. விநாயக வழிபாடு முருக வழிபாடு சக்தி வழிபாடு சிவ வழிபாடு திருமால் வழிபாடு சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில் ஆறென விரிந்தான் என்கிறது.
எனவே ஆதிகாலத்திலிருந்தே இந்த அறுவகை சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை, ஒன்றை ஒன்று ஒப்புக் கொள்பவை என்பது தெளிவாகிறது. இவற்றின் பொதுப்பெயராக சனாதன தர்மம் என்பது திகழ்ந்தது.
சனாதனம் என்பது வடமொழிச் சொல். இதனை தெய்வச் சேக்கிழார் தமிழில் வேதநெறி என்கிறார். திருஞானசம்பந்தரின் அவதார நோக்கத்தை சொல்லும்போது
வேதநெறி தழைத்தோங்க- மிகு சைவத் துறை விளங்க என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதி இதனை வேத வாழ்வு எனும் சொல்லால் குறிக்கிறார்.
வியன் உலகு அனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.
தென்னாட்டில் செல்வாக்குப் பெற்று விளங்கும் சைவசமயம் வேதங்களை ஒப்புக்கொள்கிறது. வைணவமும் ஒப்புக்கொள்கிறது.
திருநாவுக்கரசர் சிவபெருமானை ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்கிறார்.
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்கிறார்.
வைணவத்தில் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம்மாழ்வார் போற்றப்படுகிறார். சனாதனம் என்ற சொல் வேதநெறி என்று தமிழில் குறிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக வர்ணாசிரம தர்மம். முதலில் இதுகுறித்து வழங்கப்பட்டு வருகிற புனைவு ஒன்றை பார்ப்போம்.
பிரம்மத்தின் தலையிலிருந்து பிராமணன் பிறந்தான். தோள்களில் இருந்து சத்ரியன் பிறந்தான். தொடையிலிருந்து வைசியன் பிறந்தான். கால்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்பதாகும்.
இந்த வர்ணாசிரம பார்வையின் அடிப்படையில் இந்தப் புனைவு பல தவறான புரிதல்களுக்கு உள்ளாகி ஜாதி வேற்றுமை கொடுமையில் போய் நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்தப் புனைவை நன்றாக பார்ப்போம்.
சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்களைப் பற்றி திரு.ஆ.ராசா பேசியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது அதை ஒரு உருவகமாக சொன்னேனே தவிர நேரடியாகச் சொல்லவில்லை என்று விளக்கம் தந்தார்.
பிரம்மம் பற்றிய இந்த கதையும் உருவகம் மட்டுமே. படைப்பின் மூலம் பிரம்மம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஒரே பிரம்மத்திலிருந்து தான் நான்கு வகை மனிதர்கள் உருவானார்கள் என்று சொல்லும் இடத்தில் உயர்வு தாழ்வுக்கு இடம் இல்லை.
சமூகத்தின் அறிவார்ந்த ஆய்வுகளை- விவாதங்களை- மேற்கொண்டவர்கள் அந்தக் காலத்தில் பிராமணர்கள் என்பதால் அவர்கள் தலையில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். வல்லமை மிக்கவர்கள் சத்திரியர்கள் என்று காட்ட தோள்களில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். பொருள் வலிமையால் ஒரு சமூகத்தை தாங்க கூடியவர்கள் வணிகர்கள் என்பதால் தொடையிலிருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள். அடிப்படையான உழைப்புப் பணியை மேற்கொண்ட சூத்திரர்கள் கால்களில் இருந்து பிறந்ததாக உருவகம் செய்தார்கள்.
மீண்டும் சொல்கிறேன். தவறான புரிதல்கள் அல்லது உள்நோக்கம் உடைய கற்பித்தல்கள் காரணமாக காலப்போக்கில் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சாதிக்கொடுமைகள் புகுந்தன. ஆனால் இந்த புனைவில் எந்த தவறும் கிடையாது.திரு ஆ ராசா சொன்னதுபோல் இதுவும் ஓர் உருவகம் மட்டுமே.
ஒரே பிரம்மம் உருவாக்கியவர்கள் தான் நால்வரும் என்றால் அந்த அடிப்படை கருத்துருவாக்கம் எந்த பேதத்தையும் கற்பிக்கவில்லை.
கால் பகுதியில் பிறந்தவர்கள் இழிவானவர்கள் என்று பின்னாளில் கற்பிக்கப்பட்டது. ஆனால் கடவுளையோ குருவையோ பெரியவர்களையோ வணங்குகிறோம் என்றால் அவர்கள் கால்களை தொட்டு தான் வணங்குகிறோம். தலையைத் தொட்டு வணங்குவதில்லை.
