கோவை பகுதியில் அஜிதன் திருமணத்திற்கு அழைப்பிதழ் தர போன இடங்களில் எல்லாம் நண்பர் நடராஜன் அனைவரையும் கைகூப்பி அழைத்ததாகவும் தான் வெறுமனே வழிமொழிந்ததாகவும் ஜெயமோகன் எழுதியிருந்தார்.
ஆனால் எங்கள் அலுவலகம் வந்த போது கூடுதலாக ஒன்றைச் செய்தார்.
விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு சைவத் திருமுறைகள் வகுப்புகள் எடுக்க அழைப்பு விடுத்தார்.
‘ஈரோட்டுக்கு பக்கத்துல ஒரு இடம் இருக்கு இல்ல… அங்கதான் நடக்க போகுது” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னார்.
அப்போது நான் அப்பாவியாய் நம்பி விட்டேன்.
அவருடைய அகராதியில் இத்தாலி கூட ஈரோட்டுக்கு பக்கம் தான் என்று புரிந்தது எப்போதென்றால் வந்து சேர்வதற்கான வழிக்குறிப்புகளை நண்பர் அந்தியூர் மணி அனுப்பி வைத்த போது தான்.
வகுப்புகளுக்கு சரியாக வந்து சேர்பவர்கள் வாஸ்கோடகாமாக்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள் என்று அந்த குறிப்புகளைப் பார்த்து நினைத்துக் கொண்டேன்.
இலக்கிய உலகில் எனக்கு ரொம்ப வேண்டிய ஒருவர் இந்த குறிப்புகளை பார்த்து விட்டு ” இந்த வழிகாட்டுதலைத் தயாரித்தவருக்கு ஒரு விருதே கொடுக்கலாம்” என்றார்.
அந்த குறிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு
.முகாமிற்கான குறிப்புகள்:
1. குளிர் இருப்பதால் குளிர் காக்கும் உடைகள் கட்டாயம் தேவை.
2.பொதுப் பயன்பாட்டு கடைகள் 40கிமில் தான் உள்ளது. எனவே கட்டாயமாக தேவைப்படும் பொருட்களை கொண்டு வருக.
3.முகாமானது வெள்ளி காலை 10 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு மதியம் 1 மணிக்கு நிறைவுறும்.வெளியூரிலிருந்து வருபவர்கள் ஈரோடு ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் வெள்ளி காலை 6 மணிக்குள் வருவது நல்லது.பேருந்தில் வெள்ளிமலை வரத் திட்டமிடுபவர்கள் அந்தியூர் பேருந்து நிலையத்தில் காலை 7.30 மணிக்குள் வந்து சேரும் அளவில் திட்டமிடவும்.
4. ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் தங்க விரும்புபவர்கள் ஒரு நாள் முன்பே 81242 02552 என்கிற முருகனின் எண்ணிற்கு தகவல் அனுப்புக. ஈரோடு வந்துவிட்டு அழைப்பதை தவிர்க்கவும். பெண்களுக்கே முன் உரிமை. செல் போன் தொடர்பு :
வெள்ளிமலைக்கான குறிப்புகள்.
அ. இங்கு செல்போன்களுக்கான டவர் மிகக் குறைவாகவே கிடைப்பதால் அதிவேக இணையமோ உடனடியான குறுஞ்செய்திகளோ உங்களுக்கு கிடைக்காது.
ஆ. BSNL மற்றும் JIO ஆகிய இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் குறைந்தபட்சத் தொடர்புதான் உங்களுக்கு கிடைக்கும். இவற்றின் இணைப்புகளில் ஒன்றினை கொண்டுவரவும்.
இ. இவை இரண்டினைத் தவிர்த்த மற்ற நிறுவனங்களின் இணைப்புகள் 30 கிலோமீட்டருக்கு முன்பே துண்டிக்கப்பட்டு விடும். 2.பேருந்தில் வருபவர்கள் கவனத்திற்கு : அ. இவ்விடத்திற்கு அந்தியூரினைத் தவிர்த்து வேறெந்த இடத்திலிருந்தும் நேரடியான பேருந்து வசதி இல்லை.ஆகவே இங்கு வருவதற்கு அந்தியூர்தான் ஒரே பேருந்து வழித்தடம்.
ஈ. ஈரோட்டிற்கு பேருந்து வழியாக வந்துசேரும் நபர்கள் அந்தியூருக்கான பேருந்தில் ஏறி அந்தியூர் வரவும்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும் நபர்கள் அங்கிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து அந்தியூர் வரவும்.அந்தியூருக்கு ஈரோட்டில் இருந்து மூன்று வழிகள் இருக்கின்றன.நேர்வழி அந்தியூர் எனக்கேட்டு ஏறவும்.
உ. தனியார் பேருந்துகளில் சில பவானி பைபாஸ் என லட்சுமிநகர் நிறுத்தத்தில் தங்களுடைய பயணிகளை இறக்கிவிடுவர்.அங்கிருந்து அந்தியூர் வர அவ்வழியாக வரும் அந்தியூர் பேருந்துகளில் ஏறவும்.அல்லது பவானி செல்லும் நகரப்பேருந்தில் ஏறி பவானியை அடைந்து அங்கிருந்து அந்தியூர் நேர்வழி செல்லும் பேருந்தில் ஏறி அந்தியூர் வரவும்.
ஊ. அந்தியூரிலிருந்து வெள்ளிமலைக்கு ஒரு நாளைக்கு 5 முறை மட்டுமே அரசுப் பேருந்து இருக்கிறது. அதிலும் இரண்டு முறை மட்டுமே நேரடியாக வெள்ளிமலை வரும்.காலை 5.20 மற்றும் 7.30 க்கு அந்தியூரில் இருந்து புறப்படும் அந்தியூர் -மடம் என்னும் வழித்தடப் பேருந்து மட்டும்தான் நேரடியாக வருபவை.மீதமுள்ள மூன்றும் தாமரைக்கரையில் இருந்து மடம் வருபவை.
எ. அந்தியூரிலிருந்து நேரடியாக மடம் வரும் பேருந்தில் ஏறும் நபர்கள் வெள்ளிமலை என்று பயணச்சீட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்விரு வண்டிகளை அந்தியூரில் பிடிக்க இயலவில்லை என்றால் பர்கூர்,தட்டகரை,தாளகரை,கர்கே கண்டி,மைசூர்,கொங்காடை செல்லும் வண்டிகளில் ஏதேனும் ஒன்றில் ஏறி தாமரைக்கரை வந்து சேரவும்.தாமரைக்கரையில் இருந்து மதியம் 12.00,3.30,5.45 ஆகிய நேரங்களில் மடத்திற்கான பேருந்து கிளம்பும்.அவைகளில் ஏறி வெள்ளிமலைக்கு பயணச்சீட்டு எடுக்கவும்.
ஏ .தாமரைக்கரையில் இருந்து மாலை 5.45 க்கு புறப்படும் வண்டி ஞாயிற்றுக்கிழமையில் 5.15 க்கே புறப்பட்டுவிடும்.எனவே வெள்ளிமலைக்கு பேருந்தில் வருவதற்கான இறுதி வாய்ப்பு மாலை 4.30 தோடு அந்தியூரில் முடிந்துவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் 4.00 மணியோடு முடிந்துவிடும்.
.தனி நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு:
நித்யவனத்திற்கான கூகுள் வரைபட இணைப்பு. https://maps.app.goo.gl/ VdfUL62R8qiViaoHA
இணையத் தொடர்பு இல்லாத காரணத்தால் கூகுள் வரைபட இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்றால் பின்வரும் பாதையினைப் பின்பற்றவும். அந்தியூரிலிருந்து தாமரைக்கரை வர ஒரு பாதை மட்டுமே உள்ளது.எனவே தாமரைக்கரை எளிதாக வந்துவிடலாம்.அந்தியூரிலிருந்து 10 கிமீ தொலைவில் வனத்துறை சோதனைச்சாவடி இருக்கிறது. அங்கிருந்து 14 கீமீ காட்டுவழியாக வரும் பாதை.அதன்முடிவில் பாதையின் இடதுபுறத்தில் வனத்துறை அலுவலகம் இருக்கும்.அதுதான் தாமரைக்கரை.வனத்துறை அலுவலகம் தாண்டி 50 மீ வந்தால் பாதையின் வலதுபுறமாகப் பிரியும் பாதையே மடம் வரும்பாதை.மடம் 20 கிமீ எனப் அறிவிப்பு பலகை இருக்கும்.அப்பாதையில் வந்தால் 1 கிமீயில் தாமரைக்குளம் ஒன்றினைப் பார்க்க முடியும்.அக்குளத்தினைத் தாண்டியவுடன் வனச்சாலை ஆரம்பிக்கும் அதில் 4 கிமீ வந்தால் ஈரட்டி எனும் ஊர் வரும்.அங்கிருந்து நேராக வந்தால் 1 கிமீ தாண்டி அடுத்த வனச்சாலை ஆரம்பிக்கும்.அதைத்தாண்டினால் தேவர்மலை என்னும் ஊர் வரும்.அங்கிருந்து 4 கிமீ வந்தால் வெள்ளமலை வரும்.சாலையின் இடதுபுறம் சிறிய நந்தி சிலை ஓலையில் வேய்ந்த கூரையோடு காட்சியளிக்கும் இடமே வெள்ளிமலை பேருந்து நிறுத்தம் அவ்விடத்தில் இருந்து இன்னும் 200 மீ முன் சென்றால் நித்யவனத்திற்கு வரும்பாதைக்கான கைகாட்டி இருக்கும்.
காட்டினை ஒட்டியே நித்யவனம் அமைந்திருப்பதால் இருள ஆரம்பிக்கும்போது மின்சார வேலி இயங்குவது கட்டாயம்.எனவே நித்யவனத்திற்கு வந்து சேர இரவாகிவிடும் என்னும் சூழல் இருந்தால் கட்டாயம் அந்தியூர் மணியினை அழைக்கவும்.7904505335 என்னும் எண் கிடைக்காவிட்டால் 8300432585 எண்ணினை அழைக்கவும்.அல்லது குறுஞ்செய்தி அனுப்பவும்.”
முதல் நாள் இரவே ஈரோடு வந்து தங்கி விட்டேன். என்பால் மிகவும் அனுதாபம் கொண்டு அந்தியூர் மணி ஒரு வாகனத்தை அனுப்பி வைத்தார்.
காலை 6:30 மணிக்கு ஓட்டுனர் வருவதாக ஏற்பாடு. 6:15 மணிக்கு அவரை தொலைபேசியில் அழைத்தேன்.
“கொஞ்சம் லேட்டாகி போயிடுச்சுங்க அண்ணா. ஆறரைக்கெல்லாம் வந்துடறேன்” என்றார்.
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா என்று நினைத்துக் கொண்டு தயாரானேன்.
பவானி தாண்டியதும் ஓட்டுனர் வழக்கமாக தேனீர் அருந்தும் இடத்தில் நிறுத்தினார். தேநீர் சாப்பிட்டோம்.
என்னிடம் மூன்று பைகள். ஏதோ இமயமலை ஏறப்போகிறவன் போல தயாராகி இருந்தேன்.ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று தான் எடுத்துப் போகவில்லை.
சமவெளி தாண்டி மலைப்பாதை தொடங்கியது. சமச்சீராக இருக்கும் என்று நினைத்த இடங்கள் எல்லாம் குண்டும் குழியுமாகவும் குண்டும் குழியுமாக தொடர போகிறது என்று நினைத்த இடங்கள் எல்லாம் அருமையான சாலைகளாகவும் மாறி மாறி இருந்தன.
தொடர்பு எல்லைக்கு அப்பால் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தோம்.
ஒரு திருப்பத்தில் கைகாட்டி அதுதான் நாம் போக வேண்டிய இடம் என்று ஓட்டுநர் சொல்ல அங்கிருந்த கைகாட்டி மரமும் நித்திய வனம் என்ற பலகையை தாங்கி நின்றிருந்தது.
சின்னச் சின்னக் குழுக்களாய் ஆங்காங்கே இருந்த பங்கேற்பாளர்கள் கையசைத்து வரவேற்றார்கள்.
அந்தியூர் மணி அன்புடன் வரவேற்றார். ஈரோட்டிலேயே நான் ஆயத்தமாகி வந்திருந்ததால் சிற்றுண்டி எடுத்துக்கொண்டு மேடைக்குத் தயாரானேன்.
முதல் அமர்வில் திருமுறைகளின் வரிசை அவை வரிசை படுத்தப்பட்ட காரணம் அவை பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்ட பின்புலம் போன்றவை பற்றி பகிர்ந்து கொண்டோம்.
என்னுடைய நோக்கம் திருமுறைகள் பற்றிய அறிமுகம் தருவது. திருமுறை வாசிக்கும் போதோ கேட்கும்போதோ ஏற்படக்கூடிய உணர்வு நிலைகளை உணரச் செய்வது எல்லாவற்றிற்கும் மேலாக திருமுறை ஆசிரியர்களின் திருவுள்ளம் காண்பது.
அதேபோல திருமுறை ஆசிரியர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் உண்மையே என்பதை உணர்த்தும் அகச் சான்றுகளைக் காண்பது.
முதல் அமர்வுக்குப் பின்னர் மதிய உணவு. நெடுந்தொலைவு அனைவரும் பயணம் செய்து வந்ததால் நான்கு மணி வரை ஓய்வு.
அடுத்த அமர்வில் ஒன்றைச் சொன்னேன். நட்சத்திர விடுதிகளில் இருக்கும் நீச்சல் குளங்களில் இங்கே இரண்டடி இங்கே 5 அடி என்றெல்லாம் குறிப்புகள் இருக்கும்.
அதைப் பார்த்து அவரவர் உரிய இடத்தில் இறங்கி குளிக்கவோ நீந்தவோ முற்படுவார்கள்.
ஆனால் திருமுறை என்பது ஆபத்து இல்லாத காட்டு வெள்ளம். நேராக இறங்கி விட வேண்டும். மூழ்கி மூழ்கி முக்குளிக்க வேண்டும்.
இதற்காக இந்த வகுப்பில் நான் மேற்கொண்ட ஒரு முயற்சி முழு வெற்றி பெற்றது திருமுறை ஆசிரியர்களின் அருளாலும் பங்கேற்பாளர்களும் முழு ஒத்துழைப்பாலும் மட்டுமே நிகழ்ந்தது.
பங்கேற்பாளர்களில் ஒருவரை தவிர நான் உட்பட யாருமே முறையாக பண்ணிசை பயிற்சி பெற்றவர்கள் அல்லர். பல நூறு பாடல்களை பண்ணோடு கேட்டுக் கேட்டு அவை எனக்குள் பதிந்திருந்தன.
ஈஷா சன்ஸ்க்ருதி குருகுலத்தில் பயின்ற திரு தேஜஸ் மட்டுமே பண்ணிசை பயிற்சி பெற்றவர்.அங்கே நான் நடத்திய திருமுறை வகுப்புகளில் முழுமையாக பங்கேற்றவரும் கூட. அவர் வகுப்பில் இருந்தது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
திருமுறை பாடல்கள் ஒவ்வொன்றையும் என்னுடன் சேர்ந்து பாடும்படி பங்கேற்பாளர்களை கேட்டுக் கொண்டேன்.
முதல் எடுப்பிலேயே அத்தனை பேரும் ஒன்றிணைந்து ஒத்த நிலையில் வரி வரியாக எனக்குப் பின்னர் பாடினர்.
ஒதுவா மூர்த்திகளின் ஒருமித்த குரல்கள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வலைகளை அங்கே ஓரளவு உணர முடிந்தது.
முதல் அமர்வில் திருமுறைகள் பற்றி தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டவர்கள் இப்போது திருமுறை அனுபவத்தை உள்நிலையில் உணர்ந்து லயிக்கத் தொடங்கினார்கள்.
இரவு உணவுக்குப் பின்னர் சைவம் சார்ந்த நுட்பமான உரையாடல்கள் நிகழ்ந்தன.
மறுநாள் காலை நடைப்பயிற்சிக்கு கோகுல் உள்ளிட்ட நண்பர்கள் அழைத்துச் சென்றனர்.
நித்திய வனம் இருக்கும் பகுதியைத் தாண்டி திருமடம் ஒன்று அமைந்துள்ளது. அது வீர சைவத் திருமடம் என்றும் இரண்டு துறவிகள் அதனை வழிநடத்துகின்றனர் என்றும் தெரிந்து கொண்டேன்.
அந்த மலைப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வுக்கான அத்தியாவசியங்களை உருவாக்குவதுடன் அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை தேவைகளை அந்த திருமடமே பேசி பெற்றுக் கொடுப்பதால் அவர்களுக்கு அங்கே நல்ல செல்வாக்கு இருந்தது.
அந்த அதிகாலை வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெற்றி நிறைய திருநீறு பூசி
காதில் பூசை மலர்கள் செருகி நின்றனர்.
அந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட தொப்பை இல்லை என்பதை கோகுல் சுட்டிக்காட்டினார். அந்த மொத்த சுற்றுப்பிரதேசத்திலும் தொப்பையுடன் உதவிய ஒரே மனிதர் நித்திய வனம் வாயிற்காப்போன் மட்டுமே.
“ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்றார் திருவள்ளுவர். திருவாசகம் பாடத் தொடங்கிய போது பலர் கண்களும் கசியத் தொடங்கின.
(முதல் நாளிலிருந்து திருமுறை பாடல்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் தாரை தரையாய் கண்ணீர் வடித்த
பங்கேற்பாளர் ஒருவரும் இதில் அடக்கம்)
முதல் ஏழு திருமுறைகளுக்கு தான் பண்கள் வகுக்கப்பட்டுள்ளன. என்றாலும் சிவபுராணம் வகுப்பில் ஓதப்பட்ட போது பண்ணிசை வேந்தர் அமர் குடந்தை சுந்தரேசனார் அவர்களின் பாணியை கடைப்பிடித்தேன்.
அவர் இசை நுணுக்கம் அறிந்த பேரறிஞர். அவர் பாணிகளில் முதன்மையானது சிவபுராணம் பாடும்போது குறிலைக் குறிலாகவும் நெடிலை நெடிலாகவும் பாடுவது.
இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. திருவாசகம் மாணிக்கவாசகருக்கு “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி”ய படைப்பாகும்.
இது வெறும் உபசார வார்த்தை அல்ல. உருகுகிற உள்ளத்தையே மூலப்பொருளாகக் கொண்டு தன் உடலை இறைவன் படைத்தான் என மாணிக்கவாசகர் அருளுகிறார் .
” உள்ளம் கொண்டோர் உருச் செய்தாங்கு
அள்ளுறு யாக்கை அமைத்தனன்”
என்கிற வரிகள் இதனை உணர்த்துகின்றன.
மதிய வகுப்பிலும் திருவாசகம் நீண்டதால் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பாடலையும் பதினோராம் திருமுறையில் சில பாடல்களையும் பார்த்துவிட்டு தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஒன்றரை மணி நேரம் திருமந்திரம் பாடல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அன்று இரவும் உரையாடலும் இசைப் பாடல்களும் களை கட்டின. அந்தியூர் மணி கலகலப்பாக உரையாடலை வழிநடத்தினாலும் கண்டிப்பான தலைமையாசிரியர் போல மிகச் சரியாக இரவு 10 மணிக்கு எல்லாம் நிறைவு செய்து அனைவரையும் உறங்கச் செல்லுமாறு பணித்தார்.
“செல்லக் கிளிகளாம் பள்ளியிலே”என்று பாட்டுப் பாடி தூங்க வைக்காத குறை தான்.
மறுநாள் காலை 10 முதல் 12 வரை 12-ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. திருநீலகண்டர் எறிபத்தர் கண்ணப்பர் சிறுத்தொண்டர் இயற்பகையார் ஆகியோர் வரலாறுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
நாயன்மார்கள் பற்றி இன்னும் நெருக்கமாக உணர்ந்து கொண்டதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தார்கள். குழு புகைப்படம் எடுத்த பின் மதிய உணவு. ஒருவருக்கொருவர் விடைபெற்றுப் புறப்பட்டோம்.
மலைப்பரப்பில் 13 ஏக்கர் பரப்பளவில் முழுக்க முழுக்க பயிலரங்குகளுக்காகவே ஓர் இடத்தை நிர்மாணித்து அறிவுலகின் பல்வேறு தரப்புகளையும் தன் வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளர் அறிமுகம் செய்வது அனேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.
இதனை கனவு கண்டு நனவாக்கி இருக்கும் திரு. ஜெயமோகன் சிவனருளால் சீர்மைகள் யாவும் பெறுக!