தமிழிலக்கியத்தில் கையறு நிலைக் கவிதைகள் காலங்காலமாகவே உள்ளன. புரவலன் மறைந்த நாட்டில் நின்று கொண்டு புலவர்கள், முல்லையும் பூத்தியோ என்று கேள்வி எழுப்பினார்கள். தசரதன் மறைவு குறித்து கம்பன் எழுதிய கவிதை, எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தம் என்று கவிஞர் தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார்.

  “நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
   தந்தாய்!தனியறத்தின் தாயே! தயாநிதியே!
   எந்தாய் !இகல்வேந்தே ! இறந்தனையே!
   அந்தோ!மற்றினி வாய்மைக்கு யாருளரே!”

இது காந்திக்கும் பொருந்தும்,காமராஜருக்கும் பொருந்தும் என்பார் கவிஞர்.

கையறு நிலைக்கவிதைகளின் நெடும்பரப்பில் பாரதியும் பங்கேற்றான்.ஓவியர் ரவிவர்மா மறைந்த போது,

   ” கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் யாரும்
      சீலவாழ்வகற்றி ஓர்நாள் செத்திடல் உறுதியாயின்
      ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியதன்றோ”என்று வருந்தினான்.

கண்ணதாசனின் கையறுநிலைக் கவிதைகள் பெருமளவில் பேசப்பட்டது, நேருவின் மறைவுக்காக அவர் எழுதியபோதுதான் என்றாலும், பலருடைய மரணத்தையும் தன் பாடல்களால் வென்றிருக்கிறார் கவிஞர். அவரது தொகுதிகளிலேயே முதல் இரங்கல் கவிதை , கலைவாணருக்காக எழுதப்பட்ட கலையாவாணன்..
“சாவதாம்!முடிவாம்! சோற்றுத்  தடியர்தாம் சாவார்;செத்துப்
 போவதால் மறைவார்-இந்தப்புவியுளார் வருத்தங் கொள்ளார்;
ஆவதே நினைந்த மன்னன்அனைத்தையுங் கொடுத்த வள்ளல்
சாவனோ?இல்லை;ஆங்கேசாவெனல் வாழ்வின் தேக்கம்

 
என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னாலும், கலைவாணரை இழந்த கனமான வருத்தம் அடுத்த கவிதையில் வெளிப்படுகிறது. அநேகமாக கலைவாணரின் உடல் எரியூட்டப்பட்ட பிறகு அந்த நெருப்பு சுட்ட வடுவாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
“இப்பொழு திருந்தான் அண்ணன்இன்றுநான் பார்த்தேன்!காலை 
துப்புற வெளுக்கும் போழ்தும்தூங்கினான்;கண்டேன்! கொஞ்சம்
அப்புறம் நகர்ந்தேன்;மீண்டும் அருகினில் வந்தேன்!ஐயோ
எப்படிச் சொல்வேன்!அண்ணன்இல்லையே!இல்லை!இல்லை!

கருணையும் மறையுமென்றால் காலமோர் உண்மையாமோ
பொறுமையும் அழியுமாயின் பூதலம் உறுதியாமோ
வருவதை வாரி வாரி வழங்கிடும் அண்ணன் மேனி
எரிதழல் படுவ காண்போர் இப்புவி நிலையென்பாரோ
என்றெல்லாம் ஏங்கியழுது.

இறந்தனன் எனநி னைக்க இரும்பினால் நெஞ்சம் வேண்டும்!
வருந்துவார் வருத்தம் நீக்க மறைந்தவன் வரத்தான் வேண்டும்!
 என்ற நிறைவேறா நிராசையுடன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.
நாதசுர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்த போது கவிஞர் இசைத்த முகாரி,காலத்தை வெல்ல வல்லது.

“என்னிவன் வளர்த்த பேறு!எப்படிப் பயின்றான் இந்தச்
சின்னதோர் குழலுக்குள்ளே செகத்தையே உருட்டும் பாடம்”
என்று தொடங்கும் கவிதையில் டி.என்.ஆரின் இசையை மட்டுமின்றி அவரையும் கவிஞர் எப்படி ரசித்திருக்கிறார் என்பது புலனாகிறது

“கையிலே இசையா,பொங்கும் காற்றிலே இசையா,துள்ளும்
 மெய்யிலே இசையா,மின்னும் விழியிலே இசையா என்றே
 ஐயனின் இசையைக் கேட்போர் அனைவரும் திகைப்பர்!இன்று
கையறு நிலையிற் பாடக் கருப்பொருள் ஆனாய் ஓய்ந்தாய்!
இந்த அளவு ராஜரத்தினத்தை கவிஞர் ரசிக்க என்ன காரணம்?வாரியார்
சுவாமிகள் ஒருமுறை கொஞ்சம் அதீதமாகப்  பாராட்டினார் “ராஜரத்தினம்  வாசிப்பதுதான் நாயினம்; பலர் வாசிப்பது நாயினம்” என்று.  இதில் பலர் புண்பட்டிருக்கக் கூடும்.ஆனால் கவிஞர் சொல்லும் காரணத்தைப் பாருங்கள்:
“இதற்கிவன் ஒருவன்,வேறிங்கு எவனுமே இல்லை என்றே
 எதற்குமே வரம்பு போட இப்புவி சிறியதல்ல
 அதற்குநீ விலக்கே !இந்த அகிலமெல்லாமும் நாதம்
  மிதக்கும்நல் குழலுக்கெங்கள் வேந்தன் நீ ஒருவனேதான்

டி.என்.ஆரை கவிஞர் எவ்வளவு நுட்பமாக கவனித்திருக்கிறார் என்பதற்கு
பின்வரும் வரிகளே உதாரணம். டி,என்.ஆரின் நாதஸ்வரத்தில் அவர் வாங்கிய மெடல்கள் தொங்கும். நன்கு வாசித்து வாசித்து வசப்படுத்டிய சீவாளி பொருத்தி சுகமாக வாசிப்பார் அவர்.

பரிசுகள் ஆட நின்பால் பழகிய குழலைத் தூக்கி
வருகிறாய் நீயென்றாலே மனதிலே கீதம் பொங்கும்
சரிகம பதநி யோடு “ச’வென முடிந்து போகும்
குறுகிய சுரத்துக்குள்ளே குவலயம் படைத்துப் போனாய்

செவியினில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி இந்தப்

புவியெலாம் ஒடி நிபால் பொங்கிய தோடி வேறிங்கு
எவரிடம் போகும்?ஐய!இனியதைக் காப்பார் யாவர்?
அவிந்த நின் சடலத்தோடே அவிந்தது தோடி தானும்!

தவுலுக்குக் கொஞ்ச நேரம் தனி ஆவர்த் தனம் கொடுத்து

கவுளி வெற்றிலையில் நான்கைக் கையிலே எடுத்து வாயில்
அவலெனக் குதப்பும் போதே ஆவர்த்தனம் முடிந்தால்
தவுல்போலக் குழலை வாசித்தவன் பாரில் ஒருவன் நீதான் 

மேடைக்கு நீதான்!உந்தன் மேனிதான்!இடுப்பைச் சுற்றும்

 ஆடைதான்!காதில் தொங்கும் அழகிய கடுக்கன்தான்!நல்
வாடைக்கு வாரிப்பூசும் மார்புச்சந்தனம்தான் !யாவும்
பாடைக்குள் ஒடுங்கிற்றெங்கள் பார்வைக்கு மறையக் காணோம்
இசைத்துறையில் குறிப்பிட்ட இனத்தினரின் ஆதிக்கத்தை முறியடித்தவர் டி.என்.ஆர் என்கிற குறிப்பும் இந்தக் கவிதையில் உண்டு.

இசையெலாம் எங்கள் சொந்தம் என்றிருந்தவர்கள் நின்றன்
 அசைவெலாம் இசையாய் மாற அயர்ந்தனர்!எதிலும் அன்னார்
 வசை,குறை காண்பார் !உந்தன் வாய்ப்புறம் பொங்கி வந்த
 இசையினிற் பணிந்தார்! உன்னால் எம்மையும் வணங்குகின்றார்
என்பதுஅதிலொரு சிறுசான்று.

