ஓர் அரசன் தன் குடிகளை சரியாகப் பராமரித்து காப்பாற்றினால் அவர் குடிமக்களுக்கு கடவுள் போன்றவர் என்பதை திருவள்ளுவர் முன்மொழிந்தார்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையென்று வைக்கப்படும்” என்கிறார். இனியன செய்தால் இதய தெய்வமென்று நேரடிப் பொருள் எடுக்க வாய்ப்பான திருக்குறள். பொதுவாகவே ஆட்சியாளர்கள் ஆண்டவனின் அம்சமாகக் காணப்படுவது வழக்கம்.
“திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” என்று ஆழ்வார் பாடுகிறார். இது அரசனை மகிழ்விக்கும் கருதுகோள் அல்ல.அரசனின் கடமையை உணர்த்தும் அணுகுமுறை. எத்தனையோ விதமான மனிதர்களை அவர்களின் தன்மைக்கேற்ப புரிந்து கொள்வதும் பரிந்து நடப்பதும் அரசனின் கடமை.
தசரதன் மறைவுச் செய்தி கேட்டு “நானிலத்தோர் தந்தாய்” என்று உருகுகிறான் இராமன்.. குடிமக்கள் உயிர்கள் என்றால் உயிர்கள் உறையும் உடலாக தசரதன் இருந்ததாய் கம்பன் சொல்கிறான்.
” உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”.
இதற்கு இன்னொரு நயமும் சொல்லலாம். ஒரு தாயின் கருப்பை கருவைத் தாங்க எல்லா வகையிலும் தன்னை தகுதிப்படுத்திக் கொள்கிறது.அதுபோல் தன்னைச் சார்ந்து வாழும் குடிமக்களை தாங்குபவனாக அரசன் இருக்கிறான்.
திருவுடைமன்னர்-திருமால் என்னும் வழக்கம்,திருமாலும் காத்தல் கடவுள் அரசனும் தன் குடிகளைக் காக்கிறான் என்னும் பொருத்தம் கருதி வந்திருக்குமோ என்ற கேள்வியும் எழக்கூடும். திருவள்ளுவர் காட்டும் இறை திருமாலா என்பாரும் உளர்.ஆனால் இறைமைப் பண்புக்கும் தலைமைப் பண்புக்கும் இருக்கும் ஒத்த தன்மையை சைவமும் பேசுகிறது
.இருபதாம் நூற்றாண்டில் அரசியலில் புழக்கத்திற்கு வந்தசொல் “மாண்புமிகு”. எல்லா உயிர்க்கும் பரிகிற பண்பாகிய மாண்பே இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர்.அரசனிடம் இருக்கும் தெய்வாம்சம் உயிர்கள் மீதான பரிவு.அதுவே மன்னனின் மாண்பு என்று பொருள் கொள்ளும் விதமாய் திருஅம்மானையில் பாடுகிறார்.
“விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்”
ஆட்சியாளர்களிடம் அருளாளர்கள் எதிர்பார்க்கும் மாண்பு, அன்பும் அருளும் என்பது இதன்மூலம் நமக்குத் தெரிய வருகிறது