இதுபோன்ற கேள்விகளுக்கு திரும்பத் திரும்ப கவியரசர் கண்ணதாசனிடமிருந்தும் எனக்கு பதில்கள் கிடைக்கும்.
இன்று அதிகாலை புதுக்கோட்டையில் நடை பழக்கத்துக்குக் கிளம்பி செய்துகொண்டிருந்த பனிக்கு பயந்து காப்பிக் கடை ஒன்றில் ஒதுங்கினேன்.
தஞ்சாவூர் கவிராயர் வர்ணிப்பதுபோல வயிற்றில் விபூதி குங்குமம் பூசி இருந்த பாய்லரும், நெற்றியில் விபூதி குங்குமம் பூசி இருந்த சரக்கு மாஸ்டரும் தங்கள் வேலைகளை தொடங்கி இருந்தார்கள்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுபோல கேட்டதுமே காப்பி கிடைத்தது. குவளையுடன் அமர்ந்தபோது கவியரசரின் பாடல் ஒன்று ஒலித்தது.

பக்தி என்பது உள்முகமாக நிகழ்வது. பிரபஞ்சத்தை உருவாக்கிய பெரும் சக்தியின் முன்னால் தான் ஒன்றுமே இல்லை என்பதை பக்தி முதல் உணர்த்துகிறது. அதேநேரம் அந்தப் பெரும் சக்தியோடு நம் உயிர் ஆற்றலை இணைக்கிறது.
நான் என்னும் தன்மை கரைந்து போக தான் என்னும் பரமாத்ம சொரூபத்தின் பேராற்றலுடன் நம் உயிராற்றல் இணைகிறது.

இந்தத் தன்மையை எய்திவிட்டால் சராசரி மனிதர்கள் எவற்றையெல்லாம் கண்டு அச்சம் கொள்வார்களோ அவற்றை துச்சமாக பார்க்கிற வல்லமை வளர்கிறது. ஆம். பக்தியில் அகங்காரம் அழியும். ஆனால் வல்லமை வளரும்.

கண்ணன் அவதரித்த காலத்தில் உயிர்களெல்லாம் பார்த்து  அஞ்சிய பேருருவம் கொண்ட பேரரவம், காளிந்தி.

அந்த ஐந்து தலை நாகத்தின் தலைமேல் நடனமாடியபடியே கண்ணன் அதனைக் கொல்கிறான். அந்தக் காரியம் அத்தனை எளிதாக நிகழ்த்தப்பட்டது என்பதை உணர்த்தத்தான் அவன் நடனமாடிக் கொண்டே கொன்றான் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தை கவியரசர் கண்ணதாசன் பாடுகிறார்.
” கண்ணன் அவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்ற பின் தான்
  தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி”.

காளிந்தியை கண்ணன் எப்படி இயல்பாக நடனம் ஆடியபடியே கொன்றானோ அதேபோல மிக இயல்பாய் அந்தக் கொடிய நாகத்தை தண்ணீர் பாம்பு வகையறாவில் கவியரசர் சேர்த்து விடுகிறார்.

இறைமை என்னும் பேராற்றலோடு நம் உயிர் ஆற்றலை இணைப்பதற்கான உபாயங்களாக பல வழிமுறைகள் வகுக்கப்பட்டன. பக்தி யோகம் ஞான யோகம் கிரியா யோகம் கர்மயோகம் ஆகியவை அவை. யோகம் என்ற சொல்லுக்கு பொருந்துதல் என்று பொருள். இறைத் தன்மையோடு பக்தி வழியாக பொருந்துதல், ஞானத் தேடல் வழியாகப் பொருந்துதல், யோகப் பயிற்சிகள் மூலம் பொருந்துதல், செயல்களை விருப்பு வெறுப்பில்லாமல் செய்வதன் வழியாக பொருந்துதல் என இவற்றை நாம் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக பக்தி யோகத்தின் வழியே அப்படி பொருத்துவதற்கான படிநிலைகளை நாம் மேற்கொள்ளும் போது நம்மை வருத்தும் அம்சங்கள் குறையத் தொடங்குகின்றன. நம் வல்லமை பெருகத் தொடங்குகிறது.

படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி ராமாரி

என்கிறார் கவியரசர்.

இதற்கு அடுத்த வரி இன்னும் முக்கியம். இங்குதான் பக்தி வழியாக நம் வல்லமை பல மடங்கு பெருகுவதை கவியரசர் உணர்த்துகிறார்.

படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால்
  வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி

என்கிறார்.

ஈஷாவில் உள்ள112 அடி ஆதியோகி திருவுருவத்தை அனைவருக்கும் தெரியும்.
ஈஷா வளாகத்துக்கு உள்ளே லிங்க திருவுருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதியோகி ஆலயம் ஒன்று உள்ளது. அதைப் பற்றி சத்குரு சொல்லும் போது “அந்த பீடத்தில் ஒரு சாமானிய மனிதர் குறிப்பிட்ட தன்மையில் ஏறி நின்றால்
யோகக் கலையின் அதி சூட்சும நுட்பங்கள் அவருக்குப் பிடிபடும்” என்பார்.

நான் எனப்படும் குறுகிய அம்சங்களைக் கரைத்து தான் எனும் தெய்வாம்சத்தோடு தன் மயமாகும் வேளையில் நமக்குள்ளேயே எத்தனை அதிசயங்கள் நிகழும் என்பதனை இவையெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *