கண்கள் நிலவின் தாய்மடியாம்
கரங்களில் சுரங்கள் கனிந்திடுமாம்
பண்கள் பெருகும் யாழ்மீட்டி
பாரதி சந்நிதி துலங்கிடுமாம்
எண்கள் எழுத்தின் வர்க்கங்கள்
எல்லாம் எல்லாம் அவளேயாம்
புண்ணியள் எங்கள் கலைமகளின்
பூம்பதம் போற்றிப் பாடிடுவோம்!
ஏடுகள் எழுதுகோலுடனே
இயங்கும் கைகளில் ருத்ராக்ஷம்
ஆடல் பாடல் சிற்பமெனும்
ஆய கலைகள் அவள்ரூபம்
தேடித் தொழுவார் நாவினிலே
தேனாய் கவிகள் தருபவளைப்
பாடிப்பாடி வினைதீர்வோம்
பங்கய ஆசனி வாழியவே!
கூர்த்த மதியில் அவளிருப்பாள்
கோலங்கள் வரைகையில் அவளிருப்பாள்
பார்த்த அழகுகள் அனைத்தையுமே
பாரதி சரஸ்வதி ஆண்டிருப்பாள்
கோர்த்த மணிகளின் கலகலப்பாய்
கோவில் தீபத்தின் சுடரொளியாய்
ஆர்த்தெழும் தேவியை சரண்புகுவோம்
அபயம் தருவாள்; அருள்புரிவாள்!