திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ,சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டது. அதிலிருந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு….
1.ஏற்றுமதிக்கு வசதியாக திருப்பூருக்குக் கடலைக் கொண்டு வருவது
2.எங்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடுமென்பதால் மொண்டு குடிக்க ஆளுக்கொரு டம்ளர் இலவசமாய்த் தருவது
என்று நீண்ட அந்தப் பட்டியலைக்கண்டு திகைத்த பொதுமக்கள் வேட்பாளரின் பெயரைப் பார்த்ததும் . அவர்,சிற்பி இரகுநாதன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிட்டார்.தேர்தல் ஆணையத்திடம் போராடி அவர் பெற்ற சின்னம், “சூட்கேஸ்”.
இது போதாதென்று திருப்பூரில் ஒரே மேடையில் தோன்றிய சர்வகட்சி வேட்பாளர்கள் கூட்டத்திலும் பேசினார்.
தன் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு விட்டு “ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை, நாலரை கோடித் தமிழர்களின் நம்பிக்கை நாயகன், புரட்சித் திலகம், புதுமைத் தென்றல், வாரி வழங்கும் வள்ளல், வேந்தர், அருமை அண்ணன் சிற்பி இரகுநாதனாகிய எனக்கே போடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று முடித்தார்.
ஆனாலும் தேர்தல் முறையைப் பகடி செய்வதுதான் தன் நோக்கமென்றும் தனக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய வேண்டாமென்றும் தேர்தலுக்கு முன்னர் தெளிவுபடுத்தினார். அதையும் மீறி முப்பது ஓட்டுகள் விழுந்ததில் அவருக்கு வருத்தம்தான்.
கூர்மையும் சமூக எள்ளலும் மிக்க நகைச்சுவை, சிற்பி ரகுநாதனின் நகைச்சுவை. பல நகைச்சுவைப் பேச்சாளர்கள் இருந்த போதும் அவருடைய தனித்தன்மையான பேச்சு, native humour எனப்படும் மண்ணின் மணம்கமழும் நகைச்சுவையால் முத்திரை பதித்தது.
குடும்பங்களில்,குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் அரட்டை, சண்டைகள் போன்றவற்றை தத்ரூபமாக செய்து காட்டி விமர்சித்து, பெண்ணியவாதிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளான போதும், பெண்கள் பற்றிய அவரின் விமர்சனங்களைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் பெண்களே! பட்டிமன்றங்களின் பொதுத் தலைப்புகளான ஆணா பெண்ணா, மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா பின்பா என்பது போன்றவற்றைக்கூட தனித்தன்மையுடன் கையாள்வதில் சிற்பி சமர்த்தர். பட்டி மண்டபங்களில் குறைந்தது 45 நிமிடங்கள் வாதிடுவார். நடுவர்களுக்கு மணியடிக்கத் தோன்றாது.
மேடையைத் தவிர மற்றபடி இறுக்கமானவர் என்று கருதப்படும் சிற்பி,நெருங்கிப் பழகும்போது கலகலப்பானவர்தான்.பாலக்காடு அருகே ஓரிடத்தில் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். காபியும் மாரி பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார்கள். சிற்பி என் காதருகே வந்து “இந்த பிஸ்கட்டைங்க..ஒரு பாக்கெட் வாங்கி வச்சுகிட்டா ஆறு மாசத்துக்காவது விருந்தாளிகளை சமாளிச்சுடலாம். ஒடைச்சு வீசீட்டா போதும். ஒருத்தனும் கிட்ட போக மாட்டான். பழைய மாதிரி எடுத்து பாட்டல்ல போட்டு வச்சுக்கலாம்” என்றார்.
‘திருப்பூர் விகடகவி’ என்ற தலைப்பில் சிற்றிதழொன்றையும் நடத்திவந்தார் அவர்.வள்ளலார் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு உண்டு.கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்கேயும் தன்னை முன்னிறுத்தாதவர்..எளிய தொழிலாளியாய் வாழ்வைத் தொடங்கி முயற்சியாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் வளர்ந்தவர் சிற்பி.அசைவம் சாப்பிட மாட்டார். புகையோ மதுவோ தொடமாடார்.
அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆனது. ஒரே பெண். நாற்பதுகளிலேயே தாத்தா ஆகிவிட்டார். மார்ச் 31ஆம் தேதி நெருங்கிய நண்பர் ஒருவர் போன் செய்தார்.”சிற்பி!அங்காடித்தெரு படம் பாருங்க!பிரமாதமா இருக்கு “கடைசியாக பெரியார் படம் வந்தபோது திரையரங்குக்குப் போனவர் சிற்பி இரகுநாதன்.
நண்பர் சொன்னதைக்கேட்டு அன்று மாட்னி ஷோ பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்திருக்கிறது. வீடு திரும்பியவருக்கு மாலையில் உடல் நலமில்லை. என்று சோடா குடித்தவர் இரவு மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனைக்குப் போவதற்குள் மரணம். ஐந்து மணிக்கே வந்த மாரடைப்பு சிற்பியுடனான பேச்சு சுவாரஸ்யத்தில் வந்த வேலையை மறந்துவிட்டு இரவு பத்து மணிக்கு அவரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. கூட்டங்களில் பேசும்போது, “அப்பாடா சாமியிது எப்போது முடியுமென்று அவஸ்தையுடன் நெளிகின்ற அவையோரே “என்று கிண்டல் செய்பவர், வாழ்க்கை என்கிற சொற்பொழிவை அவையடக்கம் பொங்க நிகழ்த்திவிட்டு 49ஆவது வயதில் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்”என்று முடித்து விட்டார்
ஏப்ரல் 1 காலை,சிற்பி இரகுநாதன் செல்போனில் இருந்து அழைப்பு நண்பர்களுக்கு வந்தது. அவருடைய நண்பர் பேசினார். சிற்பிஇரகுநாதன் மறைந்ததாக செய்தி கேட்டு ஏப்ரல்1க்கு சிற்பியின் ஏற்பாடு என்று சிரித்துக் கொண்டனர் நண்பர்கள்.வாழ்வின் நிகழ்வுகளைமுன்கூட்டியே
அனுமானிப்பதைவிட முட்டாள்தனம் ஏதும் உண்டா என்ன?
வாழ்கையை நிறைவாக வாழ்ந்தவனுக்கு 50 வயதே போதுமானது ……….
கண்ணதாசன் 55 வயதுக்குள் கண்ணனை பார்க்க போய் விட்டார் …………மது மாது என சகலகலா வல்லவனாக வாழ்ந்தவர்கள் சாவை கண்டு பயப்படுவதில்லை …..
அரை குறைகள் தான் 100 வயது வாழ ஆசை படுகிறார்கள் ….அப்படி வாழ வாழ்த்துகிறார்கள் ……………..