விசித்திர வீரியனை உற்சாகம் மிக்கவனாய் நோயின் தீவிரம் தொட முடியாத தொலைவில் நிற்பவனாய் முதற்கனல் சித்தரித்தாலும் அவன் உண்மையின் தீவிரமும் உணர்ச்சியின் தீவிரமும் ஆட்கொள்ளப்பட்டவன் என்று இரண்டு முக்கிய இடங்கள் நிறுவுகின்றன.

அம்பைக்கு இழக்கப்பட்ட அநீதியறிந்து கொதித்துப் போகிற விசித்திர வீரியன்,அவள் தெய்வத்தன்மை எய்திய அதிமனுஷியாய்,தவம் செய்து சிவவரம் பெற்றவளாய் வீறுகொண்டலைவது கேட்டு அவளைத் தேடிப் போகிறான்.ஒரு பிடாரி சிம்மம் ஒன்றைக் கொன்றுண்ணும் காட்சிகண்டு அவளே அம்பையென்றறிந்து தன்னை பலி கொள்ளுமாறு மன்றாடுகிறான்.

அவளுடைய காலடியில் உறைவாளை உருவிவைத்து தலைதாழ்த்த உதிரம் பெருகும் வாயுடைய அம்பை அவன் தலைமீது தன் பாதம் பதித்து ஆசிர்வதிக்கும் விந்தை நடக்கிறது. (ப-172)

மனம் பொறாத விசித்திர வீரியன் உருவிய வாளுடன் பீஷ்மரைத் தேடிப் போகிற இடம் நவரசம் ததும்பும் நாடகப் பாங்குடன் பொலிகிறது.தன்னை வெட்ட வரும் விசித்திர வீரியனுக்கு வாளை எப்படிப் பிடிப்பது என்று கற்றுத் தருகிறார்.

இவர்கள் இருவரிடையேயான உரையாடலில் பீஷ்மர் பற்றிய முதற்கனலின் சித்திரம்,பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் ஒரு செய்தியை உறுதி செய்து கொள்ள உதவுகிறது.

” நீங்கள் அறியாத அறமா,நீங்கள் கற்காத நெறிநூலா” என்று கேட்கும் விசித்திர வீரியனுக்கு பீஷ்மர் பதில் சொல்கிறார்.

“நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை.நெறிகளை வளைக்கும் முறைகளையே நூல்கள் கற்பிக்கின்றன.இளையோனே! நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத் தெளிவு உன்னிடம் இருக்கிறது”.

பாஞ்சாலி சபதத்தில் துகிலுரிய ஆணை பிறப்பிக்கப்படுகையில் சாத்திரங்களும் நீதிகளும் இதைத்தான் சொல்கின்றனவா என்று பாஞ்சாலி கதறுகையில் பீஷ்மர், “இந்த செயல் தவறுதான்.ஆனால் இது தவறு என நீதி
நூல்களிலோ சாத்திரங்களிலோ சொல்லப்படவில்லை”என்கிறார்

“செய்கை அநீதியென்றுதேர்ந்தாலும் சாத்திரம்தான்
வைகும் நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்
ஆங்கவை நின் சார்பில் ஆகாவகையுரைத்தேன்
தீங்கு தடுக்கும் திறமிலேன் என்று சொல்லி
மேலோன் தலை கவிழ்ந்தான்

என்கிறான் பாரதி.

பீஷ்மர் சட்டங்களை நீதிகளை சாத்திரங்களை அவற்றின்ஓட்டைகளைக் குறிவைத்து கொண்டு செலுத்துவதில் கைதேர்ந்தவர்போலும்!!

விடைபெறும் போது பொட்டிலடித்தாற்போல் விசித்திரவீரியன் பேசிவிட்டுப் போகிற இடம்,அந்தப்பாத்திரத்தின் மீதான மதிப்பை பலமடங்குஉயர்த்துகிறது.

மூத்தவரே! பெரும்பாவங்களுக்கு முன்னர் நம் அகம்கூசவில்லையென்றால் நாம் எதற்காக வாழவேண்டும்?”(-176)

அதேபோல அம்பிகையுடன் இரண்டாம்நாள் சந்திப்பில் அவன் உறவு கொள்ளவேண்டும் என சத்யவதி வற்புறுத்தும்போது தான் ஒருபோதும் மரணத்தைஅஞ்சியதில்லை என்று முன்னர் ஸ்தானிகரிடம்கூறிய விசித்திரவீரியன் இப்போது மரணத்துக்கு அஞ்சுகிறான். ஆனால் அவனுக்காக அல்ல

அவளுடன் உறவு கொண்டால் நான்இறப்பது உறுதி.அதில் எனக்கு
வருத்தமுமில்லை.வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பைஅறிந்திருக்கிறேன்.

நேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம்என் உயிருக்காக வாதிட்டிருக்க மாட்டேன்.நேற்று அந்தப் பெண்ணைஅறிந்து கொண்டேன்.
விளையாட்டுப் பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக் காட்டுவது போல,அவள் தன்அகம் திறந்து கொண்டிருந்தாள்.அவளுடையமங்கலமும் அழகும் எல்லாமே என்மெல்லிய உயிரிலுள்ளது  என்றறிந்த போது நேற்றிரவு என்அகம் நடுங்கி விட்டது
(-252-253) என்கிறான்.

