ஒதுங்கிய கூரை ஒழுகலாச்சு
ஓலைகளின் மேல் தங்கப் பூச்சு
பதுங்கிய பூனை வெளிவந்தாச்சு
புழுக்களிடத்தில் புலிக்கென்ன பேச்சு
தூண்டில் முனையில் தூங்கும் முதலை
நீண்ட நதிமிசை நெருப்புச் சுடலை
தீண்டிய கிளர்ச்சியில் தவிக்கும் விடலை
தாண்ட வேண்டும் தன்னலக் கடலை
கைப்பிடி அவலில் குசேலனின் அன்பு
பொய்யாய் இருந்தால் பெறுவனோ பங்கு
எய்தவன் கைகளில் எத்தனை அம்பு
எல்லாம் தெரியும் ; எதற்கு வம்பு
நிலைக்கண்ணாடி நீட்டுது காலம்
நினைப்பும் மிதப்பும் நபும்சகக் கோலம்
விலைக்குக் கிடைக்குது விளம்பர ஜாலம்
விக்குது தொண்டையில் விழுங்கியஆலம்
போட்ட பந்தல் பிரிக்கவும் இல்லை
போலி அழுகை முடிக்கவும் இல்லை
கேட்டது கிடைத்தபின் வேறென்ன தொல்லை
கீழவர் ஆசைக்குக் கடலா எல்லை
பொய்வலி தருமோ பிள்ளைப் பேறு
பொட்டில் அடித்துச் சொல்பவர் யாரு
அய்யா உமக்கு ஆயுசு நூறு
அதுகிடக் கட்டும் ஆவதைப் பாரு
கைப்பிடி அவலில் குசேலனின் அன்பு
பொய்யாய் இருந்தால் பெறுவனோ பங்கு
எய்தவன் கைகளில் எத்தனை அம்பு
எல்லாம் தெரியும்; எதற்கு வம்பு
அருமை வரிகள்..
வாழ்த்துக்கள் கவியே!