கலையானவன் -நீ – நிலையானவன்
கவிவாணர் தமக்குள்ளே தலையாயவன்
சிலையாவன் -தமிழ் -மலையானவன்
சிந்தைக்குள் தினம் வீசும் அலையானவன்
காற்றானவன் – நீ – காற்றானவன்
காற்றோடு கலக்கின்ற பாட்டானவன்
நேற்றானவன் -நீ இன்றானவன்
நிலையாகப் பெருகிவரும் ஊற்றானவன்
இசையானவன் – நீ- இசையானவன்
என்றைக்கும் யாம்செல்லும் திசையானவன்
விசையானவன் -உந்து விசையானவன்
விம்முகிற கண்களிலே கசிவானவன்
நதியானவன் – ஜீவ – நதியானவன்
விதிகூட விழுங்காத மதியானவன்
கதியானவன் – எங்கள்- கதியானவன்
காலத்தின் பாட்டுக்கு சுதியானவன்