அம்பிகை அம்பாலிகை வாழ்வின் முதல் மலர்ச்சியாய் விளங்க நேர்ந்த பொறுப்புணர்வில் எழுகிற வார்த்தைகள் இவை. பெண்களுக்கு நேரும் துயரங்களுக்கு தான் காரணமில்லாத போதும் தான் பொறுப்பேற்க வேண்டுமென்னும் எண்ணம் எப்படியோ விசித்திர வீரியனுக்கு ஏற்படுவதைக் காண்கிறோம்.

இவனை குருகுலத்தின் குலக்கொழுந்து என்று சொல்லத் தோன்றாமல் போகுமா என்ன/ ஒரு மரத்தின் வேரில் பழுது நேர்ந்தாலும்,அதன் உச்சியில் கோடை வெப்பம் படிந்தாலும் முதலில் வாடுவது கொழுந்துதான்.அதுபோல் பாட்டி சுனந்தையின் துயருக்கும் அம்பையின் துயருக்கும் தன்னையே பொறுப்பாக்க முன்வரும் விசித்திர வீரியன் மிக நிச்சயமாய் குலக்கொழுந்துதான்.

சத்யவதி,கருநிலவு நாளில் அம்பிகையுடன் விசித்திரவீரியன் கூடாமல் போனது பற்றி கடுமையாக சினந்து பேசும்போது உறுதியுடன் பதில் தரும் விசித்திர வீரியன் மழை தீரும் முன் வெய்யில் வருவது போல் அவளிடம் மிகுந்த பாசத்துடன் பேசுகிறான்

பேச்சுக்குப் பேச்சு,ஆணையிடுகிறேன் என்று சொல்வது சத்யவதியின் வழக்கம்.மூன்று இளவரசிகளை சிறையெடுக்க பீஷ்மரிடம் கூட அவள் ஆணைதான் இடுகிறாள்.

அதை ஸ்தானகருடன் பேசி கிண்டல் செய்யும் விசித்திரவீரியனின்  நகைச்சுவையுணர்வு அபாரம்.

”சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள்.அங்கே ஸ்தானகரும் மருத்துவரும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர்.ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி
ஆணைகளிட்டாள்.அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.

ஸ்தானகர் உள்ளே வந்து ,அரசே பேரரசி கிளம்புகிறார் என்றார்.’ஆம் ஆணையிட்டு விட்டாரல்லவா.அவர் கடலாமை போல.முட்டைகளைப் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்ப்பதேயில்லை.

விசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அருகே வந்து'”அன்னையே! இந்தக் கோடைக் காலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே” என்றான்.சத்யவதி, ‘”அதற்கு தவ வல்லமை வேண்டும்.என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்'”என்றாள்.(ப-254)

அதற்கடுத்து ஜெயமோகன் சித்தரிக்கும் காட்சி அற்புதமானது.அதை நீங்கள்
நூலில் படிக்க வேண்டும்.

அவனுக்கு சிகிச்சைதர திருவிடத்திலிருந்து வரும் சித்தர் மிகக் குள்ளமானவர் எனவும் அவர் பெயர் அகத்தியர் எனவும்,அவர் பொதிகைமுனி அகத்தியரின் மாணவர் என்றும் ஜெயமோகன் எழுதுகிறார்.

அகத்தியர் எந்தக் காலத்தவர் என்னும் குழப்பம் தவிர்க்கக் கருதியோ என்னவோ இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார்.வந்திருக்கும் சித்தர் அகத்தியரின் சீடரே தவிர  சக்தியில்அதே தன்மை கொண்டவர் என்பதையும் ஜெயமோகன் பதிவு செய்கிறார்.

“ஸ்தானகர் ,தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியரின் குருமரபில் வந்தவரா? என்றார்.”நான் அவரேதான் ‘என்றார் அகத்தியர்.ஸ்தானகர் திடுக்கிட்டார். ‘இந்த தீபச்சுடர்,அந்தத் திரைச்சீலையில் ஏறிக் கொண்டால்
அதை  வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்”என்று அகத்தியர்கேட்ட போது நெளிந்தார்.”(ப-231)

ஆனால் அகத்தியர் காகபுஜண்டர் போன்றவர்கள் கல்ப காலமும் வாழ்பவர்களாகக் கருதப்படுபவர்கள்.இராமனைப் பார்த்து “நீ நாற்பதாவது இராமன்”என சொன்னார் என்றொரு செய்தி உண்டு.

பெண்சாபம் விழுந்த மண்ணுக்கு வராத சூதர்கள்,அஸ்தினபுரத்திற்கு மட்டும் எப்படி வந்தார்கள் என்று கேட்கும் பீஷ்மனிடம் விசித்திர வீர்யனின் உயர்வு கருதி வந்ததாக சொல்கிறார்கள்.சிலப்பதிகாரத்தில் சதுக்கப்பூதம் ஒருவனைக் கொல்ல முற்படுகிறது.அவனுக்கு பதில் தன் உயிரை எடுத்துக் கொள்ளுமாறு கோவலன் கேட்க, தவறு செய்த ஒருவன் உயிருக்கு பதில் நல்லவன் உயிரை எடுத்துக் கொண்டால் தனக்கு முக்தி கிடைக்காது என்று சொல்கிறது.

“நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பெமக்கில்லை”

அம்பை முதற்கொண்டு அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்ட நல்லுயிர் அவன் என்று தோன்றுகிறது.விசித்திரவீரியனை இவ்வளவு விரிவான உயிர்ச்சித்திரமாய் தீட்டியுள்ள முதற்கனல்மிக நிச்சயமாய் ஒரு முத்திரைப் படைப்பு

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *