ஒருவர் செய்து கொண்டிருக்கிற செயலுக்கும், அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நினைவுக்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்றில்லை. பழக்கப்பட்ட பாதையில் வண்டிமாடு பயணம் செய்யும் போது வண்டிக்காரர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். தான் பயணம் செய்கிறோம் என்றுகூட அவருக்குத் தெரியாது. ஆனால் அவர் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதாகத் தான் எல்லோரும் சொல்வார்கள்.
அதே போல சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமிபட்டர். அவருடைய உடம்பு தான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் அவர் நிற்பது போல் தெரியும். ஆனால் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார். மற்றவர்களுக்குத்தான் அவர் படுத்து உறங்குவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார்.
“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை”
அபிராமி சந்நிதிக்கும் வீட்டிற்குமாகப் போய்வரும் பாதையில் எதிர்படும் பெண்களையும் ஆண்களையும் பார்க்கிறார் அபிராமிபட்டர். அனைவரும் அம்பிகையின் திருவடி நிழலில் சஞ்சரிக்கிறார்கள் என்று புரிகிறது. அத்தனை உயிர்களுக்கும் அடைக்கலாமாய்த் திகழும் அம்பிகையின் திருவடிகளை வணங்குகிறார்.
எதிர்படுபவர்களோ , அவர் தம்மை வணங்குவதாக நினைத்து பதில் வணக்கம் சொல்கிறார்கள். “என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்.”
வழிவழியாக எழுதாக்கிளவியாக வேதம் பயின்ற பரம்பரையில் வந்தவராகிய அபிராமிபட்டருக்கு வேதங்களின் முடிபாகக் காணப்படும் விழுப்பொருளே, சந்நிதியில் அபிராமிவல்லியாய் அருள் புரிவதை மிக நன்றாக உணர முடிகிறது.
வேதங்கள் முயன்று காணும் மேம்பட்ட உண்மையை தன் அன்னையாய் அருள்பாவிக்கும்போது வேறெதையும் சிந்திக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. வேதங்களின் விழுப்பொருளே அம்பிகை என்று அபிராமிபட்டருக்கு உணர்த்தியது எது? அதுவும் அன்னையின் அருள்தானே .
எந்த அன்னை உமையென்னும் திருநாமத்துடன் இமயத்தில் பிறந்தாளோ அவளே யாதுமாகி நிற்கிறாள். நிலைபேறான ஆனந்தத்தை தரும் முக்தி ரூபமாகவும் அவளே திகழ்கிறாள். இந்தத் தெளிவை உள்நிலையில் உணர்ந்த பிறகு அபிராமிபட்டரின் ஒவ்வோர் அசைவும்கூட அபிராமி தியானமாகவே இருப்பதில் வியப்பேதும் உண்டோ?
“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் – எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!”