குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி
குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி
நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும்
நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள்
குறும்புக்குக் குறையில்லை; ஆன போதும்
குறித்தபடி குறித்ததெல்லாம் செய்வாள்- இங்கே
மறுபடியும் வராவண்ணம் மறலி பாதை
மறிக்கின்ற மஹாமாயே அருள்வாய் நீயே
வெஞ்சமரே வாழ்க்கையென ஆகும் போதும்
வடிவழகி திருமுன்னே நின்றால் போதும்
விஞ்சிவரும்புகழ்நலனும் பெருமை யாவும்
விருப்பங்கள் கண்முன்னே வந்து மேவும்
நெஞ்சிலொரு முள்தைத்து நலியும் போது
நயனத்தின் ஓரவிழிப் பார்வை தீண்டும்
அஞ்சவரும் முள்முனையோ மலராய்ப் போகும்
அவளருளே வழியெங்கும் கவசம் ஆகும்
அங்குசமும் பாசமுடன் கரும்பும் பூவும்
அபயமெனும் அருள்விழியும் அழகே மேவும்
பங்கயமாம் திருமுகமும் பரிவும் வேதப்
பரிமளமாய் வழிகாட்டும் பதமும் ஞான
வெங்கயமாம் வாரணத்தை ஈன்ற வாலை
விகசிக்கும் பேரெழிலும் வடிவும் நெஞ்சில்
மங்கலத்தின் பூரணமாய் நிறையும்- இந்த
மகத்துவத்தின் வர்ணனையே மௌனம் ஆகும்