இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் போல் எழுதாத நேரங்களிலும் உள்ளொளி கனல நின்ற காம்பீர்யன் அவர்.
தன்னைத் தானே சிகரமாய் உயர்த்தி அந்தசி சிகரத்தின் முகட்டில்
தன்னையே ஒளியாய் தகதகக்கச் செய்த ஜோதியாய் சுடராய் சூழொளி விளக்காய் நீடு துலங்கும் நிலை வெளிச்சம் அவர்.
அவருடைய பாத்திரங்களில் அவர் ஊற்றி வைத்த வாழ்க்கை, உயிர்ப்பு மிக்கது.அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரிலும்
விசுவரூபத்திற்கான வாமனக் காத்திருப்பை தரிசிக்க முடியும்.
அவருடைய “நான்” வெகு பிரசித்தம்.ஆனால் அது அகந்தையின் பாற்பட்ட நானல்ல.பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் பேருணர்வின் துளிகளால் தூண்டப்பட்ட அகத்திய வேட்கை அது.
அலைகளுக்கு மத்தியில் கம்பீரமாய் நகர்கிற கப்பல் கரைசேர்ந்த பிறகும் காணத்தகு பிரம்மாண்டமாய் நிலைகொண்டிருப்பது போல
எழுதாமல் வாளாவிருந்த போதும்,மேடைகளை ஆண்டுநின்ற போதும்,தனி உரையாடல்களின் போதும் சஹிருதயர்களுடனான சபைக்களத்திலும்,நோய்மையால் மௌனித்த போதும் ஆளுமையின் அடர்திடமாய் நங்கூரம் பாய்ச்சி நினறிருந்தார்.
இன்று சில எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகளப் பொருண்மைகளால் தாங்களோ அல்லது தங்கள் சகாக்களோஜெயகாந்தனைத் தாண்டி தசமங்களாயிற்று என பெருமையடித்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன். எழுத்து மட்டுமல்ல எழுத்தாளன் என்பதை பாரதிக்குப் பின்னர் உணரச் செய்தவர் ஜெயகாந்தனே. அவரின் ஆளுமை முழுமையானது. அதிர்வுகள் மிக்கது. ஒருபோதும் நகல்செய்ய இயலாத நவயுக ஜோதி ஜெயகாந்தன்
அனலடிக்கும் மனிதநேயம்.