பலரையும் போலவே என் பதின் பருவத்தில் தான் ஓஷோவை வாசிக்கத் தொடங்கினேன்.ரிபெல் என்கிற புத்தகம்தான் நான் முதலில் வாசித்த ஓஷோவின் புத்தகம். ஓஷோ எழுத்துகள் ஒரு சுகமான சுழல். உள்வாங்க உள்வாங்க உற்சாகமாக உள்ளிழுத்துக் கொண்டே செல்லும். தமிழின் ஆன்மீக நூல்களில் பரிச்சயம் இருந்தால் வாசிக்க வாசிக்க புதிய திறப்புகளை ஓஷோ வழங்கிக் கொண்டே இருப்பார்.
91 –92 வாக்கில் இந்த வாசிப்பின் முற்றிய மனநிலையில் முன்பின் நான் உணர்ந்திராத அனுபவத்துக்கு ஆளானேன். எங்கேனும் நடந்து போய்க்கொண்டு இருந்தால் பக்கத்தில் ஓஷோ அமைதியாக நடந்து வருவது போல ஓர் உணர்வு ஏற்படும்.
பெரிய கோவிந்தசாமி நாயுடு அறக்கட்டளை சார்பாக ஆண்டுக்கு மூன்று நாட்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் நடக்கும். அங்கிருக்கும் புல்தரையில் அமர்ந்திருந்தால் அருகிலேயே அமர்ந்திருப்பார். இந்த உணர்வு பல மாதங்களுக்கு நீடித்ததுண்டு. அனேகமாக நான் என் குருவை கண்டடையும் வரை இந்த வலிமையான உணர்வுக்கு ஆளானேன்.
முதலில் இது வெறும் மனப்பிரமை என்ற எண்ணம் கொண்டு இருந்தேன். ஆனால் அந்த அனுபவம் மிகவும் சக்தி மிக்கதாக இருந்தது.1994/95 ல் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.கிருஷ்ணனிடம் இது பற்றி முதல் முறையாக பகிர்ந்து கொண்டபோது” இது வெறும் மனப்பிரமை அல்ல. இது ஒரு முக்கியமான விஷயம் தான்.அதேநேரம் இது என்ன இன்று ஆராயாதீர்கள். அப்படியே விட்டுவிடுங்கள்” என்றார்
பயணங்களிலும் அவர் பக்கத்தில் இருப்பது போலவே ஓர் உணர்வு தோன்றும். பல ரயில் பயணங்களில் நான் ஓஷோவை வாசித்துக் கொண்டிருக்க அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார்.
அப்படி ஒரு ரயில் பயணத்தில் தான் கவிஞர் புவியரசு அவர்களும் நானும் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம். மிக மூத்த கவிஞர். என் மிகுந்த மரியாதைக்கு உரியவர். அவர் ஓஷோ குறித்து எங்கேயோ கிண்டலாகப் பேசியது எனக்குத் தெரியும்.
ஓஷோவை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். நான் சேலத்தில் இறங்கப் போகிறேன். அதுவரை நான் உங்களுக்கு சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன் என்றேன். ஒப்புக்கொண்டார். பேசிக்கொண்டே இருந்தேன். கேட்டுக்கொண்டே வந்தார். என் கையிலிருந்த ஓஷோவின் சிறு நூல்கள் ஒன்றிரண்டை அவரிடம் தந்தேன். (இந்த சம்பவம் குறித்து இன்னும் விரிவாக கவிஞர் புவியரசு பதிவுசெய்திருக்கிறார்)
சில மாதங்கள் கழித்து திரு சுஜாதா கவிஞர் புவியரசு நான் ஆகியோர் பங்கேற்ற ஒரு கூட்டம் கோவை திவ்யோதயா அரங்கில் நடந்தது.
மேடை ஏறியதும் கவிஞர் புவியரசுவைப் பார்த்து விளையாட்டாக” ஞாபகம் இருக்கா” என்றேன்.” கேட்டீங்களே ஒரு கேள்வி” என்றவர் ஒரு தாளில் கை நடுங்க” ஓஷோ என்னை ஆட்கொண்டு விட்டார்” என எழுதி நீட்டினார்.Rest is history.
ஓஷோ பற்றிய ஜெயமோகனின் மூன்று நாள் உரை வரிசை(தொடர் சொற்பொழிவு அல்ல) கோவையில் நேற்று தொடங்கியது. சற்று முன்பாகவே வந்து விட்ட நான் மேடையில் பின் பதாகையிலிருந்த ஓஷோவின் பிரம்மாண்டமான புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த பழைய உணர்வுகளுக்கு மீண்டும் ஆளானேன்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு கிருஷ்ணன் நெடுநாட்களாக நிகழ்த்த விரும்பிய இந்த உரை தொடரை இணைப்புப் பாலமாக இருந்து நெறிப்படுத்திய டைனமிக் திரு நடராஜன் சுருக்கமான அறிமுக உரை நிகழ்த்தினார்
இந்திய சிந்தனை மரபில் ஓஷோவின் இடம் குறித்த விரிவான சித்திரத்தை முன்வைத்து தன் உரையைத் தொடங்கிய ஜெயமோகன் இன்றளவும் ஓஷோ அறிவுத் தளத்தில் சரியாக முன் வைக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களை பட்டியல் போட்ட போது அவர் சொன்ன ஓர் உவமை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
” ஓஷோவின் நூல்களை சின்னச் சின்ன துணுக்குகளாக உடைத்து உடைத்து சமூக ஊடகங்களில் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். ஓஷோவை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து விநியோகிக்கிறார்கள்- கோவில்பட்டி கடலை மிட்டாய் போல” என்றார். ஓஷோ தம்மபதம், பதஞ்சலி சூத்திரம், பகவத் கீதை போன்றவற்றுக்குஎழுதிய விரிவான உரை நூல்களை ஓஷோவின் வழித்தோன்றல்கள் கூட அவ்வளவாக முன்னெடுக்கவில்லை” என்றார்.
இன்னோர் இடைஞ்சல், இந்தியச் சிந்தனை மரபில் எல்லாமே முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்னும் எண்ணத்தை பலரும் அழுத்தமாகக் கொண்டிருப்பது என்றார் ஜெயமோகன். எந்த சிந்தனையை யார் சொன்னாலும் அது ஏற்கனவே எங்களிடம் இருக்கிறது என்று சொல்வதில் ஆர்வம் காட்டுகிற இந்திய சிந்தனைப் பாணி ஓஷோவுக்கான இடத்தைத் தரவில்லை என்றார் ஜெயமோகன்.
அதற்கு அவர் சொன்ன உவமையும் மிகவும் சுவாரசியமானது. “இந்திய சிந்தனை மரபு என்பது வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் தேரைப் போன்றது. தேருக்கான வடிவம் இருக்கும். சக்கரங்களும் இருக்கும். ஆனால் நகராது” என்றார்.
ஓஷோ குறித்த அவருடைய முதல் நாள்உரை பல மைய புள்ளிகள் கொண்டதாக அமைந்தது. அவற்றுள் ஒன்று,” இலக்கியம்- தத்துவம் மெய்ஞானம் ஆகியவற்றை தனித்தனியாக பிரிக்காமல் ஒரே புள்ளியில் கண்டவர் ஓஷோ. அதுதான் உண்மையான தரிசனமும் கூட. வள்ளலாரை கவிஞர் என்பீர்களா? தத்துவவாதி என்பீர்களா? மெய்ஞானி என்பீர்களா? இந்த மூன்றும் தானே அவர்” என்றார்.
ஜெயமோகன் அப்படி சொல்லிக் கொண்டிருந்தபோது ஓஷோவின் வரிகளில் ஒன்று மனதுக்குள் ஓடியது.”All Poets are not mystics. But a mystic is always a Poet.”
