எவ்வளவு பெரிய சங்கீதக் கலைஞராக இருந்தாலும் அவர்கள் சின்னதாய் ஒரு ராகத்தை முணுமுணுக்க விழைந்தாலும் அதற்கு உடனே சுருதி தேடுவார்கள். ஆரோகணம் அவரோகணம் எல்லாவற்றிலும் ஆல வட்டம் போடும் ஆற்றல் இருந்தாலும் கூட ஆதார சுருதி இன்றி அவர்களுக்கு அணுவும் அசையாது.

 

மறைந்து 39 ஆண்டுகள் ஆனபிறகும் கூட கவியரசர் கண்ணதாசன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவர் நம் வாழ்வின் ஆதார சுருதியாய் அமைந்ததுதான்.

 

காதல் -குடும்பம் –துரோகம்- உயர்வு- தாழ்வு- வெற்றி- தோல்வி- பிரிவு- ஞானம் -இயற்கை -குழந்தை –தேசம்- சமூகம் –தெய்வம் என எதுகுறித்து சிந்தித்தாலும் அங்கே கவியரசர் கண்ணதாசனின் அனுபவ வரிகள் ஆதார சுருதியாய் அமைந்து நம்மை வழி நடத்தும்.

 

வாழ்வின் நெளிவு சுளிவுகள் நடுவே நின்று தயங்கும் மனிதனை இன்னும் முன்னே செல்ல வாஞ்சையுடன் வழி நடத்தும் விரல்களாய் அவருடைய வரிகள்.

 

திரைத்துறையில் எவ்வளவோ கவிஞர்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் கண்ணதாசன் அளவுக்கு மக்கள் மனங்களை நெருங்கியவர் இல்லை. காரணம் மக்களின் மனங்களுக்குள் இருந்து கொண்டு தானே அந்த மகத்தான கவிஞர் எழுதினார்.

 

வாழ்வின் சவாலான சூழ்நிலைகளில் கூட மனித மனம் ஓர் ஆழமான நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டு தனக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறது. அது என்ன நம்பிக்கை? எந்த தெய்வம் தனக்கு வாழ்வில் துன்பத்தை தந்ததோ அதே தெய்வம் தனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும் என்கிற நம்பிக்கை.

 

“ஆண்டவன் அரிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே “

 

என்று கவியரசர் ஒரு திரைப்படப் பாடலில் எழுதுகிறார்.

இதே பாடலில் தான் கம்பனின் ஒரு சிந்தனையை எளிமைப்படுத்தி தருகிறார்.

“நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா “

 

இந்தக் கேள்வி, வலிக்கும்  விரக்திக்கும் நடுவே ஓர் அனுபவ வெளிச்சத்தை அருள்கிறது. மனிதன் என்றோ எங்கோ செய்த தவறு இன்று விளைகிறது. அதை விதி என்கிறோம். தான் செய்த தவறு எதிர்வினையாற்றும் போது மனிதன் அந்த வலியில் வருந்துகிறான்.

 

தனக்கான வலி தெய்வம் தந்ததில்லை என்று தெரிகிறது. அதேநேரம் விதி வழியே வந்த துயருக்கு தீர்வும் ஆறுதலும் தெய்வத்தின் அருள் தான் என்கிற நம்பிக்கை மனிதனை செலுத்துகிறது.

 

இந்த ஆழமான நம்பிக்கை மனிதர்களுடைய மரபணுக்களில் கலந்திருக்கிறது. எனவே கவியரசர் கண்ணதாசன் எழுதும் எழுத்துக்கள் மரபணுக்களின் குரலாக மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.

 

வாழ்வென்றும் தாழ்வென்றும்

வளமென்றும் என்றும் குறைவென்றும்

சக்கரம் சுழல்கின்றது அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது

யாருக்கும் வாழ்வுண்டு

அதற்கு ஒரு நாள் உண்டு

அதுவரை பொறுப்பாயடா- மகனே

என் அருகினில் இருப்பாயடா

 

என்று கடவுளே பாடுவதாக மகாகவி காளிதாஸ் படத்தில் கவியரசர் எழுதிய வரிகளை இந்த சிந்தனையுடன் பொருத்திப் பார்க்க முடியும்.

வாய் பேச முடியாத- காது கேளாத தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையும் ஊனமுற்றிருக்குமோ என அஞ்சுகின்றனர். அந்தக் குழந்தைக்கு ஊனமில்லை என்று தெரிந்ததும் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்தச் சூழலில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

 

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட,-அவை

இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

என்பது பாடலின் பல்லவி.

இயற்கையை அனுபவிக்க முடியாமல் இயற்கை செய்த சதியை எப்படி எடுத்துக்க் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பாடலின் சரணத்தில் கவிஞர் அற்புதமாக விளக்கியிருப்பார்.

வெய்யில் என்ன, மின்னல் என்ன,

வெண்மை என்ன மஞ்சள் என்ன,

காணாத கண்கள் ரெண்டில், எல்லாமும் ஒன்றடா,

தென்றல் காற்றும், ஊமைக் காற்று,

தேவன் பாட்டும், ஊமைப் பாட்டு,

அவன் தானே நம்மைச் செய்தான், துன்பங்கள் ஏனடா,”

இதையும் இறைவனே தந்தான் என்னும் பக்குவம் எதையும் எதிர்கொள்ளும் மனத்திடத்தை வழங்கும் என்பது கவிஞர் தரும் சிந்தனையின் சாரம்.

 

தன் மகளை கணவனுடன் புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன் வீட்டுக்கு திரும்பிய பெரிய மனிதர் ஒருவர் ஒரு முறை என்னிடம் இப்படிச் சொன்னார்.

பொண்ணை அனுப்பி விட்டோம். வீட்டுக்கு வந்தா வீடு  சூனியமா இருக்கு

 

கனமான இந்த உணர்வை கவித்துவமாக சொல்லி தந்தையரின் மன வலியை கவியரசர் எழுதிக் காட்டுகிறார்.

பார் மகளே பார் இதுதான் படத்தில் பெயரும் இந்தப்  பாடலின் பல்லவியும் ஆகும்.

 

உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகின்றாய்

உறக்கமென்று படுக்கைப் போட்டால் ஒடி வந்து ஏழுப்புகின்றாய்

கண்மணியில் ஆடுகிறாய் புன்னகையில் வாட்டுகின்றாய்

கண்ணிழந்த தந்தை தனையே

என்ன செய்ய எண்ணுகிறாய்

தந்தையும் மகள் இன்னும் உறவு இருக்கும் வரைக்கும் இந்தப் பாடல்களுக்கு இருக்கும்.

படத்தில் சொல்லப்படுவது வெறும் கதை. அந்த கதையின் நாயகர்கள் வெறும் பாத்திரங்கள். அந்தப் பாத்திரங்களில் படைப்பாளி பாலை ஊற்றித் தருகிறாரா கள்ளை ஊற்றித் தருகிறாரா நஞ்சை ஊற்றி தருகிறாரா என்பதைப் பொறுத்து எல்லாமே மாறும்.

ஒரு தலைமுறை தலைகீழாக விழுந்தாலும் பரவாயில்லை என்று தன் சுயநலத்திற்காக அந்த பாத்திரங்களில் நஞ்சை ஊற்றித் தருபவர்களும் உண்டு.

 

ஆனால் வாழ்க்கை தந்த நஞ்சையெல்லாம் தான் அருந்திவிட்டு அனுபவம் என்னும் அமுதத்தை  உலகுக்கு அளித்த அமரகவி தான் கவியரசர் கண்ணதாசன்.

உறவுகளை உயிராகக் கருதும் மனிதர்களே உறவுகள் நிலையற்றவை என்பதையும் உணர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த உபதேசத்தையும் கவியரசரே செய்கிறார்.

“அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?” என்ற பாடலில்

“பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை

சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி”

என்கிறார்.

“படத்தில் இதனைப் பாடுபவர் ஓர் இளம்பெண். ஆனால் சிந்தனை முதிர்ந்த சிந்தனை. உறவுகளை நாமே நெருக்கமான பிணைப்பாக பின்னிக் கொள்கிறோம்.

இதையே “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” எனும் பாடலில்

“சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது –அதில்

பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது”

என்கிறார்.

எத்தனையோ  சொந்தங்கள் இருந்தாலும் சிலவற்றை பந்தத்தின் பேரில் நாமே தானே இறுக்கிக் கொள்கிறோம்!

மனித வாழ்வை ஒரு சங்கீதம் என்று கொண்டால் கவியரசரின் வரிகள் அதன் ஆதார சுருதி. வாழ்வை நாட்டியமாகக் காண்பவர்களுக்கோ அவருடைய வரிகளே ஜதி. துரித கதியில் தான் மறைந்தாலும் தலைமுறைகளுக்கும் தன் தமிழை துணைக்கு வைத்து விட்டுப் போனவர் தான் கவியரசு கண்ணதாசன். கலைமகளின் கைப்பொருளாய் காலமகளின் குரலுக்கும் சுருதி சேர்த்த கவியரசருக்கு காலமெல்லாம் நம் வணக்கம்.

Comments

  1. அருமை அருமை கவிஞர் விரல் பிடித்து நடந்தது போன்றது உங்கள் வரிகள்இன்னும் நிறைய எழுதுங்கள் இதுபோல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *