தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த கூடுகை கொண்டாட்டம் கருத்தோட்டம் என எத்தனை சொன்னாலும் அத்தனைக்கும் பொருந்துகிற திருவிழாவாக வளர்ந்து நிற்கிறது விஷ்ணுபுரம் விருது விழா.
தனக்காக கூடும் வாசகர்களை தமிழ் இலக்கியத்தின் முன்னைப் பெருமைக்கும் பின்னைச் சிறப்புக்கும் ஆளாக்கும் அரிய பணியை ஜெயமோகன் தொடர்ந்து செய்து வருகிறார்.
2023ல் விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர் விருது பெறுவதற்கு முன்பு வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டார்.
விதவிதமான கேள்விகள் அரங்கில் எல்லா பகுதிகளில் இருந்தும் மேடை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.
அந்த உரையாடலின் போது” தனக்குத் தேவையெல்லாம் ஒரு துளி ஞானம்” என்று அவர் சொன்னதை போகன் சங்கர் தன் கேள்வியின் வழி விவாதப் பொருள் ஆக்கினார்.” ஒரு துளி ஞானம் போதும் என்று ஏன் சொல்கிறீர்கள்? ஆழம் கண்டால் அச்சமா?” என்ற அவருடைய கேள்வியை யுவன் சந்திரசேகர் எதிர்கொண்டார்.
” ஆமாம்! அச்சம் தான். எனக்கு ஒரு துளி ஞானம் போதும். வண்டி வண்டியாய் எனக்கு ஞானம் எதற்கு” என்ற பதில் வந்ததோடு அறிவும் ஞானமும் ஒன்றுதானா என்றும் அந்த உரையாடல் நீண்டது.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கொன்று தோன்றியது.
மெய்ஞானம் என்று வரும்போது அதன் தன்மை ஒரு துளி தான். ஆனால் ஒரு குவளை நிறைய இருக்கும் பாலில் விழும் ஒரு துளி தயிர் போன்றது.
மனம்- அறிவு- ஆகியவற்றில் இருந்த அனைத்தையும் தெளிந்த புரிதலின் தயிராக மாற்றி மனதில் எண்ணங்களையும் அறிவு சார்ந்த சிந்தனைகளையும் மொத்தமாகவே ஞானமயமாய் ஆக்கிவிடும் அது.
இதைத்தான் மெய்யுணர்தல் என்கிறார்கள். அதன் பிறகு வெளியே சராசரி மனிதராக காட்சியளிப்பவர் உள்ளுக்குள் ஞானத்தன்மை நிறைந்தவர் ஆகவே இருப்பார்.
” விறகில் தீயினன் – பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்” என்கிறார் திருநாவுக்கரசர்.
இறைமைக்குப் பொருந்தும் இந்த இயல் வரையறை ஞானத்திற்கும் பொருந்தும்.
ஒரு துளி ஞானம் நம்பால் விழ அனுமதித்தால் ஞானமயம் ஆகலாம் தானே
.
நீங்கள்கூறுவது முற்றிலும் உண்மை.