ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி
காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி
நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி
பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும் புலமை அபிராமி
தொட்டது துலங்க துணையென நிற்கும் கருணை அபிராமி
கெட்டவர் நடுங்க கீழ்மைகள் களையும் கடுமை அபிராமி
முட்டிய கன்றின் இதழ்தொடும் அமுதின் முதல்துளி அபிராமி
ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவாய் உதிப்பவள் அபிராமி
உன்னிய நெஞ்சில் ஓமெனும் மந்திரம் பதிப்பவள் அபிராமி
மன்னிய வினைகள் முழுவதும் வீழ்ந்திட விதிப்பவள் அபிராமி
சந்நிதி வரச்சொல்லி சித்துகள் நிகழ்த்தி சிரிப்பவள் அபிராமி
அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி
அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி /
அமுததுளிகளாய் அபிராமி!