அபிராமியின் அடிதொழும் அன்பர்களின் பட்டியலை வெளியிடுகிறார் அபிராமிபட்டர். இது முழுப்பட்டியல் அல்ல. முதல் பட்டியல். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும்.
“மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக்கே கோமளமே”
அம்பிகையை வழிபடுவதில் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் மாயா முனிவர்களுக்கும் போட்டா போட்டிதான். இதில் மாயா முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக் குறிக்கும் அதே நேரம் திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்ற மார்க்கண்டேயரையும் குறிக்கும்.
அம்பிகையை அன்றாடம் வணங்குபவர்கள் பட்டியலில் மார்க்கண்டேயர் இடம் பிடித்திருப்பதில் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. எமதர்மனை காலசம்ஹாரமூர்த்தியாகிய சிவபெருமான் இடது திருவடியால் உதைத்தார். இடது பக்கம் அம்பிகைக்குரியது ஒரு தரப்பினருக்கு சார்பாக அரசாணை வருகிறதென்றால் அந்த அரசாணையை நிறைவேற்றுபவர் அரசாங்க உயர் அலுவலராக இருப்பார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பார்கள். முதலமைச்சர் சொல்லி அலுவலர் செய்தார் என்பதுதான் காரணம். அதுபோல் கூற்றுதைத்தவர் சிவபெருமான் என்றாலும் வாம்பாகம் அம்பிகைக்குரியது. எனவே மார்க்கண்டேயர் நன்றி தெரிவித்து வணங்குவதில் வியப்பென்ன?
அம்பிகையின் திருவடித் தாமரைகளை எத்தனையோ வணங்கினாலும் அது வாடுவதில்லை. “சேவடிக் கோமளமே” என்பதற்கு திருவடித்தாமரை என்றும் பொருள். அனைவராலும் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்ட தாமரையே என்றும் பொருள்.
கொன்றைத்தார் சூடிய தன் சடாபாரத்தில் குளிர்ந்த நிலவையும், நாகத்தையும் கங்கையையும் சூடியவராகிய சிவபெருமானும் அம்பிகையும் தன்னுள்ளத்தில் வந்து பொருந்தி நிற்க வேண்டுமென்று கேட்கிறார் அபிராமி பட்டர்.
“மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புத்தி எந்நாளும் பொருந்துகவே”
அம்பிகையின் திருவடிகளை சிவபெருமானே வணங்குகிறார் என்னும் செய்தியைப் பின்னர் காணப் போகிறோம். எனினும் தம்பதி சமேதராக வருகிறபோது உன் கணவரும் நீயும் என்று சொல்வதுதானே மரபு. தன் மகள் கணவனுடன் வருகிற போது தந்தையின் நாவில் வரும் முதல் வார்த்தை “வாங்க மாப்பிள்ளை” என்பதாகத்தான் இருக்கும். அதுபோல் பெருமானின் மேன்மைகளை முதலில் சொல்லி அவரும் நீயுமாய் என் புந்தியில் வந்து பொருந்துங்கள் என்று வேண்டுகிறார்.
ஒரு பீடம் அமைக்கப்படுகிறதென்றால் அதில் எழுந்தருளப் பெறவுள்ள மூர்த்திக்கு மிகச்சரியாக அந்த பீடம் அமைக்கப்படும். மூர்த்தியைக் கொணர்ந்து பீடத்தில் அமர்த்துகையில் அது மிகச்சரியாகப் பொருந்தும். தன்னுடைய புத்தியானது, அம்மையும் அப்பனும் வந்தமரும் விதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாய் “புந்தியில் வந்து பொருந்துகவே”என்கிறார் அபிராமிபட்டர்.