சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் அப்துல் காதர் போன்றோரும் அவருடைய மாணவர்களே.
நகைச்சுவை நாவரசர் என அறியப்பட்ட பேராசிரியர் கண சிற்சபேசன் நகைச்சுவை அலைகள் ஓங்கி ஒலிக்கும் இலக்கியக் கடல். ஆழ்ந்த புலமையும் அனாயசமான எளிமையும் கலந்த கலவை அவர்.
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய அரசர்களைப் பற்றிச் சொல்லும்போது “என் வகுப்பிலும் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி என 2 பேர் இருந்தார்கள். நல்லா கிள்ளுபவன் நலங்கிள்ளி நெடுநேரம் கிள்ளுபவன் நெடுங்கிள்ளி” என்பார்.
பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்க முதல் நாளே ஐயா வந்திருந்தார். அன்று மாலை ஒரு கவியரங்கம். கவியரங்கத் தலைவர் வரவில்லை. சிற்சபேசன் ஐயாவை தலைமை தாங்க கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒப்புக் கொண்டார். கவியரங்கம் நிறைவில் ஓர் அறிவிப்பு செய்தார்.
” கவியரங்கத் தலைவர் வரவில்லை என்பதால் என்னை தலைமை தாங்க அழைத்தீர்கள். நானும் வந்து செய்து கொடுத்தேன். அழைப்பிதழில் பார்த்தேன் நாளை காலை குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கச்சேரி என்று போட்டிருந்தது. அவர் வராவிட்டாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை நான் இங்கு தான் இருக்கிறேன் .என்னை நீங்கள் அழைத்துக் கொள்ளலாம். எனக்கு வயலின் வாசிக்க தெரியுமா என்று நீங்கள் கேட்பீர்கள். இதை மட்டும் என்ன தெரிந்தா செய்தேன்” என்றதும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.
மனிதர்களின் மிகச்சிறிய இயல்புகளை கூட நுட்பமாக கவனித்து பொருத்தமான விமர்சனங்களை சொல்வது அவருடைய வழக்கம். சிலர் பால் பாயிண்ட் பேனாவால் லேசாக காது குடைவார்கள். காது குடையும் சுகம் அவர்களுக்கு பிடிபட்டு விட்டால் பேனாவின் பின்புறத்தை காதில் நுழைத்து இருகைகளாலும் உருட்டுவார்கள்.
பலருக்கும் இது ஓர் அனிச்சைச் செயலாக கூட நடந்து விடும். இது பற்றி பேராசிரியர் கண சிற்சபேசன் ஒரு முறை மேடையில் சொன்னார்,
” இந்தப் பேனா இருக்கே இது எழுதுவதற்காக கண்டுபிடிச்சது. இதை வச்சு சில பேர் முதலில் காது குடைவான். அப்புறம் ரெண்டு கையாலயும் உருட்டி கடைவான். முதலில் குடைவான். அப்புறம் கடை வான்” என்பார்
சிரிக்க சிரிக்க பேசுவது போலவே இலக்கியத்தில் ஆழமான இடங்களைக் கூட போகிறபோக்கில் மிக இயல்பாக மேற்கோள் காட்டும் மதிநுட்பம் அவருடையது. குறிப்பாக கம்பனில் இருந்து அபூர்வமான வரிகளைச் சொல்வார்
எல்லா துறையினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். நிதி மேலாண்மை ஆலோசகராக விளங்கியவர். பல நிதி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
எப்படி வேடிக்கையாகப் பேசுகிறாரோ அதேபோல மற்றவர்கள் அவரிடம் உரிமையாக கேலி பேசினால் வாய்விட்டு சிரித்து குழந்தைபோல் மகிழ்வார்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாசலத்தில் கண்ணதாசன் பற்றிய பட்டிமண்டபம் ஒன்று அவருடைய தலைமையில் நடந்தது. பங்கேற்ற அனைவருமே கண்ணதாசன் கவிதைகளையும் பாடல்களையும் போட்டிபோட்டுக்கொண்டு அலசி ஆராய்ந்தார்கள்.
விழா முடிந்து அறைக்கு வந்ததும் பேராசிரியர் சொன்னார்,” எல்லோரும் கண்ணதாசன் பாடல்களை பின்னி எடுத்துட்டீங்க. நடுவர் நான் தான் எதுவுமே சொல்லல” என்றார்.
அருகிலிருந்த பேச்சாளர் சிவகங்கை சுபாஷ் சந்திரபோஸ் சிரித்துக்கொண்டே ” அதனாலென்ன அண்ணாச்சி! நீங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணினீங்க” சென்றதும் அடப்பாவிகளா என்று வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தார்.
பேச்சுலகின் பூரண நிலவாய் குளுமை பரப்பியவ்ர் பௌர்ணமி நாளின் விளிம்பில் மறைந்தார்.
நகைச்சுவையை வாழ்வின் அங்கமாகவே கொண்டிருந்த வித்தகருக்கு மனம் நிறைந்த அஞ்சலி