கிளைத்தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் வாசித்த கவிதை இது:
சூடாமணி பேசுகிறேன்;கொஞ்சம் சூடாகப் பேசுகிறேன்;
மெச்சி நீங்கள் கொண்டாடும் மெல்லியலாள் சீதையெனை
உச்சிமேல் வைத்துக் கொண்டாடியதை உணர்வீரா?
மற்ற அணிகலன்களுக்கு மேலாக வீற்றிருக்கும்
கொற்றத்தை எனக்களித்த கம்பனைநான் வணங்குகிறேன்;
தீக்குளித்தாள் சீதையென்று தமிழ்க்கம்பன் பாடிவைத்த
பாக்களிலே கண்டு பதைபதைக்கும் பெரியோரே;
உண்மை தெரியுமா உங்களுக்கு? ஒளிநெருப்பில்
பொன்மகளாம் சீதை புகுந்ததெல்லாம் ஒருமுறைதான்;
என்னிலைமை என்னவென்று யாரேனும் அறிவீரா?
தேன்கவிதை வரிகளிலே தேடிப்பாருங்கள் -நான்
மூன்றுமுறை தீக்குளித்த மகத்துவத்தை உணர்வீர்கள்.
வாடி அசோகவன வெஞ்சிறையில் இருக்கையிலே
ஆடையிலே எனைப்பொதித்து அன்னை வைத்தாள்-அவள்
மேனி நெருப்பென்னும் முழுநெருப்பில் குளித்தெழுந்தேன்;
மாருதி எனைவாங்கி மடியினிலே பொதித்து வைத்து
வால்நெருப்பைஇலங்கையெங்கும் வைத்தலைந்து கொண்டிருந்தான்;
வீரன் அவனுடலில் வெகுண்டு சுழன்றடித்த
கோப நெருப்பில்நான் கொதியாய்க் கொதித்திருந்தேன்;
வேகமுடன் திரும்பிவந்த மாருதியோ விநயமுடன்
ராகவனைன் தாள்பணிந்தான்;ரத்தினமாம் எனைக்கொடுத்தான்;
மாதவனின் உள்ளங்கை மணித்தலத்தில் விழுந்தவனின்
காதல் நெருப்பில் குளித்தெழுந்து வந்துவிட்டேன்;
அள்ளியெனை ராகவனும் அங்கையில் வைக்கையிலே-சீதை
உள்ளங்கை தொட்டதுபோல் உள்ளம் சிலிர்த்தானாம்;
வெள்ளம்போல் எனக்குள் விளைந்த வெப்பத்திலவள்
உள்ளங்கைச் சூட்டை உத்தமனும் உணர்ந்திட்டான்;
வானவரும் கைகூப்பும் வியன்கற்புச் செல்வியவள்
மேனி நெருப்பு முதல்நெருப்பு- மாருதியின்
கோப நெருப்பு,நான்குளித்தெழுந்த மறுநெருப்பு;
காத்திருந்த காகுத்தன் காதல் மனத்திடையே
பூத்திருந்த மோகம்,எனைப் புடம்போட்ட பெருநெருப்பு:
மூன்றுவகை நெருப்பினிலே மூழ்கி எழுந்தபின்னும்
ஏன்கருக வில்லையென யாரேனும் அறிவீரா?
காந்தள் விரல்களிலே காதலுடன் எனையெடுத்து
கூந்தலின்மேல் சீதை குளிரும்படி வைத்தாளே,
அந்தக் குளிர்முன்பே ஆட்கொண்ட காரணத்தால்
எந்த நெருப்பும் எனையொன்றும் செய்யவில்லை;
கோலமகள் கூந்தலிலே கண்டுவந்த குளுமையினை-இன்று
கோலாலம்பூரில் கண்டவுடன் சிலிர்த்துவிட்டேன்;
எங்கிருந்து வந்தேன்நான் என்கின்ற செய்தியும்
உங்களுக்குத் தெரிந்திருக்கும்:என்றாலும் சொல்லுகிறேன்..
நாடுவிட்டு மரவுரியில் கிளம்பும்போது
நகையெதுவுன் ஜானகியாள் அணியவில்லை;
காடுவந்த காகுத்தன்,முனிவர் தம்மைக்
காணவந்தாநத்ரியெனும் தவசீலன்தன்
வீடுவந்த நேரத்தில்,முனிவர் இல்லாள்
வளம்நிறைந்த அனுசூயை-ஜானகிக்கு
ஈடில்லா அணிசூடி அழகு பார்த்தாள்
இப்படித்தான் சீதை யெனக்கழகு சேர்த்தாள்
கம்பனிதைக் காவியத்தில் பாடிவைத்தான்
கதைமரபில் இச்செய்தி முன்பே உண்டு
செம்பொன்னில் மணிபதித்த பாங்கே போல
சீதைக்குப் பலநகைகள் சூட்டி வைத்தார்
வம்பாக ராவணனும் கவர்ந்தபோதும்
வழியெங்கும் பலநகைகள் விழுந்தபோதும்
நம்பியவன் தூதனுமே வருவானென்று
நம்பியதால் சீதையெனைப் பாதுகாத்தாள்
மிதிலைமன்னன் போடாத நகைகள் இல்லை
மாமியர்கள் வழங்காத அணிகள் இல்லை
குதலைமென் கிளிமொழியாள் தோற்றந்தன்னைக்
காட்டுகையில் அணிகலன்கள் பலவும் அங்கே
விதம்விதமாய் தமிழ்க்கம்பன் விரித்துரைத்தான்
வீடணனும் இறுதியிலே நகைகள் போட்டான்
சதமென்று நான்மட்டும் படலம் பெற்றேன்
சிறப்புமிக்க அணிகலனாய்ப் பாடல் பெற்றேன்
பாடுவதைப் பாடலெனப் பேரிசைத்தார்;
பண்ணோடு பாட்டெழுதிப் பாடும்நேரம்
ஆடுவதை ஆடலென்று பேர்குறித்தார்
அவ்வகையில் பெண்டிரெனைச் சூடலாலே
சூடும்மணி எனத்தானே சொல்ல வேண்டும்?
சூடாமணி என்றெனக்கேன் பெயர் குறித்தார்?
நாடுவிட்டு நான்வந்ததெல்லாம் அந்த
நயமான காரணத்தைச் சொல்லத் தானே!
தேடாத இடங்களெல்லாம் தேடிவந்த
தூதுவனாம் அனுமனிடம் தோகைநல்லாள்
சூடாமணியாம் என்னைத் தந்ததேனோ?
சூட்சுமத்தை உணர்வீரா?சீர்குலைக்கும்
கூடாத காமத்தால் அரக்கன் தூக்கிக்
கடுஞ்சிறையில் அடைத்தாலும் கவர்ந்த தீயோன்
சூடாத மணியாய்த்தான் கற்புத்தீயாய்
சுடருவதைக் குறிக்கத்தான் என்னைத் தந்தாள்
அன்னையவள் திருமுடியை அலங்கரித்தேன்
அண்ணலவன் கைகளிலே முகம் பதித்தேன்
முன்னையநாள் பெருமைகளை நினைத்துக் கொண்டே
மூலையிலே எப்போதோ முடங்கிவிட்டேன்
என்னையிங்கே மறுபடியும் அழைத்துவந்தார்
எண்ணங்கள் பகிர்வதர்கு வாய்ப்புத் தந்தார்
பொன்னெனவே மிளிரட்டும் கோலாலம்பூர்!
புகழ்பொங்கி மலரட்டும்;வணக்கம் ;வாழ்க;
திருக் கடவூராளின் அருட்கொடை ஐயா உமது தமிழ்…! வாழிய!!