உழைப்பின் சின்னமாக கால்கள் கருதப்படுகின்றன. உழைப்பு என்பதற்கு திருவள்ளுவர் பயன்படுத்துகிற சொல் தாளாற்றல்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
என்பது திருக்குறள்.
இதே திருவள்ளுவர் பிறப்பால் அனைவரும் சமம். எனவே அவர்களுக்குள் பிறப்பில் பேதம் இல்லை. செய்தொழிலால் அவரவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரே விதமான சிறப்பு நிலையை அவர்கள் பெறுவதில்லை என்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்பது திருக்குறள்.
இதில் சிறப்பொவ்வா என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் அது தொழில் நிலை வேற்றுமை மட்டும்தானே தவிர பிறப்பில் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பது தெளிவாகப் புரியும்.
ஆனால் அதையே தான் இந்த பிரம்மப் புனைவும் சொல்கிறது. ஆனால் திருக்குறள் போல் தெளிவாக உணர்த்தப் படாமல் திரித்து உணர்த்தப்பட்டது. எனவே வர்ணாசிரம தர்மம் என்பது சாதி வேற்றுமைகள் பேசும் அதர்மம் என உணரப்பட்டு விட்டது. ஆனால் அதனுடைய மூல தாத்பரியம் ஓர் அழகான உருவகம். வெவ்வேறு 4 பிரம்மாக்களிடமிருந்து நான்கு பேர் பிறந்தார்கள் என்று சொல்லி இருந்தால்தான் அது தவறு.
ஒரே பிரம்மாவிடம் தோன்றியவர்கள் மூல தாற்பரியத்தை பொறுத்தவரை ஒன்றாக உருவானவர்களே.
இதுவரை இரண்டு விஷயங்களை சிந்தித்தோம். சனாதனம் என்பது மொத்த இந்துக்களையும் குறிக்கும் வடமொழிச் சொல். தமிழில் அது வேத நெறி என வழங்கப்பட்டது. இரண்டு- வர்ணாசிரமம்
மூன்றாவதாக மனுஸ்மிருதி பற்றிய பேச்சு. சுருதி என்றால் வேதம். ஸ்மிருதி என்றால் சட்டம். சட்டங்கள் அடிக்கடி மாறக்கூடியவை.நாட்டில் வழக்கத்தில் உள்ள சில வாழ்க்கை முறைகளின் தொகுப்பு ஸ்மிருதிகள் எனப்படும். இதை மனுஸ்மிருதியின் இரண்டாம் அத்தியாயத்தில் பதினான்காவது சூத்திரம் சொல்கிறது .
வாழ்க்கை முறைகள் அடிக்கடி மாறக்கூடியவை. மனுஸ்மிருதி மட்டுமல்ல பல ஸ்மிருதிகள் இருந்திருக்கின்றன. அவற்றுக்கு நிலையான முக்கியத்துவம் எப்போதுமே இருந்ததில்லை. இதை மகாகவி பாரதியார் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார்- அதைப்
பேணும் மனிதர் உலகினில் இல்லை
மன்னும் இயல்பின அல்ல- அவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்
இதன் மூலம் நமக்கு என்ன தெரிகிறது என்றால் மன்னும் இயல்பின அல்ல– அதாவது நிலையான தன்மை கொண்டவை அல்ல. மாறிப் பயிலும் இயல்பின ஆகும்– மாறிக் கொண்டே இருக்கக் கூடியவை.
எனவே இவற்றை இந்து மதத்தின் அடையாளமாக கொள்ளவேண்டிய எந்த அடிப்படையும் இல்லை என்பது புலனாகிறது. அதனால்தான் நடப்பில் இல்லாத மனு என்று சொல்லப்படுகிறது.
வர்ணாசிரமம் என்பதன் மூல தாத்பரியம் தொழில்நிலை வேற்றுமைகளை மட்டுமே உருவகமாக உணர்த்தியது. ஆனால் அதை வசதியாக பயன்படுத்திக்கொண்டு உயர்வு தாழ்வுகள் பின்னர் கற்பிக்கப்பட்டன. நடைமுறைக்கும் வந்தன.
மனுஸ்மிருதி என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் நூல் அல்ல. அதை இந்து சமயத்தின் ஒருமித்த அடையாளமாக இந்துக்களே ஏற்பதில்லை.