மரபின் மைந்தன் முத்தையா
(18.07.2024 அன்று புதுக்கோட்டை கம்பன் விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்)

32 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருவி மணியன் அவர்கள் கம்பன் காட்டும் இந்திரசித்தன் என்கிற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் பின்னட்டையில் பதிப்பிப்பதற்காக என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தார்.

பொதுவாக தாயும் தந்தையும் வாழ்கிற காதல் வாழ்வின் விளைவாக ஒரு மகன் பிறப்பான். ஆனால் தந்தை ராவணன் கொண்ட பொருந்தாத காமத்தால் இந்திரசித்தன் இறந்தான்.
ஒரு சிப்பி கிழிந்து முத்து வெளிப்படும். ஆனால் இந்திரசித்தன் என்கிற முத்து தன் தந்தையாகிய சிப்பிக்காக சிதறியது என்னும் பொருள்பட என்னுடைய அந்த கவிதையின் ஆரம்ப வரிகள் அமைந்திருந்தன.

” தந்தை கொண்ட காமத்தால் பிறந்த மகன் மட்டுமல்ல
தந்தை கொண்ட காமத்தால் இறந்த மகன் இந்திரஜித்.
திரை கிழிந்த சிப்பியில்தான் முத்தாடும்- இவன் பாவம்
நரை விழுந்த சிப்பிக்காய் சிதறிவிட்ட முத்தாரம்”
என்பவை அந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள்.


இந்திர சித்தன் என்ற பெயருக்கு இந்திரனை வெற்றி கொண்டவன் என்று பொருள். வானவர்களின் தலைவன் இந்திரன் என்று கருதப்படுகிறது.

முற்றிலும் வேறு ஒரு பிரதேசத்தை சேர்ந்த ஒரு தலைவனை இளம் பருவத்தில் வென்றவன் இந்திரசித்தன்.
அதுவும் இந்திரசித்தனுடைய சித்தப்பாவாக இருந்து நீதிக்கு குரல் கொடுத்து இராமன் பக்கம் சேர்ந்த வீடணன்,” ஏதோ முன்னர் ஒரு காலத்தில் அமுதம் பருகியதால் இந்திரன் சாகாமல் தப்பித்தான்” என்று இந்திர சித்தனைப் பற்றி இலக்குவனுக்கு சொல்கிறான்.

“பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர்கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய்! அமிழ்தின் வன்மையால்”

இன்று உலக அளவில் இந்திய இளைஞர்கள் தொழில் நிலையில் பெறுகிற வெற்றியை இந்திரசித்தனின் வெற்றியுடன் ஒப்பிடலாம்.

நீண்ட நாட்களாகவே ஒரு செய்தி உலவுகிறது.” ஒருவேளை இந்திய இளைஞர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நான் என் அலுவலகத்தின் தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றி விடுவேன்” என்று சொன்னதாக நான் கேள்விப்படுகிறோம்.

அப்படி சொல்லி இருக்கவும் கூடும். அறிவாற்றலில் செயலாற்றலில் இந்திய இளைஞர்கள் சிறந்து விளங்குவதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

எதிர்நிலையில் இருப்பவர்கள் கூட ஒருவரின் தகுதிகளை அங்கீகரிப்பதும் வியந்து பாராட்டுவதும் உண்மையான ஆற்றலின் அடையாளங்கள்.

முதன்முதலாக இலங்கை அரண்மனையில் உறக்கத்தில் இருக்கும் இந்திர சிந்தனை பார்க்கும் அனுமன்” இவன் குகையில் உறங்கும் சிங்கமா? சிவனின் மகன் முருகனா? இவனோடு இலக்குவன் நீண்ட நாள் போர் புரிய வேண்டியிருக்கும் போல் இருக்கிறது” என்று எண்ணுகிறான்.

“வளையும் வாள் எயிற்று அரக்கனோ?
கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன்
யாவனோ? அறியேன்!
இளைய வீரனாம் ஏந்தலும்
இவனுடன் நெடுநாள்
உளைய உள்ளபோர் உளது! என,
உள்ளத்தின் உணர்ந்தான்.”

ஒருவன் உறங்கும் பொழுதே அவன் மாபெரும் வீரன் என்கிற ஆற்றலை அடையாளம் காண முடிகிறது- அதுவும் எதிர் முகாமில் இருக்கும் ஒருவனால் புரிந்து கொள்ள முடிகிறது என்றால் அந்த ஆற்றல் வியப்புக்குரியது.

அதுமட்டுமல்ல. இந்திரசித்தன் போரிடும் ஆற்றலை வியந்து பார்த்த இராமன் “இவன் அழிந்து பட்டால் ஆண்மை மிக்க போராற்றல் இவனுடன் அழியும்” என்று சொல்வதையும் பார்க்கிறோம்.

“அய்யனும், ‘இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல்
என்றான்”.



இன்று உலக இளைஞர்களுடன் போட்டி போடும் இந்திய இளைஞர்களுடைய தனித்தன்மை என்னவென்பது பற்றி சர்வதேச அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

அவற்றில் முக்கியமாக காட்டப்படுவது பாரத நாட்டின் ஆழமான பண்பாட்டு விழுமங்களை ஒவ்வோர் இளைஞனும் வழி வழியாக தனக்குள் கொண்டிருக்கிறான் என்பதாகும்.

ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது இப்போது வளர்ந்து வரும் இந்திய இளைஞர்கள் பலரும் இந்த பண்பாட்டு வேர்களிடம் இருந்து சற்றே விலகி இருப்பதை நாம் கவலையோடு காண முடிகிறது.

உணவு உடை உணர்வு உறவுகளைப் பேணும் முறை மனித சமூகத்தை அணுகும் விதம் என அனைத்தும் இன்று மாறி வருகின்றன.

இந்திரசித்தன் வீழ்ச்சி அடைந்தது கூட அடிப்படை அறம் சார்ந்த பார்வையில் இருந்து விலகி வந்ததால்தான் என்பதை நாம் பார்க்கிறோம்.

இராவணன் மந்திராலோசனை கூட்டுகிற போது சீதையை சிறைப் படுத்தியது அறம் சார்ந்த செயல் அல்ல என்று அவனுடைய சித்தப்பாக்களில் ஒருவன் ஆன கும்பகர்ணன் குரல் கொடுக்கிறான்.

” பேசுவது மானம்- இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரை- நன்று நம் கொற்றம்”

என்று இராவணனை நேரடியாகவே விமர்சிக்கிறான்.

இன்னொரு சித்தப்பா ஆகிய வீடணன் தன் அண்ணன் செய்தது நீதி அல்ல இன்று நேரடியாக எதிர்த்து விலகி வெளியேறுகிறான்.

ஆனால் இந்திரசித்தன் போருக்குப் போகும் வரையில் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்திலேயே பேசுகிறானே தவிர தன் தந்தை செய்தது அறமா? நியாயமா? என்றெல்லாம் சிறிது கூட சிந்திக்கவில்லை.

ஒரு செயலை செய்வதற்கு முன்பாக அந்த செயலின் தன்மை தன்னுடைய பலம் தன் எதிரியின் பலம் தனக்கும் எதிரிக்கும் துணையாக வருபவர்களின் பலங்கள் ஆகியவற்றை முதலில் ஆராய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்”

ஆனால் தான் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் வீரர்கள் என்று பட்டியல் போட விரல்களை நீட்டினால் முதலாவதாக தன் பெயரை வருகிறது என்கிற மமதையில் எதிரிகளை மிகத் தவறாகவும் அலட்சியமாகவும் எடை போடுகிறான் இந்திரசித்தன்.

“அவர்களிடம் யானைப்படை இல்லை குதிரைப்படையில்லை ஆட் படையில்லை அவர்களுக்கு தவ வலிமையே இல்லை” என்றெல்லாம் எண்ணிவிடுகிறான்.

யானை இலர் தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாம் ஓர்
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்;
ஆனவரும் மானிடர் நம் ஆண்மை இனிது அன்றோ!

ஆனால் இலக்குவனுடைய போர் திறமையை பார்த்து மலைத்துப் போய், தன் தந்தையிடம்,” மிகக் கொடுமையான பகையை நீ பெற்றிருக்கிறாய், சீதையை விட்டு விட்டால் அவர்கள் மன்னித்து நம்மை விட்டு விடுவார்கள்” என்று பேசும் அளவுக்குப் போகிறான் இந்திரசித்தன்.

தன்னுடைய போராற்றலால் உலகத்தையே கலக்கி வென்றவன் ஆகிய இந்திரசித்தன், இராம இலக்குவர்களின் ஆற்றலைப் பார்த்துவிட்டு இப்படி பேசுகிறான் என்பதைக் கம்பர் பதிவு செய்கிறார்.

ஆதலால், “அஞ்சினேன்“ என்று அருளலை; ஆசைதான்
அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்’ என்றான்-உலகு எலாம் கலக்கி
வென்றான்.

அதே நேரம் ,பண்பட்ட இந்திய இளைஞனின் அடையாளமாக விளங்கும் இலக்குவன் இந்திரசித்ட்அனை வெற்றி கொள்ளும் இட்த்தில் அவனைப் பற்றி அழகானதொரு வாசகத்தை அடைமொழியாய் அளிக்கிறார் கம்பர் .
“உலகெலாம் நிறுத்தி நின்றான்”.

ஆதிசேடனின் அம்சம் இலக்குவன் என்ற பொருளிலிந்த வரி பாடப்பட்டிருந்தாலும் கூட பண்பாடு, பெரியோரை மதித்தல்கீழ்ப்படிதல் ஆகியகுணங்களைக் கொள்ளும் இளைஞன் உலகத்தை நல்ல பாதையில் நிலை நிறுத்துவான் என்று கொள்ளும் விதமாக இந்த வாசகம் அமைந்துள்ளது.


எதிரிகளை துச்சமாக மதிப்பிடுவது, தன்னுடைய வல்லமையை மட்டுமே பெரிதாக எண்ணிக் கொள்வது, எல்லாவற்றையும் விட அறம் நீதி தர்மம் ஆகியவற்றை மறந்து விட்டு சுயநலத்தோடு செயல்படுவது என்கிற காரணங்களால் இந்திரசித்தன் வீழ்ந்தான் என்பதை கம்ப ராமாயணம் நமக்கு காட்டுகிறது.

இன்று தங்கள் திறமையாலும் ஆற்றலாலும் உலக அளவில் உயர்ந்து நிற்கக்கூடிய இந்திய இளைஞர்கள் பெறக்கூடிய பெரும் பணம் வசதிகள் அதிகாரங்கள் ஆகியவற்றின் பிடியில் தங்கள் பண்பாட்டு வேர்களில் இருந்து விலகி விடாமல் பாரத தேசத்தின் மனித நேயம் தன்னடக்கம் ஒழுக்கம் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய அரிய பண்புகளின் அடையாளங்களாக விளங்குவார்கள் என்றால் இந்த ரசித்தன் அடைந்த வீழ்ச்சியை இந்திய இளைஞர்கள் அடைய மாட்டார்கள் என்று உறுதிப்பட நம்பலாம்.


பண்பாட்டின் வேர்களில் இருந்து விலகியதாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல கடைசி நேரத்தில் எதிரிகளின் வல்லமையை உணர்ந்ததாலும் இந்திரசித்தன் அடைந்த துயரங்களை பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு இந்திய இளைஞர்கள் தங்களை செதுக்கிக் கொள்வார்கள் என்றால் தொடர் வெற்றிகளை பெறுவார்கள்.

காவியங்கள் என்பவை கடந்த காலங்களின் பதிவுகள் மட்டுமல்ல. எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மொழிகளும் வாழ்வதற்கான வழிகளும் நிரம்பியவை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *