வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில்
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார், அதற்கு
ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார்,
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில நூல்களைப் பற்றி ஜெ.யின் கருத்தைக் கேட்டு கடிதமெழுதியுள்ளாராம்.
எனக்கு இந்த அனோஜன், கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எனும் எழுத்தாளரின் நண்பராகவோ வாசகராகவோ இருக்கக் கூடும் என்று தோன்றியது.ஏனெனில் பட்டிமன்றம் ஒளிபரப்பான அன்று ஃபிர்தௌஸ் தன் முகநூலில் எழுதியிருந்த வரிகள்
// நடுவராக அவ்வை நடராஜன் .
பேச்சாளர்களாக மரபின் மைந்தன் முத்தையா,
பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின்
ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்கள்..!
பார்வையாளர்களின் நடு மத்தியில்
பிரதானமான அமர்ந்திருந்து அதை மிக
ரசிக்கிறார் வைரமுத்து..
https://www.facebook.com/FirthouseRajakumaaran?fref=nf&pnref=story//
அனோஜனின்கடிதத்தில்..
// அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள்.
பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து.//
இப்படி “ஒத்த சிந்தனை’யுடன் எழுதப்பட்டிருந்தாலும், சொகுசு வாழ்வுக்குப் பழகிப் போன எனக்கும் வெற்றித் தமிழர் பேரவையில் உறுப்பினராகக் கூட இல்லாதபர்வீனுக்கும் “தொண்டர்” பட்டம் வழங்கிய இவர்களின் பெருந்தன்மையை வியந்து கொண்டே ஜெயமோகனின் கட்டுரைக்குள் நுழைந்தேன்.
தொலைக்காட்சி பட்டிமன்றம் நடத்தியதில் என்ன பிழை என்ற தொனியில்தான் தொடங்குகிறார் ஜெயமோகன். தான் அந்தக் கதைகளை
“ஒரு வாசகனாக ஒரு விமர்சகனாக” வாசித்ததாகச் சொல்கிறார்.அவரிடம் அலைபேசியில் பேசிய போது “வைரமுத்துவின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த நூலை எனக்குப் பரிசளித்தார்” என்றார். பொதுவாக எந்த ஒரு நூலையும் ஜெயமோகன் படிக்காமல் கருத்துச் சொன்னதில்லை. எனவே அவர் இந்த நூலை படித்துவிட்டார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
ஏனெனில் அந்தச் சிறுகதைகளை வாசிக்காமலேயே அவற்றை நிராகரித்த விமர்சனக் குஞ்சுகள் பலரை எனக்குத் தெரியும்.
ஜெயமோகனுடைய விமர்சனத்தின் சாரம் இதுதான்:
//” அவை தமிழ்ச்சிறுகதை மரபின் இதுவரை அடையப்பட்ட அழகியல் நெறிகளை முன்னெடுக்கவில்லை. மீறிச்சென்று புதிய இடங்களைக் கண்டடையவும் இல்லை.”//
//”சென்ற நூறாண்டுக்கால சிறுகதை மரபு,சிறுகதைக்குரியவை என்று சில பண்புகளை வரையறை செய்துள்ளது.ஒன்று குறிப்பமைதி.இரண்டு கூற்றமைதி,மூன்றாவது வடிவ அமைதி. இப்பண்புகள் பெரும்பாலும் இக்கதைகளில் இல்லை”// என்பதுடன், அவர் குறிப்பிடும் மூவகை அமைதிகளையும் தனித்தனியே சில வரிகளில் விளக்கியுள்ளார்.
இலக்கியப் பரப்பில்,அவர் சொல்வதுபோல,சிறுகதை மரபு சமீபத்தில் உருவானது என்பதாலேயே அக்காலத்தில் வடிவெடுத்த நவீன இலக்கியமும் அதன் அடுத்த கட்டமான பின் நவீனத்துவமும்,சிறுகதை மரபில் சில கூறுகளை வலியுறுத்தி அந்தக் கூறுகளையே அளவுகோல்களாகக் கொண்டு நுண்வாசிப்பை முன்னெடுக்கின்றன.
//அக்கதைகளை வாசகனாக நின்று அணுகுவதே சிறந்தது.தமிழின் சிறந்த சிறுகதை மரபை அறிந்து,அவ்வரிசையில் அவற்றை வைத்து ஆராயலாம்.மதிப்பிடலாம்.அதுவே முறை// என்கிறார் ஜெயமோகன்.
ஆனால் தமிழ் போன்ற தொல்மொழிகளில் காலங்காலமாகவே “கதைமரபு”தைலதாரைபோல் இயங்கி வந்துள்ளது.மக்களுக்கு நெருக்கமான மொழியில் பேசுகிற மரபாக,காட்டாதனவற்றையும் காணத் தவறியவற்றையும் காட்டுவிக்கும் மரபாக,எளிய மனிதர்களின் வாழ்வியல் அம்சங்களை வருடி வளர்க்கிற மரபாக அது நீள்கிறது.கவிஞர் வைரமுத்து அந்த மரபைச் சேர்ந்தவர்,அவருடைய எல்லா வகை எழுத்துகளுக்கும் இந்த மரபே ஊற்றுக்கண்.
வேறொரு பதிவில் ஜெயமோகன் சொன்னதையே இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.
//”வைரமுத்துவின் கவிதைகள், வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல
பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.இளைஞன் ஒருவன் அதிலிருந்து அளவிலா ஊக்கம் அடைவதை அப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது”//
வைரமுத்து சிறுகதைகளிலும் திறந்த நிலத்தின் பளீர் வெய்யிலும் உண்டு. மறைபிரதியின் ஊமைவெய்யிலுமுண்டு.
“காயம்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா சாயம்போன வாழ்க்கையிலும் சாரமிருக்கு” என்று கவிஞர் வைரமுத்து திரைப்பாடல் ஒன்றில் குறித்திருப்பார்.காயமடைந்து சாயமிழந்த வாழ்வினூடாகவும் சாரமுள்ளதை சுட்டும் சிறுகதைகள் வைரமுத்து சிறுகதைகள்.
ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரையைமுன்னிட்டு ஆங்காங்கே எழும் விமர்சனங்களின் பின்புலத்தில் வைரமுத்து சிறுகதைகளைத் திறனாய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.
ஜெயமோகனின் விமர்சனம் அவர் வகுத்துக் கொண்டிருக்கிற இலக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில்,அந்தக் கட்டுரையின் தொனி இந்தச் சிறுகதைகளை நிராகரிப்பதில் அவசரம் காட்டுவதையும் சுட்டியாக வேண்டும்.
//”விரிவான ஓர் இலக்கிய விமர்சன அணுகுமுறைக்குக் கூட அவசியமற்ற அளவில் அவை வெளிப்படையாகவே சாதாரணமாக உள்ளன”// என்ற வரியும்,
கட்டுரையின் இறுதி வரியான //”தமிழின் நல்ல சிறுகதைகளை வாசித்த வாசகனுக்கு இவற்றில் அடைய ஏதுமில்லை”// என்ற வரியும் தடாலடியான வரிகளே தவிர அவற்றில் எந்த நியாயமும் இல்லை. இது நேர்மையான விமர்சனமும் இல்லை.
தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்தியதில் என்ன தவறு என்ற தொனியில் இந்தக் கட்டுரையில்வரும் ஆரம்ப வரிகளைப் பாருங்கள்
//”அதில் என்ன பிழை உள்ளது? சிற்றிதழ் சார்ந்த இலக்கியநிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் அதுதானே நிகழ்கிறது?// என்கிறவர் ,அடுத்த வரியில்
//”மிகச் சாதாரணமான சிறுகதைகள்,வைரமுத்துவின் தரத்தைக்கூட எட்டமுடியாத ஃபேஸ்புக் எழுத்துகள்,இலக்கிய முலாம் பூசப்பட்டு இதைப்போலவே விளம்பரப்படுத்தப்படுகின்றன அல்லவா?// என்கிறார்.இந்த வரி,இதிலிருக்கும் உள்குத்து,வெறுப்பின் அரசியலில் விளைந்தது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
வைரமுத்து சிறுகதைகள் தொகுப்பில் உள்ள கலைக்கூறுகள், வாழ்வு பற்றியஅவதானிப்புகள், வாசகனுக்காக அவை அனுமதிக்கும் வெளி ஆகியன குறித்து இந்தத் தொடரில் விரிவாகப் பேச விருப்பம்
(பேசுவோம்)
பொதுவாக தமிழில் எழுதும் பிற (பெரும்பான்மையான வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட) எழுத்தாளர்களின் எழுத்தை மிகவும் சிறுமைப்படுத்தும் தொனி ஜெயமோகன் அவர்களின் கட்டுரைகளில் நிறையவே காணக்கிடைக்கிறது.
உ-ம்.
ஏக் நாத்தின் ஆங்காரம் பற்றிய விமர்சனக்கட்டுரை(http://www.jeyamohan.in/80576#.Vk7lRdIrLIU)யின் பகுதிகள்:
/உண்மையில் தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்பதே இந்நாவலை நம்பகமான சமூகப் பதிவாக ஆக்குகிறது. எத்தனை சின்ன வாழ்க்கை என்னும் பிரமிப்பை உருவாக்குகிறது இது. காலடியில் ஒரு புழு நெளிந்து செல்வதைக் கண்டு ஆம் அதற்கும் ஒரு பயணம் இருக்கிறது என எண்ணுவதைப்போல.// …
//இந்நாவலை ஒரு சம்பிரதாயமான தமிழ் யதார்த்தநாவல் என்றே வகைப்படுத்தமுடியும். இதன் யதார்த்தம் சுவாரசியமானதாக இருந்தாலும் இது நம்மை எங்கும் கூட்டிச்செல்வதில்லை. ஒரு பொதுப்புத்திப்பார்வைக்கு அப்பால் ஆசிரியரின் கலைநோக்கால் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட வாழ்க்கைத்தரிசனங்கள் இல்லை. கவித்துவ வெளிப்பாடுகள் இல்லை. அரிய தருணங்கள்கூட இல்லை.// …
//நாஞ்சில்நாடனின் மொழி கற்பனாவாதம் அற்றது. ஆகவே அது அவரது யதார்த்தவாதத்தில் சரியாகப்பொருந்துகிறது. ஏக்நாத் பல இடங்களில் எளிய கற்பனனாவாத மொழிக்குச் செல்கிறார். அது இவ்வுலகுக்கு அயலாக உள்ளது. ‘ ஒருநொடியில் உயிர் அசைந்து இன்னொருமுறை பார்க்கமாட்டாளா என்றிருக்கும்’ போன்ற வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.//
ஒரே கட்டுரையில் ஏக் நாத், நாஞ்சில் நாடன் இருவரையும் சிறுமைப்படுத்தியதோடு, ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களையே பெரும் கேலி செய்யும் கருத்துக்கள் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை வாசகர் உள்ளங்களில் பதிப்பது போல் உள்ளது.
நமஸ்காரம் !
அவர் அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதவில்லை, அப்படி எழுதியிருந்தால் ஒருவேளை நீங்கள் விருப்பப்பட்டதுபோல் அலங்காரமாக எழுதிருக்கலாம். அளவுக்கு அதிகமாக ஒரு புத்தகத்தை அதன் தகுதிக்கு மீறி விளம்பரப் படுத்தியிருப்பதனால் ஆவேசமாக விமர்சித்திருக்கலாம். அங்கு அவர் நாஞ்சிலை சிறுமைப்படுத்தவில்லை என்றே நான் புரிந்துகொண்டது.
இல்லையெனில் நீங்கள் சொன்னதெல்லாம் தவறு, அதில் நாங்கள் கண்டடைந்த சிறப்பம்சங்கள் இன்னவை என்று நீங்கள் விவாதிக்கலாம். மேலும் அவர் அந்தத் தொகுப்பை மட்டுமே விமர்சித்திருப்பதாகவே தெரிகிறது.
அது ஒரு அகங்காரமாகவே இருக்கலாம் ! ஏனெனில் அவருடைய ஏதேனும் ஒரு சிறுகதையையோ அல்லது நாவலையோ இலக்கியத் தகுதி அற்றது (உண்மையாகவே) என்று யாரும் பொதுவெளியில் விமர்சிக்க தைரியமில்லாததனால் இருக்கலாம்.