வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான். அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின் வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ இல்லாமலும்கூட எத்தனையோ பிறவிகளாய் பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப் பேரழகியாம் அபிராமி எவ்வண்ணம் அந்த வினைகளை அகற்றுகிறாள் என்பதை சுவைபடச் சொல்கிறார் அபிராமிபட்டர்.
அவளைப் பேரழகி என்ற கையோடு “எந்தை துணைவி” என்றும் அழுத்தம் தருகிறார். சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான். அகோர மூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி என்றும் சொல்லலாம். அவரைவிட பேரழகி என்று கொள்ளலாம்.
அழகின் சிறப்பில் மட்டுமா அம்பிகை தனித்து நிற்கிறாள்? வினைகளை அகற்றும் விதத்திலும் அவளுக்கு நிகர் அவள்தான். சிவபெருமான் பற்றுகளை அறுக்கும் பரமன். வலிக்க வலிக்க அகற்றுவார். “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனின் காரியம்” அப்படி.
அம்பிகையோ, “என் பாசத்தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள்” என்கிறாள். குழந்தை உறங்கும் நேரத்தில் அதன் துயிலைக் கலைக்காமல் அது முகத்தைக்கூட சுளிக்காமல் மெதுவாய் மிக மெதுவாய் நகங்களைக் களையும் அன்னைபோல் வினைகளைக் களைகிறாளாம் அபிராமி.
“சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள்”
மனமென்னும் அந்தரங்கத்தில் நிறைபவளாய், ஆகாயமென்னும் அந்தரத்தை ஆள்பவளாய் இருக்கும் அபிராமி. மகிடனின் தலைமேல் திருவடி பதித்து அவனுடைய அகந்தைக்கு மட்டுமின்றி அறியாமைக்கும் அந்தமாய் நிற்கிறாள்.
சியாமள வண்ணத்தினளாகிய நீலியும் அவள். கன்னிமை அழியாத அன்னையும் அவள். நான்முகனின் அகந்தை அழியுமாறு அவனுடைய சிரசினை சிவபெருமான் கொய்தார். அந்த பிரம்ம கபாலத்தை அம்பிகை தன்னுடைய கைகளில் கொண்டிருக்கிறாள். அவளுடைய திருவடிகளை நான் என் மனதில் கொண்டிருக்கிறேன் என்கிறார் அபிராமிபட்டர்.
“சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே”