மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய
கவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி.
—
ம.இலெ.தங்கப்பா
மரபின் மகத்துவ உயிர்ப்பு
மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன.
யாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் உள்ள ஆவேசமும் அந்த ஆவேசத்தின் ஆழம் பொதிந்த சொற் சொட்டுகளும் வியப்பூட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் எந்திரமய வாழ்க்கையினூடே சங்க காலப் புலவரொருவர் பயணம் பாடுமோ அவற்றையெல்லாம் தங்கப்பா பாடுகிறார்.
பேருந்துப் பயணமொன்றில் அழுக்கும் வியர்வையுமாய் ஏறிய உழவர்க்கு அருகிலிருந்த ஒருவர் இடம்தரத் தயங்க, தன்னருகே அமர்த்திக் கொண்ட தங்கப்பா, ‘நெஞ்சோடு கூறியதாய்’ ஒரு கவிதை இதற்குச் சான்று.
“பழங்குடி மகனே! பழங்குடி மகனே!
உழுதொழில் ஆற்றி இவ்வுலகு புரந்து ஓம்பினும்
இழிகுலம் ஆகிய பழங்குடி மகனே!
வாழிய! வந்தென் அருகில் அமர்க!
அழுக்குடல் கந்தல் அரைத்துணி கண்டாங்கு
இழுக்குற்றனர் போல் எரிமுகந் திருப்பி – நிற்கு
இடந்தரத் தயங்குவார்க்கு உடைவது என்கொல்!
கிடந்தனர் சிறியர்! என் கிட்டி வந்தமர்க!”
உழவர் அருகில் வந்து அமரப்பொழுது தந்து, அவர் அமைதியடைந்த பின் தொடர்கிறது கவிதை.
“வெள்ளை ஆடையும் விரைசெறி மேனியும்
எண்ணெய்ப் பூச்சும் இருப்பினும், பலரிங்கு
உள்ளம் அழுகி உணர்வெலாம் நாறும்
கள்ளர், களியர், காமவெங் கயவர்!
நின்னினுங் கோடி நிலை கீழ் ஆவர்!
அன்னவர்த் தொடலும் அருவருக்கிறேன்!
நின்னை என் இருகை புல்லவும் விழைவேன்!”
இத்தனை சொல்லியும்கூட அந்த உழவருக்குக் கூச்சம் அகன்ற பாடில்லை போலும்! கவிதை தொடர்கிறது.
“ஒட்டிவந்து அமர்க, உடல் உராய்ந்திடுக!
கட்டிய கந்தல், என் துணி கறை செய்க!
மேலுறும் வியர்வை என் மேனியை நனைக்க!
தோள் நனிதொடுக! தொடுக நம் உளமே!”
என்று, தயக்கத்துடன் தள்ளி அமர்ந்த உழவரை அருகில் இழுத்தபடி கவிதைப் பயணமும் பேருந்துப் பயணமும் தொடர்கிறது.
உழவருக்கு இடம்தர மறுத்தவர்களை, ‘அவர்கள் கிடக்கிறார்கள்! இங்கே வந்து உட்கார்!’ என்று சொல்வதைப்போல,
“கிடந்தனர் சிறியர்! என் கிட்டி வந்தமர்க!” என்று எழுதும் இடம் வெகு அழகாக அமைந்திருக்கிறது.
மரபு வயப்பட்ட மனம், பழைய பதிவின் சாயலில் புதிய நிகழ்வுகளை எழுதிப் பார்க்கும் இயல்பு கொண்டதுதான். போருக்குச் சென்று மீளும் வீரர்கள், தங்கள் இல்லங்களின் வாயிலில் நின்று உள்ளே உறக்கத்திலிருக்கும் காட்சியை கலிங்கத்துப் பரணி காட்டுகிறது.
“வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ!”