இத்தனைக்கும் டி.என்.ஆரை விட கவிஞருக்கு மிக நெருக்கமமனவர்கள் பலருண்டு.ஆனாலும் இந்த மரணத்தில் தனக்கு நேர்ந்த துயரை நேரில் வந்து பார்க்கும்போது டி.என்.ஆரே விளங்கிக் கொள்வார் என்கிறார் கவிஞர்,
  வேண்டிய பலபேர் எம்மை மிகச்சிறு வயதில் விட்டு
  மாண்டனர்;அப்போதெல்லாம் மனத்துயர் அதிகமில்லை
  ஈண்டுநின் மரணச்சேதி இழைத்ததோர் துயரந் தன்னை
 மீண்டொரு முறைநீ வந்தால் விளங்குவாய் வேந்தர் வேந்தே
 ஒரு கவிஞர் மிகச்சிறந்த ரசிகராய் இருப்பதால் கிடைத்த கொடை இது.

அதே தொகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவுக்குக் கவிஞர் எழுதிய வரிகளும் சாகாவரம் பெற்றவை.

“சின்ன வயது மகன் சிரித்த முகம் பெற்ற மகன்
  அன்னைக் குணம்படைத்த அழகுமகன் சென்றதெங்கே” என்று தொடங்கி
“முதிர்ந்த கிழமிலையே!மூச்சடங்கும் வயதிலையே
 உதிர்ந்த மரமிலையே !உலர்ந்துவிட்ட கொடியிலையே!
 வறண்ட குளமிலையே! வற்றிவிட்ட நதியிலையே!
 இருண்ட பொழுதிலையே !ஏய்க்கின்ற நாளிலையே! என்று பதறுகிறார்.

தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா

என்னுயிரைத் தருகின்றேன் எங்கேயென் மாகவிஞன்
என்னும் வரிகளில் இருவரிடையே இருந்த நேசம் தெளிவாகத்
தெரிகிறது .கவிஞரின் கையறுநிலைக் கவிதைகளில், நேருவுக்கு எழுதியவை நிகரிலா இடம் பெற்றன. அதிலிருந்த உணர்ச்சிப் பெருக்கின் ஆழம் அபாரமானது.

சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே குறுநகை போனதெங்கே
நேரிய பார்வை எங்கே நிமிர்ந்தநன் நடைதானெங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்ததிங்கே
என்று கதறினார் கவிஞர்.

அப்போது அவர் எழுதிய வரிகள் இன்றும் பலரின் மரணங்களின்போது பிறரால் மேற்கோள் காட்டப்படுகின்றன.
சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதோ
சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ
தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ
தெய்வமே உனையும்நாம் தேம்பியழ வையோமோ

என்பது போன்ற வரிகள் அவை.உணர்ச்சி வேகத்தின் வெற்றுப் புலம்பலாய் மாத்திரமில்லாமல் நேருவின் இயல்புகளைச் சித்தரிக்கும் நுட்பமான படப்பிடிப்புகளும் அந்த அஞ்சலிக் கவிதைகளில் உண்டு.

நேருவுக்கு கவிஞர் எழுதிய கண்ணீர்க் கடிதம் ஒன்றின் தலைப்பு,கமலப்பூவே. சுறுசுறுப்பும் உற்சாகமும் ததும்பும் நேருவின் வாழ்க்கை முறையை அந்தக் கவிதையில் சித்தரித்திருப்பார் கவிஞர்.

பண்டித ஜவகர் என்னும் பண்புசால் வெண்புறாவே

மண்டலம் காவல்கொண்ட மன்னனே!உன்னையோர் நாள்
கண்டது முதலே நின்பாற் கலந்தவன் எழுதுகின்றேன்
உன்னிடம் உயிரை வைத்தே உனக்கிதை எழுதுகின்றேன்

விருந்துகள் விழாக்கள் என்றும் விடுதலைத் திருநாள் என்றும்

பறந்துநீ பார்த்த கூட்டம் பலப்பல ஆனால் ஐயா
இறந்துநீ கிடந்த போது எழில்முகம் காண வந்து
கரைந்ததோர் கூட்டம் தன்னைக் காண நின் கண்கள் இல்லை

