கண்ணதாசனின் தைப்பாவை பல விதங்களிலும் வித்தியாசமான முயற்சி. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பேசப்படும் பாவை நோன்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தைமாதத்தையே ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி “தையாகிய பாவையே” என்று ஒவ்வொரு பாடலிலும் அழைக்கும் விதமாகத்தான் தைப்பாவை அமைந்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் கவிஞர் இருந்தபோது எழுதப்பட்டது தைப்பாவை.
‘எந்தமிழர் கோட்டத்திருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல் இடு வெங்களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ்செழிக்க’
தைமகளை வரவேற்றுத் தொடங்குகிறது தைப்பாவை.
அனாயசமான ஓசையழகுடன் அவர் எழுதியுள்ள இப்பாடல்களில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர்.
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்
(மேழியர்-உழவர்)
வெவ்வேறு ஓசைகளின் பட்டியல் மட்டுமில்லை இது. காட்சி ஒழுங்கும் இதில் இருக்கிறது. மார்கழித்திங்களின் கடைசிநாளில் இரவு நேரமாகியும் கதிரறுப்பு முடிந்தபாடில்லை. அவ்வளவு அருமையான மகசூல். தைமுதல்நாள் புலர்வதற்கு சில மணிநேரங்கள் முன்பு வரை கூட, நெல் ஏற்றப்பட்ட வண்டிகளைக் காளைமாடுகள் இழுத்துவர,களத்தில் நெல்மணிகள் கொட்டப்படுகின்றன.
காளை மணியோசை-களத்துமணி நெல்லோசை
ஆண்கள் இந்த வேலையில் பரபரப்பாக இருக்க,பெண்களோ பொங்கல் வைக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்குகிறார்கள்.பொங்கல் பானைமுன் வாழை இலையை விரிக்கும் பெண்களின் கைவளையோசை
கேட்கிறது..
வாழை இலையோசை-வஞ்சியர்கை வளையோசை
வீட்டிலுள்ள மற்ற பெண்கள்,குழந்தைகலின் தலையில் தாழம்பூக்களை வைத்துப் பின்னுகிறார்கள்.மூத்த தாய்மார்களோ,கதிரவன் உதித்துவிட்டால் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்க முடியாதென்ரு வேகவேகமாய் தயிர் கடைகிறார்கள்.
தாழை மடலோசை-தாயர்தயிர் மத்தோசை
அடுத்து பொழுது புலர்கிறது.கோழி கூவுகிறது. பொங்கல் பொங்குகிறது.உடனே குழந்தைகள் “பொங்கலோ பொங்கல்” என்று கூவுகின்றனர்
கோழிக்குரலோசை – குழவியர்வாய் தேனோசை
கூடவே கடலலைகள் புரண்டெழும் ஓசையும் கேட்கிறது.இத்தனை ஒலிகளும் சேர்ந்து தைமகளை வரவேற்கின்றன.
இந்தக்காட்சிகளை மனக்கண்ணால் பார்த்தபடி பாடலை மீண்டும் பாருங்கள்,
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்
எவ்வித முன்திட்டமும் இல்லாமல் பொங்கும் ஊற்றில் கூட ஆற்றின்
ஒழுங்கு அமைவதுபோன்ற அற்புதம்தான் கவிஞரின் கவியோட்டம்.
தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை.
சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி
துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம்
வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள்.
“வாளைத் தொடு காளை வடிவைத் தொடும் வேளை
வேலைக்கென ஓலை விரைவுற்றது-சென்றான்
நூலைத் தொடும் இடையாள் நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள் வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை அமைவுற்றிட இத்-தை
காலம்வரல்கூறாய் கனிவாய தைப்பாவாய்”
இதுபோன்ற செம்மாந்த பாடல்கள் தைப்பாவையில் ஏராளம். மூவேந்தர்கள் பற்றிய பாடல்களில் சேரனைப்பற்றிய பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.
“இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்”
இப்படி தைத்திங்களில் பாடி மகிழ நாளுக்கொரு பாடலாய் தைப்பாவை
நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர்.திருப்பாவை,திருவெம்பாவை ஆகியவற்றை பக்தி இயக்கங்கள் பரப்பியதுபோல், தைத்திங்களை தமிழர் புத்தாண்டாக அறிவித்துள்ள தமிழியக்கங்கள் தைப்பாவை நூலைப் பரப்பலாமே என்று தோன்றுகிறது.
(கடந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்த கண்ணனுக்குதாசன் கண்ணதாசன்
பாடல்கள் காஸ்மிக் நிறுவனத்தால் ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண என்ற தலைப்பில் இசைவட்டாக வெளிவந்துள்ளது)
(தொடரும்)