ஓஷோ தன்னுடைய நூல்கள் எவற்றிலும் ஒரு விவாதத்தையோ உரை யாடலையோ முன்னெடுக்கவில்லை என்பதை ஒரு விமர்சனமாகவே ஜெயமோகன் முன்வைத்தார்.உண்மைதான். என்னை பொறுத்தவரை எதைப் பேசுபொருளாக மேற்கொண்டாரோ அதைக் குறித்த மிகவும் துல்லியமான மேம்பட்ட புரிதலின் அடிப்படையில் மட்டும்தான் ஓஷோ தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார். அவருடைய சமகாலத்தில் அந்த புரிதலின் உயரத்தில் இருந்தவர்கள் யாரேனும் இருந்திருந்தால் அவர்களால் மட்டுமே அவரோடு விவாதித்து இருக்க முடியும். ஓஷோவின்
உரைகள் அனைத்துமே புரிதலின் சிகரத்தில் இருந்தபடி பேசியவை. எனவே அவர் விவாதத்துக்கான வாசல்களை திறக்கவே இல்லை. எது புரிதல் என்பது பற்றிய ஓஷோவின் இயல் வரையறை ஒன்றை (defenition) இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
Understanding means your clarity has raised to a level where everything else stands under you”.
எது ஒன்றைப் பற்றி பேசினாலும் அந்தப் பொருண்மையின் அத்தனை அம்சங்களையும் ஓஷோ தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தன் உரையில் ஜெயமோகன் தந்த 15 நிமிட இடைவேளையில் இளையநிலா ஜான் சுந்தர் இசைக்கருவி இசைக்கும் தன் நண்பர் ஒருவருடன் 3 பாடல்கள் பாடினார். மூன்றுமே அந்த அரங்கில் மெய்யறிவின் அதிர்வுகளை மீட்டிய பாடல்கள். ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை- பிறக்கும் போதும் அழுகின்றாய்- எந்த ஊர் என்றவனே ஆகிய பாடல்கள் அவை.
இடைவேளைக்குப்பிறகு ஜெயமோகன் இன்னும் இலகுவாகி இருந்தார்.ஹிப்பிகள் இயக்கம் குறித்து விரிவாகச் சொன்னதோடு அவர்கள் தேடிய மாற்று ஆன்மீகத்தின் வாயிலாக ஓஷோ இருந்தது பற்றி விளக்கினார்.
காந்தியம் சோஷலிசம் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வந்தவராக ஓஷோ விளங்கி வந்த அடிப்படையையும் அவர் கோடிட்டுக் காட்டத்
தவறவில்லை
ஓஷோ கட்டணம் வாங்கும் புகழ்பெற்ற பேச்சாளராக இருந்த முதல் நிலை, டைனமிக் மெடிடேஷன் போதிக்கும் ஆச்சாரியராக இருந்த அடுத்த நிலை ஓஷோவாக வெளிப்பட்ட மூன்றாவது நிலை ஆகியவை குறித்து அடுத்தடுத்த நாட்களில் விரிவாகப் பேசப் போவதாக தெரிவித்து முதல் நாள் உரையை நிறைவு செய்தார்.
சிந்தனைச் சூழலில் இவ்வளவு விரிவாகவும் தீர்க்கமாகவும் ஓஷோ இதுவரை பேசப்பட்டு இருக்க வாய்ப்பில்லை. பேசாப் பொருளைப் பேச துணிந்திருக்கிறார் ஜெயமோகன். இந்த துணிச்சலான முயற்சியை பல ஆண்டுகளாக முன்வைத்து, அதிர்ச்சியில் உயரும் புருவங்களை பொருட்படுத்தாமல் முன்னெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன். இனிமேல் பொதுவெளியில் ஓஷோவை துணிச்சலாக விவாதிக்க பலரும் முன்வருவார்கள்.