திசையெங்கும் பொன்னொளிரத் திறந்ததொரு கதவு
அசைவின்மை எனும்நதியில் அசைந்ததொரு படகு
கசிகின்ற கண்ணிரண்டும் கங்கைநதி மதகு
இசைதாண்டும் மௌனத்தில் எழுந்தசுக அதிர்வு
பாறையின்மேல் பூவொன்று பூத்ததிந்த தருணம்
மாறாத ஞானத்தின் மூலம்மேல் கவனம்
கீறாமல் கீறிவிட்ட ஆக்ஞையிலே சலனம்
ஆறாகப் பெருக்கெடுக்கும் ஆனந்த அமுதம்
சாமுண்டி மலையிலந்த சாகசத்தின் பிறப்பு
தாமென்ற எல்லையினைத் தாண்டியதோர் இருப்பு
ஓமென்னும் அதிர்வினிலே ஒப்பற்ற லயிப்பு
நாமெல்லாம் கரையேற நாயகனின் சிலிர்ப்பு
முன்னமொரு பிறவியிலே மலர்ந்ததந்த ஞானம்
பின்னுமொரு பிறப்பினிலே பெருகிவந்த மோனம்
பொன்னிலொரு சுடராகப் பூத்தெழுந்த கோலம்
இன்றிங்கே இறைவடிவாய் இலங்குகிற சீலம்