பார்கள்.
இதை மறுக்க முற்படுகிற அறிவொளி, தன்னுடைய கிண்டலை பரசுராமரிடமிருந்து ஆரம்பிப்பார். தாய் அழுவதைக் கேட்டால் ஓடிவருவானா? இல்லை எவ்வளவு முறை மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறாள் என்று ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டு வருவானா? இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தன் வாதங்களைத் தொடங்குவார்.
அவர் மேடைப்பேச்சாளர்களும் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கமுடியும் என்று காட்டியவர். கம்பன் குறித்து அவர் எழுதிய நூல்கள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய அவர் எழுதிய புத்தகம் எல்லாம் அவருக்கு பெரிய பெருமைகளைத் தேடித்தந்தன.
வாழ்வினுடைய வேதனைகள் எதையும் பொருட்படுத்தாத மலர்ந்த முகமும் மலர்ந்த மனமும் அவருடைய அரிய பண்புகள். என்னுடைய பாட்டனார், தாளாளராக விளங்கிய பூம்புகார் பேரவைக் கல்லூரியில் அவர் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தார். என்னுடைய பாட்டிக்கு ஏழரைச் சனி நடந்தபோது, அவருக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும், எங்கள் வீட்டுக்கு அறிவொளி அவர்கள் வந்து நளன் சரித்திரம் படித்த கதையை மிக சுவாரசியமாகப் பேசுவார். என்னோடு பகிர்ந்துகொள்வார்.
நான் என்னுடைய 50ஆவது நூலாக திருக்கடவூர் என்ற நூலை எழுதியபொழுது, அப்போது எழுந்த ஓர் ஐயத்தை மிகச் சரியாக தீர்த்தவர் அவர்தான். திருக்கடவூர் கல்வெட்டுகளில் படைஏவிய திருக்கடவூர் என்று காணப்படுகிறதே என்று கேட்டபோது, அதற்கான காரணத்தை அவர் சொன்னார். ஒரு படை ஏவும் தளமாக ராஜராஜசோழன் வைத்திருப்பான். ஒரு ரெஜிமண்ட் அங்கே நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்றார்.
ஒன்று சரியில்லை என்றால் அது சரியல்லாமல் சரியல்ல என்று தொடங்கி அவருடைய வழக்கம் தமிழ் மேடைகளில் புதுமையான முயற்சியாக கருதப்பட்டது. இதுவரை அறிவொளியின் பாணியிலான நகைச்சுவை அவருக்குப் பின்னால் வந்த யாரும் முன்னெடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அத்தகைய பெருமைக்குரிய அறிஞர் அறிவொளி அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.