ஆ மாதவன் என்றதுமே நினைவுக்கு வருபவை எள்ளலும் எதார்த்தமும் கைகோர்க்கும் அவருடைய சிறுகதைகள். பூனைகளின் அட்டூழியம் மிகுந்த குடியிருப்பில் இருப்பவள் கருக்கொண்டு தனக்குள் ஒரு பூனையே ஒரு கொண்டு வளர்வதாக பேறு காலம் வரை பதைபதைத்துப் போவாள். குழந்தை பிறந்த மயக்கத்தில் இருப்பவளுக்கு” மகாலட்சுமி போல பெண் குழந்தை” என்பது “மகா லட்சணமாய் பூனைக் குழந்தை” என்று காதில் விழும்.
வறுமையை பொருட்படுத்தாமல் இலக்கிய நண்பரை உபசரித்து இருப்பதையெல்லாம் வைத்து ஒப்பேற்றி ஒரு வழியாய் ரயில் ஏற்றி விட போனால் நேர மாற்றத்தால் ரயில் முன்னமேயே போயிருக்க வீடு திரும்பும்போது வறுமையும் வெறுமையும் எதிர்கொள்ளும் கொடுமை அவ்வளவு துல்லியமான சித்திரமாக அவருடைய எழுத்தில் பதிவாகியிருக்கும்.
அதேபோல் கடைத்தெரு கலைஞனான மாதவனின் சொந்த அனுபவம் என யூகிக்க கூடிய முறையில் வாசகன் என்று சொல்லி வருகிற இளைஞன் விமான பயணச்சீட்டு உட்பட இதர செலவுகளுக்கு பணம் ஏமாற்றி வாங்கி போய்விடுவதும் டாக்ஸி ஓட்டி கொண்டு போனவர் இவருடைய வேலையாளை “புள்ளி உன்னையும் வேலை வச்சு உன் முதலாளியையும் வேலை வச்சு” என கேலி செய்வதும் மறக்கமுடியாத சிறுகதை.
ஐக்கிய நாடுகளில் வேலை பார்த்து தாயின் மரணத்தின்போது விலையுயர்ந்த சேலையுடன் புதைக்க சொல்லி போராடி வெற்றி பெற்ற தாய் நினைத்துக்கொண்டு தன் தற்காலிக பெருமையை பீற்றிக்கொள்ளும் இளைஞனின் ” நேரே வா நேரே போ” அலம்பலை மறக்கவா முடியும்?
கடை அடைக்கும் நேரத்தில் முதலாளியிடம் கதை பேச வரும் பெரியவர் மீது பரணிலிருந்து ஒரு சுமையை தள்ளிவிட்டு பழிவாங்கி குற்ற உணர்வில் குமையும் இளைஞன் பல்லாண்டுகளுக்குப் பிறகு அங்காடித்தெரு திரைப்படத்தில் ஒரு பாத்திரமாக உயிர்பெற்றிருப்பான்.
எழுத்துலகத்தின் வெயில் நிலத்தில் தன் நிழல் விழ பறந்துபோன கிருஷ்ணப் பருந்து ஆ.மாதவன். அவருக்கு என் அஞ்சலி