என்ற அந்தக் கடைத்திறப்பின் போக்கில், புயலுக்கஞ்சி வீட்டுக்குள் இருக்கும் பெண்களைக் கதவு திறக்கக் கேட்கும் பாடல்களை எழுதுகிறார் தங்கப்பா.
“குருதிச் சிவப்பை விழிவாங்கக்
குளிர்க்கண் கருப்பை உடல்வாங்க
உருகி வெய்யிலில் உழைத்திடுவீர்
ஓட்டைக் கதவம் திறமினோ”
“அரிசி வடித்த கொதிநீரும்
அகத்திக் கீரைப் புன்கூட்டும்
பெரிய உணவாய்க் கொள்மடவீர்
பிளந்த கதவம் திறமினோ”
“எழுந்த காற்றின் சீற்றத்தால்
இடையின் துகிலும் புனல்உய்க்கக்
கிழிந்த பாயை எடுத்துப்பீர்
கீறல் கதவம் திறமினோ”
“பொங்கும் மழைக்கே நடுநடுங்கிப்
புகுந்த குடிசை சுவர் இடிய
அங்கும் இருக்க வகைஅற்றீர்
அழிந்த கதவம் திறமினோ”
என்றெல்லாம் எழுதிச் செல்லும் தங்கப்பா, சங்கப் பாவலர் தம் தோன்றல் என்ற முத்திரையோடு சிற்றிலக்கிய வகைமைகளையும் சிறப்புக் கையாள்கிறார்.
காரிருளின் கம்பளி விரிக்கும் பேரிரவு, இவர் கண்ணுக்குப் பேயணங்காய்த் தெரிகிறது. உலகை இருள் அணைக்கும்போது இரவெனும் பேய் உலகையும் ஏன் வானையும் கூடத் தின்பதுபோல உணர்கிறார் இவர்.
“பகற்பொழுதில் எவ்விடத்தே
பதிவிருந்து நோக்கினளோ?
தகதகக்கும் வன்பசியால்
தன் அன்பு கெட்டனளோ?
முகத்திலிருள் கடுகடுக்க வந்தாள் – அவள்
மூண்ட பசியால் உலகைத் தின்றாள்.
செக்கச் சிவந்த மலர்ச்
செவ்வானத் தோட்டத்திலே
மொக்குமல்லி பூத்ததுபோல்
முகில்கிடந்த பேரழகை
அத்தனையும் இரவுமகள் உண்டாள் & அவள்
அழற்பசிக்கு வானினையும் கொண்டாள்.
தண்பொருநைப் பூங்கரையில்
தாவிஅணில் பாட்டிசைக்க
வண்டொலிக்கும் சோலையினை,
வயிற்பயிரை, வானழகை,
உண்டழித்துக் கங்குல்மகள் நின்றாள் – பின்
ஊர்க்குள்ளும் வாய்திறந்து சென்றாள்”
இப்படி, இரவு பேயுருவாய்த் தென்பட்டாலும் விடியல் என்பது சேயுருவாய்த் தென்படுகிறது. விடியல் என்பது சின்னஞ் சிறுவனாகவும் பச்சிளஞ்சேயாகவும் இவர் பாடலில் துயில்கலையக் காண்கிறோம்.
“கருக்கல் எனும்சிறு செல்லப்பயல் – இளங்
காற்று விரலின் குளிர்ச்சிலிர்ப்பால்
உறக்கமாம் போர்வை முகம் விலக்கி – என்
உணர்வை வருட, எழுந்திருந்தேன்”
“பன்மணி ஆடும் கிலுகிலுப்பை – தன்னைப்
பாட்டிதன் பேரன்முன் ஆட்டுதல்போல்
பொன்னொளிர் வைகறைச் சேயினுக்கோ இங்குப்
புட்கள் கிலுகிலு ஆட்டி நிற்கும்”
என்று கேட்கிற இடத்தில் இயற்கையில் தோய்ந்த கவிஞரின் இதயம் நன்கு புலனாகிறது.
வைகறையையே ஒரு சேயாகக் காணும் கவிஞர், குழந்தைகள் உலகுக்கு எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா? சிறுவரும் சிறுமியரும் மணல்வீடு கட்டி விளையாடும் காட்சியை வேடிக்கை பார்க்கிறது இவரின் கவியுள்ளம்.
“சின்னஞ்சிறு மணல்வீடு சேர்ந்து
செய்வதில்தான் என்ன பாடு!
பொன்னென வெண்மணல் கொள்வார்–சிலர்
போய்ச்சிறு கற்கள் கொணர்வார்
முன்னறை பின்னறை வைப்பார் ஒரு
மூலையில் திண்ணையும் வைப்பார்
இன்னும், கதவுகள் என்றே – தென்னை
ஈர்க்கினைப் பின்னி அடைப்பார்.”
வீடும் கடையும் கட்டி விளையாடும் குழந்தைகளைப் ரசித்துப் பார்க்கிறார் கவிஞர்.
“மிக்க விருப்பத்தினோடே அவர்
வீட்டைக் கடையினை ஆள்வார்
தக்க பெரியவர் போலே அவர்
தாம் செய்யும் நாடகம் என்னே!
ஒக்கலில் கல் ஒரு பிள்ளை – பால்
ஊட்டியிருப்பாள் ஓர் அன்னை
வெட்கப்படுவள் ஓர் பாவை – பொய்
மீசை முறுக்குவான் ஓர் சேய்”
பொய்ச் சமையல் செய்து விளையாடும் குழந்தைகள், கவிஞரைக் கண்டதும் தங்களுடன் விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்த ‘விருந்தில்’ கலந்து கொண்டபோது தான் குழந்தைகள் உலகம் மற்றவர்களின் உலகத்தைவிட உயர்ந்தது என்பதை உணர்கிறார் தங்கப்பா.
அப்பக்கம் சென்றிட்ட என்னை – மிக
அன்பாய் விருந்துக்கழைத்தார்
சப்பணம் கூட்டிடச் சொன்னார் – ஒரு
தட்டெனவே இலை போட்டார்
குப்புறச் சோற்றை வட்டித்தார் – நல்ல
குழம்பென நீரினை வார்த்தார்
ஒப்புடன் உண்ணல்போல் உண்டேன் – அவர்
உற்ற மகிழ்ச்சி என் சொல்வேன்!
வீட்டின் சுவர்களும் மண்ணே! அவர்
விரும்பும் சுவைப் பொருள் மண்ணே!
கூட்டுக் கறிகளும் மண்ணே – நெய்க்
குப்பியும் காண்பது மண்ணே
ஏட்டினை ஆய்பவர்க்குண்டோ – மலை
ஏறும் திறத்தவர்க்குண்டோ
காட்சிப் புலவர்க்கும் உண்டோ – இந்தக்
கற்பனை செய்திடும் ஆற்றல்!”
என்கிறார். நியாயமான கேள்விதானே!
இயற்கையோடும், ஏழை எளியவர்களோடும் குழந்தைகளோடும் கொஞ்சிக் குலாவுவதோடு நின்று விடுவதில்லை கவிஞர் தங்கப்பாவின் கவிதைகள். அவை கலக நிலைபாட்டையும் கைக்கொள்கின்றன. கவிஞர்கள் குயிலையும் கிள்ளையையும் போற்றும் தன்மையிலிருந்து விலகி ஆந்தையை ஆராதிக்கிறார் இவர்.
பாரதியின் குயில் பாட்டு, இலக்கியத்தோடு ஒப்பு நோக்கத்தக்கதாய் அமைந்திருக்கிறது, தங்கப்பாவின் ‘ஆந்தைப்பாட்டு’. ஒருநாள் காலார நடந்து செல்கிற கவிஞர் சுடுகாட்டுப் பக்கமாய் வருகிறார். அங்கு குடிகொண்டிருக்கும் ‘சொல்லொணாப் பேரமைதி’ அவரை ஆட்கொள்கிறது. அந்தச் சூழலில் தன்னை மறந்து ஈடுபடுகிறார்.
“சுற்றுமுற்றும் நோக்கினேன்; சுக்குக்கற் பாறைமேல்
பற்றியங்குச் சாம்பல் படர்ந்திருக்கும்;ஆங்காங்குப்
பட்டுத் தலைகருகிப் பச்சையெல்லாம் காய்ந்தொழிந்த
குட்டைப்புல், முட்செடிகள், குத்தாய் வளர்ந்திருக்கும்
முள்ளெல்லாம்வெள்ளெலும்பாய்மூதெலும்புக்கூட்டைப்போல்
வெள்ளையாய்க் காய்ந்தவொரு வேலமரம் நின்றிருக்கும்.
கூனல் நரைக் கிழவன் கோலூன்றி நிற்பதுபோல்
சூன்விழுந்து மேனி சுருண்டோர் மரம் நிற்கும்
கள்ளி படர்ந்திருக்கும் கற்பாறை மூலையிலே
குள்ள முயலொன்று துள்ளிக் குதித்தோடும்.
நெல்லிமரம் சுள்ளிகளாய் நிற்கும்; நடக்கையிலே
புல்லின் நுனிகுத்தும். போதையிலே கால்தடுக்கி
வெள்ளெலும்பு மின்னும்; விறகெரிந்து வீழ்ந்திருக்கும்.
கொள்ளிக் குடஞ்சிதறி ஓடாய்க் குவிந்திருக்கும்.”
என்று சுடுகாட்டுக் காட்சியை நுட்பமாக விவரிக்கிறார் தங்கப்பா.
இங்குதான் ஆந்தை அவருக்கு அறிமுகமாகிறது. ஆந்தை பாடும் பாட்டு, மந்திரத்தாலே, நெஞ்சின் மயக்கத்தாலோ மாந்தர் பாட்டாக அவர் செவிகளில் சேர்கிறது. மாந்தரின் இழிநிலையை ஆற்றாது ஆந்தை அரற்றுவதாக அப்பாடல் அமைகிறது.
அழகற்ற பறவையென்று ஆந்தை கருதப்படுவதற்கு மாறாக, ஆந்தையின் ‘அழகு’ கவிஞரை ஈர்க்கிறது.
“வட்டக் கருவிழியும் வன்மை அலகும் மிகக்
குட்டைக் கழுத்தும் குவிஉடம்பும் என் நெஞ்சில்
ஆழப்பதிந்தென் என் அகத்தில் இனித்தனவே” என்கிறார்.
பாரதி, குயில் பாட்டில் குரங்கை வர்ணிக்கிறபோது,
“மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ”
என்று பாடுவதை இந்த இடம் நினைவுபடுத்துகிறது.
ஆந்தையுடனான கவிஞரின் உரையாடல் தொடர்கிறது. மக்களைக் கண்காணிக்கும் பணியில் தான் இறங்கியுள்ளதாகச் சொல்லும் ஆந்தை, இருளில் நடக்கும் சமூகக் கொடுமைகளை விவரிக்கிறது.
“மக்கள் நிலையறியும் வேட்கையால் மணடிருளில்
புக்கு நகர்நாடு போய்க்கண்டு மீள்வேன் நான்.
கூரையிலே வீற்றிருப்பேன்; சாளரத்தில் குந்திடுவேன்.
காரிருளின் தீமையெல்லாம் கண்டு புழுங்கிடுவேன்.”
என்கிற ஆந்தை நள்ளிருளில் மக்கள் நடத்தும் பொல்லாக் கூத்துகளைப் பட்டியலிடுகிறது.
“வள்ளுவத்தின் மாண்புரைத்து வாய்கிழியும் ஓர்புலவன்
நள்ளிரவில் மாற்றான் மனைதோள் நயப்பதையும்
முன்னின்று கைக்கூலி பெற்று நடப்பதையும்
காதல் தவறுடையாள் கைமகவைக் கொல்வதையும்
பாதியிராகப் பூசையென்று பார்ப்பான் ஓர் கோயிலிலே
தங்கநகை கழற்றித் தன்மடிக்கு மாற்றிவிட்டு
மங்கலுற்ற பித்தளையைக் கற்சிலைக்குப் பூட்டுவதும்
அஞ்சாத கொள்ளையும், ஆர்வமிகு சூதாட்டம்
விஞ்சு கொலைத் தொழில் வெய்ய பழிதீர்ப்பும்
கண்ணேரில் கண்டுள்ளேன்; காணாத தெத்தனையோ?
எண்ணில் உளம்நடுங்கும் என்ன உலகமடா?
காட்சிக் கொடுமையிவை கண்டு பொறுக்காமல்
வீட்டருகே பன்முறை நான் வீறிட்டுக் கத்திடுவேன்”
என்கிறது ஆந்தை.
பாரதியின் குயிலைப் போலவே மங்கை வடிவுற்று, மிகப்பலப் பேசி, மீண்டும் ஆந்தை வடிவெடுத்து, தாவிப் பறந்தோட கண்டதெல்லாம் கனவென்று கண்டுகொள்கிறார். இந்தக் கவிதையின் நயம் பாராட்டி நகர்ந்து விடாமல் விழிப்புணர்வு கொள்ளுமாறு வேண்டி நிறைவு செய்கிறார் தங்கப்பா.
“விஞ்சு சுவையை வியக்காமல் இவ்வுலகம்
கொஞ்சமேனும் தன் குறையுணர்ந்தே இக்கதையால்
கூன்நிமிர்ந்தால் சற்றே குருட்டு விழிதிறந்தால்
நான்மறப்பேன் என்றன் துயர்”
என்று முடிகிறது ஆந்தைப்பாட்டு. ஆனாலும் ஆந்தை மீதான கவிஞரின் காதல் முடிந்தபாடில்லை.
அடுத்த சில பக்கங்களிலேயே, ஆந்தையை கூவு என்று அறைகூவல் விடுக்கிறார். ஆந்தைக்கு “மாலைப் பெரும்புள்ளே” என்று இதில் புதிய பெயர் சூட்டுகிறார். ஆந்தைக்கு ஆதரவாய்ப் பாடும் போது, குயில்போல் வாழும் மனிதர்களையும் கண்டிக்கிறார்.
“காக்கையின் கூட்டில்போய்க் கள்ளத் தனம் புரியும்
போக்கிலாப் புன்குயில்போல் பொய்ப்பதெல்லாம் தாக்குறவே
வன்மைக் குரலெடுக்கும் மாலைப் பெரும்புள்ளே
என்முன் நீ வாராய் இனிது.”
“மயல்அழிக, மென்மை மயக்கொழிக என்று
குயில் நடுங்கக் கூவுக நீ”
“கூர்த்த விழிப்புள்ளே, குறையுலகின் தீங்கெல்லாம்
பார்த்துச் சினமுற்றுப் பாய்வாய் நீ”
“நள்ளிரவில் கண்விழிக்கும் நாதப் பெரும்புள்ளே
கள்ளர் நடுங்கக் கரைவாய் நீ”
என்றெல்லாம் ஆந்தையை அழைக்கிறார் கவிஞர்.
351 பக்கங்களுக்குத் தொகுக்கப்பட்டிருக்கும் ம.இலெ.தங்கப்பா பாடல்கள், “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தமிழினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்மரபின் நேரடிப் பதிவாய், அரிய பாடுபொருட்களின் சூடான தொகுப்பாய் ஒளிர்கிறது, “உயிர்ப்பின் அதிர்வுகள்.”
வெளியீடு : தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14
விலை ரூ.225.
- மரபின்மைந்தன் முத்தையா
(ரசனை இலக்கிய இதழில் வெளியாகி, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை.)