சித்திரம் தீட்டிட விரும்பிவந்தேன் -திரைச்
சீலையில் உன்முகம் தெரிகிறது
எத்தனம் இன்றியென் தூரிகையும்-உன்
எழில்முகம் தன்னை வரைகிறது
எத்தனை தேடல்கள் என்மனதில்-அவை
எல்லாம் குழைத்தேன் வண்ணங்களாய்
நித்திலப் புன்னகை தீட்டுகையில்-அந்த
நிலவொடு விண்மீன் கிண்ணங்களாய்!!
கண்களின் பாஷைகள் வரைவதற்கு-அந்தக்
கம்பனின் எழுதுகோல் வாங்கிவந்தேன்
பண்ணெனும் இன்சொல் வரைவதற்கோ-நல்ல
புல்லாங்குழலொன்று கொண்டுவந்தேன்
மண்தொடும் புடவை நுனிவரைய-அந்த
மன்மதன் அம்புகள் தேடிவந்தேன்
பெண்ணுன்னை முழுதாய் வரையவென்றே-இந்தப்
பிறவியைக் கேட்டு வாங்கிவந்தேன்
பொன்னில் நனைந்தநல் வளைவுகளும்-எனைப்
பித்தெனச் செய்யும் அசைவுகளும்
மின்னில் எழுந்தவுன் புன்னகையும்-நல்ல
மதுத்துளி சுமக்கும் பூவிதழும்
என்னில் கலந்தவுன் பேரழகும்-இங்கே
எழுதிக் காட்டுதல் சாத்தியமோ
இன்னும் எத்தனை சொன்னாலும் -உன்
எழிலெந்தன் புனைவுக்கு வசப்படுமோ
உள்ளம் என்கிற திரைச்சீலை -அதில்
உன்னை நீயே வரைந்துதந்தாய்
வெள்ளம் வருகிற பாவனையில்-என்
வாழ்வில் நீயே விரைந்துவந்தாய்
விள்ளல் அமுதம் விரல்நுனியில்-என
விநாடி நேரம் தீண்டிச்சென்றாய்
துள்ளும் கலைமான் ஜாதியடி-என்
துயிலெனும் வனத்தில் திரிந்திருந்தாய்
காட்டுச் சுனையெனப் பாய்ந்துவந்தே-என்
கனவின் வேர்களை வருடுகிறாய்
மீட்டும் வீணையின் தந்திகளை-உன்
முறுவல் கொண்டே அதிரச்செய்தாய்
காட்டிய உவமைகள் அனைத்தையுமே-உன்
கால்களின் கொலுசில் கோர்த்துக் கொண்டாய்
வாட்டும் கருணை கொண்டவளே-என்
வாழ்வை எழுதி வாங்கிக் கொண்டாய்

Comments

  1. அழகான சந்தங்கள் அசைந்தாடுது-தமிழ்
    அதற்கேற்ப கருத்தோடு இசைந்தாடுது
    தமிழைத்தான் உணவாகத் தின்கின்றீரா..-இல்லை
    தண்ணீராய் செந்தேனாய் குடிக்கின்றீரா?
    அமிழ்தாக கவியாவும் இனிக்கின்றதே-ஐயா
    அருந்திவிட இனும்வேண்டு மிருக்கின்றதா..?

    கவிஞர் பொத்துவில் அஸ்மின்(இலங்கை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *