“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என அடுக்கிக் கொண்டு போகிறார் ஜெயமோகன். அவையெல்லாம் சிறுகதையின் எத்தனையோ பண்புகளில் சிலமட்டுமே. சிறுகதையில் கதை இருப்பதும் கலையம்சம் இருப்பதும், வாசிப்பவனுக்கு அதிலிருந்து பெற்றுக் கொள்ள சில அம்சங்கள் இருப்பதும் முக்கியம்.வைரமுத்து சிறுகதைகளில் இவையெல்லாம் உண்டு.
குறிப்பிட்ட சில பண்புகள் இருந்தால்தான் அது சிறுகதை என்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டால், அந்தப் பண்புகளைத் தாண்டியும் கதைகள் பிறக்கின்றன,ஈர்க்கின்றன,வாசகனை ஏதோ ஓர் இடத்தில் தொடுகின்றன.
அதேநேரம்,சொல்ல வேண்டியவற்றில் சில சொல்லி, சொல்ல வேண்டியதன் நுட்பமான பகுதியை சொல்லாமல் விடுவதால் ஏற்படும் வெளி இந்தக் கதைகளில் பலவற்றில் காணக் கிடைக்கின்றது என்பது வேறு விஷயம்.
“தூரத்து உறவு” என்னும் கதையில், அமெரிக்காவில் வாழ்கிற சிவராமன் என்னும் ஷிவ்,தன் தந்தையின் மரணத்துக்காக தாயகம் வருகிறான்.அமெரிக்காவிலிருந்தே அவனை இயக்கும் அவன் மனைவி கௌசல்யாஎனும் கௌ,வழிகாட்டுதலின்படி வீட்டை விற்பதற்காக மூன்று மாதங்கள் தங்கியிருந்து, விற்கவும் செய்து, தாயாரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு அமெரிக்கா திரும்புகிறான்.
அவன் அமெரிக்கா வந்து சேரும் முன் அவனுடைய தாய் போய் சேர்ந்து விடுகிறாள்.ஆனால் ஷிவ் வந்ததுமே கௌ விஷயத்தை சொல்லவில்லை.
ஜெட் லாக் மூட் அவுட் இரண்டையும் கருதி அமைதி காக்கிறாள். மீண்டும் கணவன் தாயகம் திரும்பாமல் தடுத்தாட் கொள்கிறாள்.
இருந்த இடத்திலிருந்தே ஏற்பாடு செய்து,மென்ஹாட்டனில் இருந்தே பெசன்ட் நகர் மின்மயானத்தில் எரியூட்டலை ஸ்கைப்பில் பார்க்கிறார்கள். கதையின் கடைசிவரி, “ஆறிப் போயிடும்; டீ சாப்பிடுங்க” என்றாள் கௌ. தன் கோப்பையை உறிஞ்சிக் கொண்டே”
தந்தையின் மரணத்திற்கழாத ஷிவ் தாயின் மரணத்தில் தளர்வதும் கௌ இரண்டாம் மரணத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாததும் வாசகனுக்கான வெளியை தரவே செய்கின்றன. பெண்மனம் ஆண்மனம் செயல்படும் விதம் குறித்தெல்லாம் தொடர் சிந்தனையை இந்தக் கதை தூண்டி விடுகிறது.
எளிய மனிதர்கள் மேல் வாழ்க்கை எதிர்பாராத சம்பவங்களை சுமத்துகையில் அவர்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதங்கள் அலாதியானவை. மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் பலவானையும் பலவானுக்குள் புதைந்து கிடக்கும் குழந்தையையும் அத்தகைய தருணங்களே வெளிக்கொணர்கின்றன.ஏறக்குறைய ஒரே மாதிரியான சூழலை “இறந்த காலங்கள் இறந்தே போகட்டும்” கதையில் வருகிற கோட்டைச்சாமியும்,பொய்யெல்லாம் பொய்யல்ல கதையில் வருகிற குணாவும் எடுக்கிறார்கள்.இந்த இரண்டு பாத்திரங்களும் வாழும் சூழல்கள் முற்றிலும் வேறானவை.
முன்னவன் முரடன். பின்னவன் மருத்துவம்படித்த,மனமுதிர்ச்சி கொண்ட இளைஞன். தன் வாழ்க்கைத் துணையின் வாழ்வில் முன்னர் நிகழ்ந்த பாலியல் விபத்தின் பாதிப்பை சீர்செய்ய ஏற்க குணாவுக்கு ஒரு முழுநாள் தேவைப்படுகிறது.கோட்டைச்சாமிக்கு ஒரு நிமிடம் கூட ஆகவில்லை.இத்தனைக்கும் கோட்டைச்சாமி அரிவாள் எடுக்கும் ஆவேசக்காரன்.குணா ஃபிராய்டையும் மார்க்ஸையும் அலசி ஆராய்கிறவன்.
குணாவுக்கு மோகனாவை சரிசெய்ய பொய்களும் சாமர்த்தியங்களும் தேவைப்படுகின்றன. கோட்டைச்சாமியோஅதிலும் முரட்டுப் பாசத்தைக் காட்டி செல்லப்பேச்சியை அப்படியே ஏற்றுக் கொள்கிறான்.இவையெல்லாம் போதிய வெளியைத் தந்து வாசகனை இட்டு நிரப்ப அனுமதிக்கும் இடங்கள்.
மதினியைப் பெண்கேட்கப் போன இடத்தில் கனவு நொறுங்கி அண்ணனின் மகனை அழைத்துக் கொண்டு திரும்பும் கருவாயன் என்னும் முதிரா இளைஞனின் அசட்டுத்தனங்களையெல்லாம் கிழித்துக் கொண்டு விசுவரூபம் எடுக்கும் தந்தைமை “யாருக்கும் வாழ்க்கை பக்கமில்லை”என்னும் சிறுகதையில் துல்லியமாக வெளிப்படுகிறது. மனதுக்குள் எங்கெங்கோ ஒளிந்திருக்கும் பாசமும் பெருந்தன்மையும் எதிர்பாராத கணமொன்றில் ஒன்று திரண்டு வெளிப்படும் உன்னதத்தை உணர்த்தும் கதை அது.
எனவே வைரமுத்து சிறுகதைகளை,”வழக்கமான குணங்கள் கொண்ட வரையறுக்கப்பட்ட கதைமாந்தர்களை நேரடியாக அறிமுகம் செய்து,அவற்றைஒட்டி நிகழ்ச்சிகளை சமைத்து” என்றெல்லாம் சொல்லி ஜெயமோகன் ஓரங்கட்ட முற்படுவது நியாயமில்லாத அணுகுமுறை.கதை மாந்தர்கள் தனித்தன்மை கொண்டவர்களாய்,ஏதேனும் ஓர் இயல்பின் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்களாய் துலங்குகிறார்கள்.
(பேசுவோம்)