எங்கே அவளின் திருவடிகள்…
சின்னஞ்சிறிய சம்பவம் ஆயினும், பொன்னம் பெரிய அற்புதம் ஆயினும், அது யாருக்கு என்ன அனுபவத்தை தருகிறதோ அதன் அடிப்படையில்தான் அது வகைப்படுத்தப்படும்.
அந்த அனுபவம் வெறும் உணர்ச்சியின் எல்லையில் நின்றால் போதாது. அறிவும் அதனை அங்கீகரிக்க வேண்டும். ஓர் இனிப்பை சாப்பிடுகையில் ஏற்படும் மகிழ்ச்சி, நிலையானதா? இல்லை. நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையை அறிவு பிறப்பிக்கிறது.
ஒன்றை உயர்ந்த அனுபவமென உணர்வும் அறிவும் ஒருங்கே ஒப்புக் கொள்கிறபோதுதான் அதன் நம்பகத்தன்மை உறுதியாகிறது. அம்பிகை வழிபாடு அபிராமிபட்டருக்கு தந்த அனுபவம் என்ன? வெறுமனே உணர்ச்சி வயப்பட்டநிலையில் அதனை ஆனந்தம் என்று அபிராமிபட்டர் அறிவிக்கவில்லை. அதுவே ஆனந்தம் என்று அறிவும் சான்றளித்திருக்கிறது. அம்பிகை தியானத்தில் நாடி நரம்பெங்கும் எங்கும் பெருக்கெடுக்கும் அமுதவாரி , அந்த அனுபவம் உண்மையே என்று மேலும் உறுதி செய்கிறது.
உணர்வுநிலை, அறிவு நிலை., சக்தி நிலை ஆகிய மூன்றுமே அம்பிகை தியானம் தான் ஆனந்த்ம் என்று தெளிவுபடுத்துகிறது.
“ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்’’ என்கிறார் அபராமிபட்டர். பிரபஞ்சத்தின் பேராற்றல் எத்தகையது என்று தன்னுள் ஒருவர் உணர்ந்துவிட்டால், அவர் தனக்குள் பிரபஞ்சத்தையே உணரும் பரிபக்குவத்தை அடைகிறார். இதைத்தான் ஞானோதயம் என்கிறார்கள்.
ஆனந்தம் என்னும் அனுபவமாய் அம்பிகையை அறிவு நிலையிலும் சக்தி நிலையிலும் உணர்ந்தபிறகு, பிரபஞ்சமெங்கும் அம்பிகையே வியாபித்திருப்பதையும் அபிராமி பட்டரால் உணரமுடிகிறது.
“வானந்தமான வடிவுடையாள்” என்கிறார்.
எங்கும் வியாபித்து நிற்கும் அம்பிகையைத் தேடுகின்றன வேதங்கள். வேதங்களின் தேடல்கள், கேள்விகள், தர்க்கங்கள் எல்லாமே எங்கே முடிவடைகின்றன? அம்பிகையின் திருவடிகளில்தான் முடிவடைகின்றன.
அதுசரி. அப்படியானால் வேதங்களுக்கு முடிவாக இருக்கும் அம்பிகையின் திருவடிகள் எங்கே இருக்கின்றன என்றொரு கேள்வி எழுமல்லவா?
வெண்ணிறக் காடாம் திருவெண்காடாகிய மயானத்தில் நடமாடும் சிவபெருமானின் சிரசில் ஒளிரும் மலர்களாக அம்பிகையின் திருவடிகள் இருக்கின்றன என்கிறார்.
“ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணா விந்தம் தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே”
கட்டப்பட்ட மலர்களுக்கும் கண்ணி என்று பெயர். இலக்கியத்தில் இரண்டடிகளால் ஆன கவிதைக்கும் கண்ணி என்று பெயர். அம்பிகையின் கவிதைத் திருவடிகள் கொன்றை மலர்ச்சரமாய் சிவபெருமானின் திருமுடி மேல் நின்றொளிர்கின்றன.