நேரு காரில் போகும்போது யாரேனும் சற்றே தலையசைத்தால் அவர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைப்பாராம் நேரு.தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.அப்படித்தான்.கவிஞர் இக்கடிதத்தில் கேட்கிறார்,

தலைநகர் தெருவில் எங்கள் தலைவன் நீ செல்லும்போது
தலையசைப்பாரைக் கண்டு கையசைப்பாயே !இன்று
அலையெனத் திரண்ட கூட்டம் அசைத்ததே கையை!ஐயா!
தலையைஏன் மறைத்துக்கொண்டாய் தவறென்னசெய்தோம் நாங்கள்
நேருவின் நினைவாக எண்ணற்ற கவிதைகள் எழுதினார் கவிஞர்.அதே போல காமராஜர் மறைவும் சின்னப்பா தேவரின் மறைவும் அவரை வெகுவாக பாதித்தது

“சேதியொன்று கேடேண்டி தேவர் மரணமென்று நாதியற்றேன் அப்போதே!நாளையெனைக் காப்பவர்யார் என்று கலங்கினார். அண்ணாவின்  மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது. “அண்ணனுக்குப் பின்னால் அழுதுவந்த  கூட்டமெல்லாம் கண்ணனுக்குப்  பின்னால்  கதறிவர  மாட்டாதோ”என்று தன் இறுதிப்பயணம் குறித்து அவர் கற்பனை செய்தார். அவரது சகோதரி இறந்தபோது அவர் எழுதிய “என்னை அழவிடு!என்னை அழவிடு! அன்னை என்னை அழவே படைத்தாள்” என்ற கவிதையும், சகோதரர் ஏ எல் எஸ் மறைவுக்காக எழுதிய 30 வரிகள் 54 வருஷங்கள் என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கவை.பேரன் முறையுள்ள குழந்தையைப் பார்க்கச்  சென்றார் அவர். தூங்கும் குழந்தையை எழுப்பித் தூக்கிவர எத்தனித்த போது “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” என்று எழுதி, அதன் பிறகுசில நாட்களிலேயே அந்தக் குழந்தை இறந்ததும், “அறம்பாடி விட்டேனோ யானறியேன்!பிள்ளைச் சிறுகுருவி
திறம்பாட மாட்டாமல் செத்தகதை பாடுகிறேன் என்று  குற்றவுணர்வில்  குமைந்தும், பிள்ளைப் பருவத்தில் பிணமாய்க் கிடப்பதெங்கள் 
இல்லத்தில் இல்லை இதுவரையில் நடந்ததில்லை என்று கலங்கியும் எழுதினார் கவிஞர்.  சஞ்சலமேன் அந்தத் தனிக்கருணைக் கண்ணனிடம் 
நாமும் பறப்பவர்தாம் நாளையோ மறுதினமோ என்று தன்னையே ஒருவாறு தேற்றிக் கொண்டார்.
இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது,ராஜாஜியின் மறைவுக்காக அவரெழுதிய தேசத்தை ஈர்த்த தமிழன் என்ற கவிதை மிகவும் சம்பிரதாய ரீதியாகத் தெரிகிறது.

வாழ்வாங்கு வாழ்வாரைத் தெய்வத்துள் வைக்குமொரு
வையத்து வாழும் மனிதா
வையத்துள் ராஜாஜி வாழ்வுக்குச் சான்றாக
வாழ்வொன்று எங்கும் உளதா

என்று தள்ளி நின்றே துக்கம் கேட்கிறார் கவிஞர். தலைவர்கள்,கவிஞர்கள் என்று பலரின் மரணத்தையும் தன் தனிப்பட்ட இழப்பாகக் கருதி துயர் மீதூற எழுதப்பட்ட கவிஞரின் கையறுநிலைக் கவிதைகளின் வரிசையில்
ராஜாஜி பற்றிய கவிதை அஞ்சலியாய் அனுதாபப் பதிவாய் மட்டுமே நிற்கிறது.

மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் என்று கவிஞர் பாடிய வரிகளுக்கு
மிகப்பொருத்தம்,ராஜாஜிக்கு அவர் எழுதிய இரங்கல் கவிதை

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *