அவளைப் புரிந்தால் அனைத்தும் புரியும்!
ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன். காணாதன காண்கிறார்கள். காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள்.
ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார். “ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையது என்று பிடிபடுகிறது. அந்த மனத்திலிருந்து என்ன வெளிவரும் என்று தெரியுமாதலால் அதை முழுவதும் படிக்காமலேயே அதில் என்ன இருக்கிறதென்று தெரிந்துவிடுகிறது” என்று.
எல்லோராலும் அறியப்படாத அளவு ரகசியமும் ஆழமும் கொண்டவை நான்மறைகள். நான்மறைகளாலும் அறியப்பட முடியாத அற்புதமாய் விளங்குபவள் அம்பிகை. ஆனால் அம்பிகையை துணையாய் தொழும் தெய்வமாய் பெற்ற தாயாயுணர்ந்துவிட்டால் வேறென்ன வேண்டும்? அம்பிகையையே நேரடியாக விளங்கிக் கொண்டபிறகு அம்பிகையை விளக்க முற்படும் வேதங்கள் விளங்காதா என்ன?
“அறிந்தேன் எவரும் அறியா மறையை” என்கிறார் அபிராமி பட்டர்.
யாராலும் அறியப்படாத மறையை அறிந்து கொண்டதன்மூலம் அபிராமிபட்டர் தெளிந்ததென்ன?
“அறிந்தேன் எவரும் அறியா மறையை – அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே.”
ஏற்கெனவே அனுபவ ரீதியாக அபிராமியின் திருவடிகளே அனைத்தும் என உணர்ந்திருந்ந உண்மையை நால்வேதங்களையும் கற்றதன் மூலம் உறுதி செய்து கொள்கிறார் அபிராமிபட்டர். அம்பிகையின் திருவடிகளே சதம் என்பது எல்லா வகைகளிலும் உறுதிப்பட்ட பிறகு அதுவரை நம் உறவு வட்டத்தில் தென்பட்ட மனிதர்களில் சிலர் தாமாகவே விலகிவிடுவது இன்றும் கண்கூடாய் பலரும் காண்கிற ஒன்று. எந்தப் பயனையும் தராத வெற்றுத் தொடர்புகள் விலகுவது தாமாகவும் நிகழும். நாமாகவும் முயன்று விலக்குவோம்.
அப்படி விலகிச் செல்பவர்கள் யாராக இருப்பார்கள் என்றால் அம்பிகையின் அடியார்களுடைய பெருமைகளை எண்ணும் நற்பேறு வாய்க்காத அளவு தீய வினைகளில் கட்டுண்டு, நரகத்தில் தலைகீழாய் விழக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அருள்நெறி சாராதவர்களாக, தங்கள் குறுகிய விருப்பங்களன்றி வேறொன்றும் பாராதவர்களாக இருப்பார்கள்.
அம்பிகையை உணர்ந்தவர்களுக்கு வேதங்கள் கல்லாமலே கூடப் புலப்படும். ஆனால் அதுபோதாது. சராசரிக்கும் கீழான எண்ண ஓட்டங்கள் கொண்ட மனிதர்களைவிட்டு விலகுவதும் நிகழ வேண்டும். அதுதான் அருள்நெறிவிட்டு வழுவாத வாழ்க்கைப் பயணத்தை உறுதி செய்யும்.
“அறிந்தேன் எவரும் அறியா மறையை ; அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே! திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தேவிழும் நரகுக்கு உறவாய மனிதரையே.”