எது புண்ணியம்?
ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான் எத்தனை பொருத்தம்.
ஒரு மனிதன். தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான் அவன் மிகுந்த புண்ணியம் செய்தவன் என்பதற்கான அடையாளம்.
இன்று பலருக்கும் நினைத்த நினைப்புக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்னும் பலருக்கோ படித்த படிப்புக்கும் கிடைத்த பிழைப்புக்கும் சம்பந்தமில்லை. நினைப்புக்கும் நிதர்சனத்துக்கும் பாலம் கட்ட முடியாத பரிதவிப்பிலேயே பலருக்கும் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
அபிராமிபட்டரின் நன்றியுணர்வுக்கு என்ன காரணம் தெரியுமா? அவர் கருதுவதெல்லாம் அம்பிகையின் புகழ். கற்பதெல்லாம் அம்பிகையின் திருநாமங்களின் மகிமை. பக்தி செய்வதோ அவளுடைய பாத மலர்களில், இரவும் பகலும் இணைந்திருப்பதோ அம்பிகையின் அடியார் கூட்டத்துடன்! இந்தப் பேறு கிடைக்கும்படியாக நான செய்த புண்ணியம் என்ன என்று சிலிர்க்கிறார் அபிராமிபட்டர்.
“கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் – பகல் இரவா
நுண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து – நான்முன்செய்த
புண்ணியம் ஏதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!”
மனமெங்கும் அம்பிகையின் மாண்புகளே நிறைந்திருக்க அவளது திருநாமங்களே அவரால் அன்றாடம் பயிலப்படுகிறது. அம்பிகையின் திருநாமங்கள் அவருக்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான். ஆனால் ஆன்மீக அனுபவம் ஆழப்பட, அறிந்த திருநாமங்களின் அறியாத சூட்சுமங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய்ப் புலப்படுகின்றன. ஒரு நல்ல புத்தகமே பயிலப் பயில புதிய பொருள்நயங்களைத் தருமென்றால் அருளின் அட்சய பாத்திரமான அம்பிகையின் திருநாமங்கள் எவ்வளவு புதுமைகளைப் புலப்படுத்தும்!
கருதுவது கற்பது ஆகியவற்றின் விளைவாக மனம் கசிந்து பாய்கிற பக்திப்பெருக்கும் அம்பிகையின் திருவடிகளையே சென்று சேர்கின்றன. இத்தனை இருந்தும் அதன் அருமையை உணர்ந்து அதே அலைவரிசையில் இருப்பவர்களின் சத்சங்கம் வாய்ப்பது அருமையிலும் அருமை. அபிராமிபட்டருக்கு என்ன வியப்பென்றால் ஏழுலகங்களையும் படைப்பதில் செலுத்துகிற அதேகவனத்தை ஓர் ஆத்மசாதகனின் வாழ்க்கைச் சூழலில் இத்தனை ஒழுங்குகளையும் கொண்டுவர அம்பிகை இவ்வளவு கவனம் செலுத்துகிறாளே! இதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நன்றியுணர்வில் நெகிழ்கிறார் அபிராமிபட்டர்.